Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

காதணி விழாவில் 'பசுமை விகடன்'!

‘யான் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்...’ என்று உயரிய எண்ணம் படைத்தவர்களாக இருந்து வருகிறார்கள் 'பசுமை விகடன்' வாசகர்கள். இந்த மண்ணையும், மக்களையும் நேசிப்பவர்களாக இருப்பதோடு, மற்றவர்களும் பயன்பட வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு இருக்கிறார்கள். இதற்காக பசுமை விகடனை பரவலாக கொண்டு செல்லும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள உஞ்சியவிடுதியைச் சேர்ந்தவர்கள் கோவிந்தராஜன்-சித்ராதேவி தம்பதியர். இவர்களின் புதல்வர்களான பிரேம்குமார், ரித்திகா ஆகியோரின் காதணி விழா கடந்த 24-ம் தேதி ஊரணிபுரத்தில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு வருகை புரிந்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அன்பளிப்பாக பசுமை விகடனை வழங்கி சிறப்பு செய்திருக்கிறார்கள்.

இதோடு, விழாவில் இவர்கள் கொடுத்து துண்டு பிரசுரம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. அதில், 'நாங்கள் பசுமை விகடன் விளம்பரதார்கள் அல்ல. நாங்களும், நீங்களும் இயற்கையோடு இணைய வேண்டும், என்பதுதான் எங்கள் நோக்கம்' என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

இதுகுறித்து மகிழ்ச்சியோடு பேசிய கோவிந்தராஜன், ‘‘சிங்கப்பூர்ல இருக்குற உறவினர்களான சரவணன், சுவாமிநாதன், தமிழ்நாட்டுல இருக்கிற ராஜ்குமார், சுரேஷ், சக்கரவர்த்தி, சசிக்குமார் இவங்கதான் விழாவுல பசுமை விகடனை கொடுக்க ஏற்பாடு செஞ்சாங்க. இவங்க எல்லாருமே இளைஞர்கள். சினிமா... கினிமானு ஜாலியா இருக்க வேண்டிய வயசுல, இயற்கை விவசாயத்தையும் பசுமை விகடனையும் எல்லார்கிட்டயும் கொண்டு போக, முயற்சிகளை எடுத்துட்டு வர்றாங்க.

சரவணன் எப்பொழுதுமே பசுமை விகடன் பத்தியே தான் பேசிக்கிட்டு இருப்பார். சிங்கப்பூர்ல இருந்து பேசும்போது கூட பசுமை விகடன் கட்டுரைகளை பத்திதான் விலாவாரியா சொல்லிக்கிட்டு இருப்பார். இப்ப எனக்கும் இயற்கை விவசாயத்துல ஆர்வம் வந்துடுச்சு. பாரம்பரிய ஆடு, மாடுகள் வளர்ப்புலயும் கூட தீவிரம் காட்டப்போறேன். இந்த காதணி விழாவுக்கு வந்திருந்தவங்கள்ல பல பேர், பசுமை விகடனை பார்த்து இன்ப அதிர்ச்சி அடைஞ்சாங்க. இது எனக்கு ரொம்ப மனநிறைவை கொடுத்திருக்கு’’ என்றார்.

சிங்கப்பூரில் இருக்கும் சரவணனிடம் ஃபோனில் பேசினோம். ‘‘எனக்கு சொந்த ஊர் பட்டுக்கோட்டை பக்கத்துல இருக்குற கிருஷ்ணாபுரம். கடந்த 8 ஆண்டுகளா சிங்கப்பூர்ல டிரைவரா வேலை பார்த்துக்கிட்டு இருக்குறேன். நாலு வருஷத்துக்கு முன்னர் நண்பர் ஒருத்தர் பசுமை விகடனை அறிமுகப்படுத்தினார். தமிழ்நாட்டுல பசுமை விகடன் வெளிவந்த அடுத்த ஓரிரு நாட்கள்லயே சிங்கப்பூர் கடைகள்லயும் கிடைச்சிடும். ரெண்டு மணிநேரத்துலயே ஒட்டுமொத்த புத்தகத்தையுமே படிச்சி முடிச்சிடுவேன்.

இங்கவுள்ள பலரையும் தீவிர வாசகரா மாத்திட்டுயிருக்கேன். வேளாண் வழிகாட்டி தமிழ்நாட்டுல வெளியான அடுத்த மூணு நாட்கள்லயே கைக்கு வந்து சேர்ந்துடுச்சு. அங்கயிருந்து சிங்கப்பூர் வந்த என்னோட சொந்தகாரங்ககிட்ட வாங்கிக்கிட்டு வர சொன்னேன். என்னோட சொந்த கிராமத்துல மூணு ஏக்கர் நிலம் இருக்கு. ஆனா, எங்கப்பாவுக்கு கண் தெரியாம போனதால, அந்த நிலம் சும்மா கிடக்கு. இன்னும் இரண்டு ஆண்டுகள்ல இயற்கை விவசாயம் செய்யலாம்னு இருக்கேன்’’ என உற்சாகத்தோடு பேசினார் சரவணன்.

கு. ராமகிருஷ்ணன்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ