Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விருதுகளை குவிக்கும் 60 வயது ராசாத்தி!

"சாதனை வயதில் இல்லை, மனதில்தான் இருக்கிறது!’’ என்கிறார் இருதய மேரி. தஞ்சையைச் சேர்ந்த ஒய்வு பெற்ற ஆசிரியரான இவருக்கு வயது 60. இந்த வயதிலும் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், ட்ரிபிள் ஜம்ப், ரிலே என 60-65 வயதுக்கானோர் விளையாட்டில் ஆச்சர்யப்படுத்தும் விளையாட்டு வீராங்கனை!

‘‘ஸ்கூல் படிக்கும்போது ஆரம்பமான என் விளையாட்டுப் பயணம் இன்று வரை தொடர்வதற்கு என் குடும்பம்தான் காரணம்!’’ -  உற்சாகமாக துவங்கினார் இருதய மேரி.

‘‘ஸ்போர்ட்ஸில் பள்ளியில் பரிசுகள் குவிச்சு கல்லூரியில் சேர்ந்தப்போ, இன்டர் யுனிவர்சிட்டி மீட்ல  தொடர்ந்து நாலு வருஷம் தங்கம் வாங்கினேன். கல்யாணம், வேலைனு வாழ்க்கை மாறினப்போ, என் விளையாட்டுக் கனவை முடிச்சுக்க நினைச்சேன். ஆனா என் மாமியார் அடைக்கல மேரி, என் திறமையை அங்ககீகரிச்சு எனக்கு மூன்று பிள்ளைகள் பிறந்த நிலையிலும், ‘வீட்டையும் பிள்ளைகளையும் நான் பார்த்துக்குறேன். நீ பிராக்டீஸ் பண்ணு, போட்டிகளுக்குப் போ!’னு எனக்கு முழு ஆதரவா இருந்தாங்க.

இன்னைக்கு 93 வயசாகும் அவங்க, எல்லார்கிட்டயும் என்னைப் பத்தி, நான் ஜெயிச்சுட்டு வர்ற போட்டிகள், பரிசுகள் பத்தியெல்லாம் பெருமையா பேசுறது நான் செய்த பாக்கியம். என் கணவர் ஜோசப் பாண்டியன், என்னைக்காச்சும் ஒருநாள் நான் பிராக்டீஸ் போகலைன்னாலும், ‘கிளம்பு கிளம்பு’னு கூட்டிட்டுப் போய்டுவார்.

என் மூணு பிள்ளைங்களுக்கும் நான் கலந்துகொள்கிற போட்டியில் எல்லாம் கண்டிப்பா பிரைஸ் வாங்கிட்டு வந்தே ஆகணும்!’’ என்று வாய்கொள்ளாமல் சிரிக்கிறார் இருதயா மேரி.

வருடா வருடம் நடக்கும் தமிழ்நாடு மாஸ்டர்ஸ் அத்லெட் மீட் மற்றும் நேஷனல் மாஸ்டர்ஸ் அத்லெட்  மீட்டிலும் பரிசுகள் இவருக்குதான்...

கடந்த ஆண்டு 2014 டிசம்பரில் காரைக்குடியில் நடைபெற்ற தமிழ்நாடு மாஸ்டர்ஸ் அத்லெட் மீட்டில் 100 மீ, 400 மீ, 800 மீ ஆகிய போட்டிகளில் கலந்து கொண்டு மூன்றிலும் தங்கப்பதக்கம் பெற்றவர். 2004ல் தாய்லாந் தில் நடைபெற்ற ரிலேவில் இரண்டு வெள்ளிப் பதக்கங்கள் வென்றுள்ளார்.

மாநில அளவிலான போட்டிகள் பலவற்றில் புத்துணர்ச்சியுடன் பங்கேற்று வரும் இருதய மேரி, ‘‘30 வயசா னாலே பெண்கள் சோர்ந்துடுறாங்க. சாதிக்க ஆர்வம் இருந்தா, வயசு கணக்கே இல்ல. என்னைப் பாருங்க... பேரக் குழந்தைகள் பிறந்ததுக்கு அப்புறமும் டிராக்ல ஓடிட்டு இருக்கேன்!’’-தடதடவென பயிற்சியை தொடர்கிறார் இருதய மேரி!

-ஆ.மேரி செல்வ இஸ்ரேலியா ( மாணவ பத்திரிகையாளர்)
படங்கள்: குணசீலன்

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ