Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'சென்னை ஐ.ஐ.டி. மாணவர் அமைப்பு தேச துரோக அமைப்பா?'

மது நாட்டில் எப்போதுமே நன்மை செய்பவர்களை மற்றும் செய்ய வருபவர்களை அவ்வளவு எளிதாக மக்களுக்கு அதிகாரிகளோ, அரசாங்கமோ செய்ய விடுவதில்லை. அதை மக்களும் எளிதாக புரிந்து கொள்ளவும் மாட்டார்கள். அக்கருத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த 'கிரீன்பீஸ்' என்ற சமூக அமைப்பினை சேர்ந்த வங்கி கணக்கு முடக்கப்பட்டது.

கிரீன்பீஸ் அமைப்பு மக்களிடம், மரபணுமாற்ற விதைகள் உபயோகிக்க வேண்டாம். இயற்கை விவசாயம், இயற்கை உரங்கள், மண்வளம் பாதுகாத்தல் போன்ற பணிகளை செய்து வந்தது. இது மத்திய அரசுக்கு பிடிக்கவில்லையோ? என்னவோ? 'எரியிறதை பிடுங்கினால், கொதிப்பது தானாக அடங்கும்' என்ற சொல்லின் படி அமைப்பின் வெளிநாட்டு உதவி பெறும் வங்கி கணக்குகள் முடிக்கப்பட்டு விட்டது. அதனை எதிர்த்து குரல் கொடுக்க சமூக அமைப்பினர் பலரும் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். சென்னை, இக்சா மையத்தில் கருத்து சுதந்திரம் பற்றி கருத்தரங்கு நடைபெற்றது.

உணவு பாதுகாப்பு கூட்டமைப்பைச் சேர்ந்த அனந்து முதலில் பேசியபோது, ''கிரீன்பீஸ் அமைப்பானது விவசாயத்தில் முக்கியப்பங்கை ஆற்றி வருகிறது. குறிப்பாக கார்ப்பரேட்டுகளுக்கு எதிராக மரபணு மாற்ற விதைகள் வேண்டாம். செயற்கை ரசாயண உரம் வேண்டாம் என மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இந்த என்.ஜி.ஓ.க்கள் இவ்வாறு கருத்துக்களை பரப்புவது பிடிக்காத அரசோ அவர்களுடைய வங்கி கணக்கை முடக்கியுள்ளனர். இப்படி தான் பேசும் பேச்சுக்கும் பரப்பும் கருத்துக்கும் இடையே செய்த தடையை எதிர்த்து தான் இந்த கூட்டம் நடைபெறுகிறது'' என்றார்.

ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு பேசுகையில், ''கருத்து சுதந்திரம் கண்டிப்பாக தேவை. நம் அரசியலமைப்பு சட்டமும் அதைத்தான் சொல்கிறது. எந்த ஒரு தனி மனிதனுக்கும் தனது கருத்துக்களை தெரிவிக்கும் அதிகாரம் உண்டு. தவறான கருத்தினைதான் பரப்ப கூடாது. நல்ல கருத்துக்களை யார் வேண்டுமானாலும் சொல்லலாம். ஆகவே ஒவ்வொருவருக்கும் கருத்துரிமை என்பது மிக முக்கியம். மத்தியில் ஆளும் அரசு ஒரு வருடம் ஆட்சி முடிந்து விட்டது. ஆனால், அடைந்த சாதனை மற்றும் வேதனைகள் என்னென்ன தெரியுமா? கருத்தினை யாராவது எடுத்துச் சொன்னால் கூட குற்றமாகும் என மத்திய அரசு சமீபத்தில் அராஜகத்தினை கையில் எடுத்துள்ளது.

மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் சமூக அமைப்புகளையும், அவர்களின் வெளிநாட்டு உதவி பெறும் வங்கிகளின் கணக்குகளையும் முடக்கி உள்ளது. மாநிலத்திலேயே மிக அதிக நீதி உதவி பெறும் கட்சி பாரதிய ஜனதா கட்சி தான். இன்றைக்கு தென்னிந்திய நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கு. வரக்கூடிய தொகை 2% மட்டுமே வருகிறது. தமிழ்நாட்டிலேயே 95% கருத்து சுதந்திரத்தை முடக்கிட்டாங்க. இதெல்லாம் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் ஆகியவற்றை தடை செய்ய இது முன் மாதிரியாக உள்ளன. அதேபோல ஐ.ஐ.டி.யில் இருக்குற மாணவ அமைப்பு தடை போன்ற நிகழ்வுகளும் நடைபெறுகிறது. தடை செய்ய அவர்களென்ன தேச துரோக அமைப்பா. இதற்கு ஒரு முடிவுகட்ட நிரந்தர கருத்துரிமை இயக்கம் தொடர்ந்து செயல்பட வேண்டும். நிரந்தர பிரசாரமாக சென்னை மற்றும் தமிழ்நாடு முழுவதும் எடுத்துச் செல்ல வேண்டும்'' என சொன்னார்.

ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் தெய்வசகாயம், ''கடந்த நாற்பது வருடத்திற்கு முன்னால் இதே ஜூன் மாதத்தில் 'சப்கிசாத்', 'சப்கிவிகாஸ்' அதாவது மினிமம் அரசாங்கம், மேக்சிமம் அரசாங்கம் அப்போதே இதேபோல நடந்தது. ஆனால், அப்போதய அரசு எல்லாத்தையும் வெளிப்படையாக செஞ்சாங்க. இப்போ எல்லாத்தையும் மறைமுகமாக செய்றாங்க. என்.ஜி.ஓ. அமைப்புகள் எல்லாம் ஏதோ தேச துரோகம் செய்தது போல் அவர்களின் கருத்து பரப்பும் சுதந்திரம். பறிக்கப்பட்டுள்ளது. நாங்க சொல்றதுதான் சட்டம். நாங்க சொல்றதுதான் முன்னேற்றம். அரசு, சமூக அமைப்பு மக்கள் இவை மூன்றும் சேர்ந்து செஞ்சு அடையிறதுக்கு பெயர்தான் முழுமையான ஆட்சியின் வளர்ச்சி. ஆனால், அரசோ கார்ப்பரேட்டுகளோடு சேர்ந்து, மக்களை ஒதுக்கியும் வைத்து இருக்கிறது. இதனை எடுத்துச் சொல்லும் சமூக அமைப்புகள் மீது கருத்துரிமை தடை செய்யப்படுகிறது. இப்போதைய கேள்விக்குறி ஜனநாயகமா? பணநாயகமா?'' என்ற கேள்வியை முன் வைத்து முடித்தார்.

எழுத்தாளர் ஞானி பேசும்போது, ''இந்த கருத்துரிமை பரப்புக்கு தடையை மத்திய அரசின் மறைமுக அடக்கு முறையாக பார்க்கிறேன். நாளை பத்திரிகைகள், ஊடகங்கள் என உங்கள் மீது கூட இந்த அடக்குமுறை செய்யப்படலாம். அப்போதைய ஆட்சியில் வளைந்து கொடுகும் நிலை இருந்தது. ஆனால், இப்போதய ஆட்சியில் தவழும் நிலைதான் உள்ளது. என்.ஜி.ஓ.க்கள் மேலேயே அடக்குமுறை செய்கிறார்கள்.

கூடங்குளம், மீத்தேன், மணல் கொள்ளை முதலிய பிரச்னைகளை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பது என்.ஜி.ஓ.க்கள் மற்றும் சமூக அமைப்புகள் மட்டுமே. இவர்கள் தவறான கருத்தினை பரப்புகிறார்கள் என மோடி அரசு வெளிநாட்டு உதவி பெறும் வங்கி கணக்கை முடக்கி வஞ்சிக்கிறது. பி.டி.காட்டன், மரபணுமாற்ற பயிர்கள் விழிப்புணர்வு தரும் தொண்டு நிறுவனங்களை முடக்கினால்தான் கார்ப்பரேட்டை வளர்க்க முடியும் என்ற மோடியின் கொள்கை தெளிவாக தெரிகிறது. எதிர்கட்சிகளும் அழுத்தமான எதிர்ப்பை பதிவு செய்ய முடிவதில்லை'' என்றார்.

இயற்கை விவசாய குழு தலைவர் அறச்சலூர் செல்வம் பேசும்போது, ''தொண்டு நிறுவனத்தின் மூலமே அடிப்படை விழிப்புணர்வானது கடந்த முப்பது ஆண்டுகளாக மக்களிடம் எடுத்துச்சென்று கொண்டு உள்ளது. அரசு ஒரு பைசா கூட செலவிடுவதில்லை. அப்படியே செஞ்சாலும் சரியா போய் சேர மாட்டேங்குது. குழந்தை தொழிலாளர் பிரச்னை, கல்வி முன்னேற்றம், பெண்கள் பாதுகாப்பு வாழ்க்கை ஆகியவற்றை தொண்டு நிறுவனமே செய்துள்ளது.

அடித்தட்டு மக்களின் பிரச்னைகளை கண்டு கொள்வதில் என்.ஜி.ஓ.வால் மட்டுமே கவனம் செலுத்த முடியும். கூடங்குளம், மீத்தேன் பிரச்னைகள் இயற்கை பாதுகாப்பு, மரபணுமாற்ற விதைகள் என எதுவாக இருந்தால் என்.ஜி.ஓ.வின் பங்கு அதிகமாக இருக்கும். இன்று அனைவரும் நஞ்சை உண்டு கொண்டு இருக்கிறோம். அதனை உண்ண வேண்டும். இயற்கை முறையில் விளைவித்து உண்ணுங்கள் என கூறும் அவர்கள் தேச துரோகிகளா? அரசாங்கம் சொல்வதை அனைவரும் ஏற்று நடக்க வேண்டுமாம். இது அடக்கு முறையாக தெரியவில்லை. மோடியின் நிலைப்பாடு கார்ப்பரேட் வேண்டும். இதனை எப்படி காப்பாற்ற போகிறோம் என தெரியவில்லை?'' என்றார்.

இறுதியாக பேசிய பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தரராஜன், ''அரசியலமைப்புச் சட்டப்படி எந்த ஒரு மனிதனுக்கும் கருத்து தெரிவிக்க உரிமை உண்டு. கடந்த மாதம் கேரள உயர்நீதி மன்ற தீர்ப்பில் மாவோயிஸ்ட் நிலைப்பாடு இருப்பது குற்றமல்ல. செயல்பாடு தவறாக இருந்தால் தான் குற்றம் என சொல்லியிருந்தது. அரசு தவறு செய்வது குற்றமில்லை. அதனை எடுத்துச் செல்லும் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் செய்வது குற்றம் இது எந்த அடிப்படையில் நியாயம். தொலைபேசியில் பேசும் போது கருத்து சுதந்திரம் கிடையாது. இதனை அப்படியே விட்டால் 'அரசின் கருத்துக்கு அனைவரும் அடிமை' என்ற நிலை வரும். இதை எதிர்க்கும் செயலாகவே இந்த கூட்டம் அமைக்கப்பட்டுள்ளது'' என்றார்.

முடிவில் அரசு இப்படியே அடக்குமுறை செய்து கொண்டிருந்தால் எதிர்காலத்தில் 'பிரெஞ்சு புரட்சி' நடைபெற கூட வாய்ப்பிருக்கிறது. மக்களாகிய ஒவ்வொருவரும் தங்கள் கருத்தினை பதிவு செய்ய முன்வர வேண்டும் என தங்கள் கோரிக்கையை முன் வைத்தனர்.

- துரை.நாகராஜன்

படங்கள்: வீ.நாகமணி

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close