Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'நாங்கள் மாற்றுத்திறனாளிகள் இல்லை, உலகத்தை மாற்றப்போகும் திறனாளிகள்!’

த்யா. எட்டாம் வகுப்பு வரையே படித்த மாற்றுத் திறனாளி. கைகளால் பேனாவே பிடிக்க முடியாதபோதும், தன் வாழ்க்கையில் நடந்த இத்தனை வருட வலி மற்றும் சமூகம் தன் மீது காட்டிய வேறுபாடுகள் என அனைத்தையும் தன் கவிதைகளின் மூலமாக வெளிப்படுத்தி ‘நிமிர்ந்து கொண்டாள்’ என்ற தலைப்பில் தனது முதல் கவிதைத் தொகுப்பை வெளியிட்டு அனைவரையும் புருவம் உயர்த்த வைத்திருக்கிறார். இவரது புத்தகம் 'ஃப்ளிப்கார்ட்’ இணையதளத்தின் மூலம் பரபரப்பாக விற்பனையாக, தற்போது பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருக்கிறார் சத்யா.
    
கை, கால்கள் சரியாக வளர்ச்சியடையாத இருபத்தி மூன்று வயது மாற்றுத் திறனாளி சத்யா. சேர்ந்தாற்போல நான்கு வார்த்தைகள் பேசக் கூட சிரமப்படுகிறார். ஆனால், 'இந்த பலவீங்கள் எல்லாம் தன் உடலுக்குத்தான், தன் தன்னம்பிக்கைக்கு இல்லை' என்று நிரூபித்திருக்கிறார் இவர்.

இவரின் உடல் குறைபாடு காரணமாக பெற்றோர்கள் இவரைக் கைவிட்டு விட, மூன்று மாதக் குழந்தையாக இருந்த இவரை பாட்டி அரவணைத்துக் கொண்டார். முதுமை காரணமாக பாட்டியும் மறைந்துவிட, புதுச்சேரி அரியாங்குப்பத்தின் இருக்கும் 'பேபி சாரா' தொண்டு நிறுவனம் இவருக்கு ஆதரவு கரம் நீட்டியது.
   
நாம் அவரை சந்திக்க சென்றபோது தரையில் சிதறியிருந்த புத்தகக் குவியல்களுக்கு மத்தியில் இருந்து தவழ்ந்து வந்தார். நம் உதவியுடன் சேரில் அமர்ந்தவர் குழந்தையைப் போல விட்டு விட்டுப் பேசத் தொடங்கினார்,

''பொதுவாக சில பெற்றோர்கள் குழந்தைகளை தங்கள் அன்பின் வெளிப்பாடாகப் பார்க்காமல், வெறும் அழகுப் பொருட்களாக மட்டுமே பார்க்கின்றனர் என்பதற்கு நானே ஒரு உதாரணம். என் பெற்றோர்களை நான் குறை சொல்ல விரும்பவில்லை. அவர்களின் இயலாமையால் என்னை அவர்களுடன் வைத்துக் கொள்ள முடியவில்லை என்றே நான் நினைத்துக் கொள்கிறேன்.

நான் பிறக்கும்போதே என் கால்கள் செயலற்றதாகி விட்டது. அதனால், சென்னையில் இருந்து என் பாட்டியிடம் வந்து சேர்ந்தேன். அதன்பிறகு பாட்டியின் தோள்கள் என் கால்களாக மாறிப் போய்விட்டது. அந்தளவிற்கு பள்ளி மட்டுமல்லாமல் எங்கே சென்றாலும் என்னை அவர் தோள் மீதுதான் ஏற்றிச் செல்வார். அரசுப் பள்ளியில் எட்டாம் வகுப்பு வரைப் படித்தேன். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த என் பாட்டி இறந்து விட்டதால் என் படிப்பும் அதோடு முடிந்து விட்டது.
    
அதன்பின் எனது சித்தப்பா மூலம் பேபிசாரா இல்லத்தில் வந்து சேர்ந்தேன். இங்கு விக்டோரியா ராணி என்ற அம்மா, நூற்றுக்கும் மேற்பட்ட சகோதர, சகோதரிகள் என அற்புதமான சூழல் என் தனிமையை மறக்கச் செய்தது. அதேபோல இங்கே நிறையப் புத்தகங்கள் எனக்கு வாசிக்கக் கிடைத்தது.

அதன் மூலம்தான் எனக்குக் கவிதை எழுத வேண்டும் எண்ணம் உருவானது. என்னக்குத் தோன்றியதை எல்லாம் எழுதி, இங்கிருக்கும் ஸ்டீபன் மற்றும் கார்த்திகேயன் அண்னன்களிடம் சென்று காட்டுவேன். அவர்கள் கொடுத்த உற்சாகம் என்னை மேலும், மேலும் எழுத வைத்தது.

நான் பட்ட கஷ்டங்களையெல்லாம் முன்னிறுத்தி, நான் எழுதிய 'தன்னம்பிக்கையின் வெற்றி' என்பதுதான் என் முதல் கவிதை. அதன்பின் ‘இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் தலைமைத்துவ பயிற்சி மையத்தில்’ கலந்து கொள்ள ஆரம்பித்தேன். இங்குதான் என் கவிதைகளைப் படித்துவிட்டு அதிகமாக ஊக்கப்படுத்தினாங்க.

அப்போதுதான் இந்தக் கவிதைகளின் மூலம், சமுதாயத்தில் எனக்கான ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக்கனும்னு நினைத்தேன். என்னைச் சுற்றியுள்ள இவர்கள்தான் என்னையும் என் கவிதைகளையும் அடையாளப்படுத்தி புத்தகமாகக் கொண்டு வந்திருக்கிறார்கள்.
    
அந்த சூழலில்தான் ஆரோவில்லில் இருக்கும் கவிஞர் மீனாட்சியை சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது. என்னால் சாதிக்க முடியும் என்று அவர்கள் கொடுத்த உற்சாகம் என்னை மேலும் எழுதத் தூண்டியது. என்னால் நடக்கத்தான் முடியாது. ஆனால், எனது திறமையின் மூலம் இந்த சமுதாயத்தை என்னை நிமிர்ந்து பார்க்க வைக்க முடியும். அதனால்தான் என் புத்தகத்திற்கு இந்த தலைப்பையே வைத்தேன்.

இவ்வுலகத்தில் என்னைப்போல ஆயிரக்கணக்கான சத்யாக்கள் சரியான ஆதரவு இல்லாததுடன், தங்கள் உடல் குறைபாடு காரணமாக, நிறைய அவமானங்களுடன் அடையாளம் தெரியாத அனாதைகளாகவே இருக்கிறார்கள். உங்களால் முடிந்தவரை அவர்களைக் அடையாளப்படுத்துங்கள். இந்த சமுதாயத்தை நாங்கள் கேட்டுக் கொள்வது எல்லாம், எங்கள் பின்னணியைப் பார்க்காமல் எங்களையும் உங்கள் பிள்ளைகளாகப் பாருங்கள். 'நாங்கள் மாற்றுத் திறனாளிகள் இல்லை, உலகத்தை மாற்றப்போகும் திறனாளிகள்’ '' என்று சொன்னபோது சத்யாவின் கண்களில் நம்பிக்கைப் பீறிட்டது.

-ஜெ.முருகன்

படங்கள்: அ.குரூஸ்தனம்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close