Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கலரத்தானில் கிறுக்கலாம், வரையலாம்!

ரண்டரை வயது குழந்தை முதல் எழுபது வயது முதியவர்கள் வரை ஆண்கள், பெண்கள் பேதமின்றி பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள், ஷேர் ஆட்டோ டிரைவர்கள், கடைநிலை தொழிலா ளர்கள், காவல் துறையினர், தேநீர், இளநீர் கடைக்காரர்கள் என்று கிட்டத்தட்ட மூவாயிரத்துக்கும் அதிகமானோர் சென்னை  வள்ளுவர் கோட்டத்தையே வண்ணமயமாக மாற்றிவிட்டனர்.

நடிகர் அமீர்கானின் 'தாரே சமீன் பார்' திரைப்பட தாக்கத்தினால் 'ப்ரீத் எண்டர்டெயின்மெண்ட்' அமைப்பு உலக சுற்றுச் சூழல் தினத்தை மையமாக வைத்து 'கலரத்தான்' என்ற பெயரில் இந்த மாபெரும் ஓவிய கண்கவர் நிகழ்ச்சியை நடத்தியது.

மற்ற ஓவியப் போட்டிகள்போல், இந்த ஓவியங்களைத்தான் வரைய வேண்டும், இவர்கள்தான் வரைய வேண்டும், இந்த விதிகளைப் பின்பற்ற வேண்டுமென்ற வழக்கமான நிபந்தனை களை உடைத்து, வயது, மொழி, பாலினம், பயிற்சி, அந்தஸ்து களைத் தாண்டி யார் வேண்டுமானாலும் எதுவும் வரையலாம், எது வேண்டுமானாலும் கிறுக்கலாம். அதற்கு நாங்களே அட்டைகள், தாள்கள், வண்ணங்கள், தூரிகைகள் தருகிறோம் என அறிவித்தனர்.

இதனால்,குடும்பம் குடும்பமாக, நண்பர்களாக கூடி வரைந்ததில் வள்ளுவர் கோட்டமே வண்ணக் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.

ஏற்கனவே டெல்லி, பெங்களூரில் நான்கு முறை நடத்தப்பட்ட இந்த 'கலரத்தான்'' சென்னையில் நடப்பது இதுதான் முதல்முறை. இந்த பொது ஓவிய கண்கவர் நிகழ்வினை கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற செய் யவும், 500 சிறந்த ஓவியங்கள் பிரபலமான ஓவியக்கலைஞர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவைகளை ஏலத்தில் விடுகின்றனர். அதில் கிடைக்கும் தொகையினை, ஆதரவற்ற குழந்தைகள், பெண்கள், முதியோர் கள் நலனிற்காக செயல்பட்டு வரும் 'அருவி' என்ற தொண்டு நிறுவனத்திற்கு கொடுத்து உதவுகின்றனர்.

மேலும் வயதின் அடிப்படையில்  ஐந்து பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, 15 சிறந்த ஓவியங்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு, கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

விழா குறித்து, ப்ரீத் எண்டர்டெயின்மெண்ட் அமைப்பினரிடம் பேசிய பொழுது, " மக்களிடையே உள்ள பல்வேறு வேற்றுமைகளைக் கடந்து, ஒரு கலை வாயிலாக ஒன்று கூடி படைப்பை உருவாக்கி மகிழ்வதே 'கலரத்தான்' நோக்கம். கின்னஸ் சாதனைக்காக என்பதைத் தாண்டி, தேர்ந்தெடுக்கப்பட்ட ஓவியங்களின் ஏலத்தொகை சமூக நலனுக்காக பயன்படுத்தப்படுகின்றன. இதில் வெற்றி, தோல்வி என்பதெல்லாம் இல்லை. ஒவ்வொரு படைப்பாளியின் ஓவியமும் பொதுநலனில் பங்கு கொள்கிறது.

விரைவில் மும்பை, ஹைதராபாத், புனே, கொல்கத்தா, கவுகாத்தி போன்ற பெரிய நகரங்களிலும் கலரத்தானை நடத்தி இந்தியர்கள் அனைவரும் ஓவியம் வரைதலுக்கான நாளாக, ஒரு நாளை எடுத்துக் கொண்டு, அந்தநாள் கலரத்தான் நாளாக கொண்டாடப்பட வேண்டும் என்று முயற்சித்துவருகிறோம்." எனக் கூறினர்.

"வண்ணங்களின் மூலமாக நமது எண்ணங்களை வெளிப்படுத்துவதோடு மட்டுமில்லாமல், நம் மனசோர்வுகள், மன அழுத்தங்களைக் கண்டிப்பாக குறைத்துக் கொள்ள முடியும். மனப்பிரச்சனைகள் உள்ளோரை ஓவியங்களில் ஈடுபடுத்தினால் ஒருவித ஆசுவாசநிலை உண்டாகி,குணமடைய வாய்ப்புண்டு.அந்த அளவிற்கு வண்ணங்களுக்கு சக்தி உண்டு.இதற்கு 'ஆர்ட் தெரபி' என்று பெயர். இந்த கலரத்தானுக்கு எவ்வித தகுதிகளும் தேவையில்லை.

விரைவில் 'மனத்திரை' என்ற பெயரில் மாதமொரு திரைப்படத்தை திரையிட்டு அதில் இருக்கக்கூடிய  உளவியல் சார்ந்த விஷயங்களை  மருத்துவரையும், திரைப்பட இயக்குனரையும் வைத்து மக்களோடு குழுவாக இணைந்து கலந்துரையாட உள்ளோம்" என கலரத்தானில் உள்ள உளவியல் நுணுக்கங்களைக் கூறினார், விழாவை இணைந்து நடத்திய வின் ஆர் வின் அமைப்பைச் சேர்ந்த டில்லி பாபு.

காலை ஏழு மணிக்கு தொடங்கி, மாலை ஆறு மணி வரை நடந்த இந்த விழாவில் பொதுமக்களோடு சேர்ந்து பிரபல ஓவியர்களான விஷ்வம், ஜெயராஜ், சீனிவாசன். தமிழ்நாடு ஓவிய சங்கத் தலைவர் அண்ணாப் பிள்ளை, நடிகர் விக்ரமின் தாயார் ராஜேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவின் நடுவே ஓவியங்களின் நுணுக்கங்களை மக்களுக்கு கற்றுக்கொடுத்தார் ஓவியர் ஜெயராஜ்.

"வண்ணங்களும், கோடுகளும் நம்மிடையே ஒரு புரிதலையும் தொடர்பியலையும்  உண்டாக்கும். கலைகளையும்,கலாச்சாரத்தையும் காப்பாற்றாத நாட்டில் நாகரிகம் இருக்காது. மனித வாழ்வின் ஒவ்வொரு அசைவிலும் ஒரு கலை உள்ளது. சண்டைகள், சச்சரவுகள் இன்றி படைப்பின் மூலம்  இவ்வளவு மக்கள் ஒரே இடத்தில் கூடியிருப்பது பெரிய விஷயம். இன்றைய சூழலில் இம்மாதிரியான விழாக்கள் தேவை. கிராமங்களுக்கும் இந்த வண்ண விழாக்களை கொண்டு செல்ல வேண்டும்" என தனது நவீன ஓவியத்தை தீட்டிக் கொண்டே பேசினார் ஓவியர் விஷ்வம்.

- கு.முத்துராஜா

படங்கள்: அருண்

(மாணவர் பத்திரிகையாளர்கள்)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close