Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சுட்டி வயது... பெரிய மனது!

நாம் தெருவில் செல்லும்போது சாலையோரத்தில் வசதி இல்லாதவர்கள் இருப்பதைப் பார்த்திருப்போம். அவர்களின் பசியைப் போக்க நம்மாலானது எட்டணா அல்லது ஒரு ரூபாயோ போட்டுவிட்டு அத்தோடு திரும்பிப் பார்க்காமல் நடையைக் கட்டுவோம்.

ஆனால், அமெரிக்காவின் வாஷிங்டன் நகரை சேர்ந்த ஹெய்லி ஃபோர்ட் (Hailey Ford) எனும் ஒன்பது வயது சிறுமி அப்படிப்பட்டவள் இல்லை. ஒருநாள் தன் பெற்றோருடன் ரோட்டில் நடந்து சென்றுள்ளார். அப்போது ரோட்டோரத்தில் ஒரு ஏழை முதியவரைக் கண்டதும் அவருக்கு என்ன உதவி செய்யலாம்? என்று கேட்டுள்ளார். உடனே அருகில் உள்ள ஒரு கடையில் உணவை வாங்கி அந்த முதியவருக்குத் தந்துள்ளனர். உணவை வாங்கிக் கொண்ட அந்த ஏழை முதியவரின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியைக் கண்ட ஹெய்லி, அது முதல் கொண்டு ஏழைகளுக்காக உதவிடவேண்டும் அதற்கு என்ன செய்யவேண்டும் யோசித்தார். அப்போது ஹெய்டிக்கு வயது ஐந்து.

அதன் பின்னர் பெற்றோரின் உதவியுடன் தனது ஆறாவது வயதிலிருந்து வீட்டுத் தோட்டத்தில் காய்கறிகள், பழங்களை பயிரிடத் தொடங்கினார். கடந்த மூன்று ஆண்டுகளாகத் தன் வீட்டுத் தோட்டத்தில் விளைந்த காய்கறி, பழ வகைகளை வாஷிங்டனில் இருக்கும் ஏழைகளுக்கான உணவு வங்கிக்கு தானமாக வழங்கி வர ஆரம்பித்தார்.

இதையடுத்து, ரோட்டோரத்தில் வசிக்க வீடு இல்லாதவர்களுக்கு உதவ முன்வந்துள்ளார். இதில் முதற்கட்டமாக உள்ளூர் வாசிகளிடம் பணம் வசூல் செய்து தானாகவே மர வீடு ஒன்றை தயார் செய்து வீடற்று தவிக்கும் எட்வர்ட் என்பவருக்கு பரிசாக கொடுத்துள்ளார். மேலும் நிதி திரட்டி, வீடு இல்லாத பலருக்கு மர வீடுகளை தயார் செய்து தருவதே எனது அடுத்த லட்சியம் என்று புன்னகையுடன் கூறுகிறார் ஹெய்லி ஃபேர்ட்.

-என்.மல்லிகார்ஜுனா

எடிட்டர் சாய்ஸ்