Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மனசாட்சியை அடகு வைத்த வங்கி அதிகாரிகள்!

‘ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி’ என்பார்களே அது யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ விவசாயிகளுக்கு மிகச் சரியாகப் பொருந்தும். வியர்வை தண்ணீரை பாசனமாக்கி, வியர்வையை உப்பை உரமாக்கி, உணவுப் பொருளை உற்பத்தி செய்து கொடுக்கும் விவசாயிகளுக்கு இந்த தேசம் கொடுக்கும் நன்றிக்கடன் விவசாய தற்கொலை.

வலுத்தவனுக்கு வால் பிடிக்கும் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் உழவனை உதாசீனப்படுத்துவதையே வாடிக்கையாக வைத்துள்ளார்கள். மல்லையாவுக்கு 1,600 கோடி ரூபாயை கடனாக கொடுத்துவிட்டு, அதை திருப்பி வசூல் செய்ய துப்பு இல்லாமல், வாராக் கடனில் எழுதி கணக்கை முடிக்க நினைக்கிறார்கள் வங்கி அதிகாரிகள். விவசாயிகளை மட்டும் விரட்டி விரட்டி கடன் வசூல் செய்கிறார்கள். விவசாயிகளிடம் கடனை வசூல் செய்ய வேண்டாம் எனச் சொல்லவில்லை. விவசாயிகளிடம் காட்டும் கெடுபிடி மல்லையாக்களிடம் மட்டும் மண்டியிடுவது ஏன்?

ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் வங்கிகளில் பெறப்பட்ட விவசாய கடன்களை தள்ளுபடி செய்வோம் என அங்கு அரசு அமைத்துள்ள கட்சிகள் தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தன. அதை நம்பி, விவசாயிகளும் கடனை கட்டாமல் இருந்தனர். ஆனால், அரசு அமைத்த பின்பு, முழுக்கடனையும் ரத்து செய்யாமல், 5 ஆண்டுகளில் படிப்படியாக ரத்து செய்வதாக அறிவித்தன. முதல் கட்டமாக தெலங்கானாவில் 17 ஆயிரம் கோடி விவசாய கடன் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு தெலங்கானா மாநிலம், மகபூப் நகர் மாவட்டம், ஆத்மகூர் வங்கி அதிகாரிகள் அப்பகுதியில் கடன் வாங்கிய விவசாயிகளின் வீடுகளுக்குச் சென்று கடனை திருப்பி செலுத்துமாறு கேட்டுள்ளனர். விவசாயிகள் 'உடனடியாக தங்களால் தர இயலாது. கால அவகாசம் கொடுங்கள்' என கேட்டுள்ளனர். ஆனால், அதை காதில் வாங்கிக்கொள்ளாத அதிகாரிகள், விவசாயிகளின் வீடுகளுக்குள் புகுந்து, தொலைக்காட்சி உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்ததுடன், வீட்டு கதவுகளையும் பெயர்த்து எடுத்துக் கொண்டு சென்றுள்ளனர். இதைத் தொடர்ந்து அப்பகுதி விவசாயிகள், தங்கள் வீடுகளில் அத்துமீறி நுழைந்த வங்கி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

தொழிலதிபர்களிடம் கொடுத்த கடனை வாங்க, கால் கடுக்க காத்திருந்து, முடியாமல் அலுத்துப் போய் திரும்பும் வங்கி அதிகாரிகள், தங்கள் வீரத்தை விவசாயிகளிடம் காட்டுகின்றனர். பணக்காரனின் ஜாக்கி ஜட்டி கிடைக்காததால், விவசாயிகளின் ஒட்டு கோவணத்தை உருவுகின்றனர்.

வங்கி அதிகாரிகளே... நீங்கள் உண்ணும் உணவு தொழிலதிபர்கள் உற்பத்தி செய்ததல்ல... விவசாயிகளின் வியர்வை என்பதை மனதில் இருத்திக் கொள்ளுங்கள். இனியாவது பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுங்கள். வங்கியில் அடகு வைத்த உங்கள் மனசாட்சியை உடனடியாக மீட்கும் வழியை பாருங்கள்.

ஆர்.குமரேசன்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ