Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ராஜேஷ்குமார் நூலின் புதிய அவதாரம்!

க்ரைம் கதை, அறிவியல் புனைகதை... என பல்வேறு பிரிவுகளில் 1500-க்கும் மேற்பட்ட நாவல்களையும், 2000-க்கும் அதிகமான சிறுகதைகளையும் எழுதியுள்ள பிரபல எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் 'பூவில் செய்த ஆயுதம்' என்ற புதிய நாவலை, நாளிதழ்கள், பத்திரிகைகள் மற்றும் பிராந்திய மொழி மின்நூட்டல்களுக்கான இந்தியாவின் முன்னணி வெளியீட்டு தளம் மற்றும் செயலியான நியூஸ்ஹண்ட், மென்புத்தக வடிவில் வெளியிட்டுள்ளது.

நேற்று மாலை சென்னையில் நடந்த வெளியீட்டு விழாவில் மின்னூலை வெளியிட்டு பேசிய காந்தி கண்ணதாசன், ''தொழில்நுட்ப வளர்ச்சியின் அடுத்த படியான மென்புத்தக வடிவத்தை நான் மனதார வரவேற்கிறேன். இன்றைக்கு உலகத்தில் எங்கு தேடியும் கிடைக்காத எத்தனையோ அருமையான புத்தகங்கள் எல்லாம் இணையத்தில் மென்புத்தகமாக மிக எளிதில் கிடைக்கிறது. இன்றைய தலைமுறையினர் அதிகமானோர் இதை விரும்பி படிக்கிறார்கள்.

இன்றைக்கு செல்போன், கிண்டில், லேப்டாப் போன்றவற்றில் மென்புத்தகம் படித்தால் அவர்களை 30 வயதுக்கு குறைந்தவர்கள் என்றும், கையில் புத்தகத்தை வைத்து படித்தால் அவர்களை 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றும் சொல்லும் அளவுக்கு மென்புத்தகங்கள் இளைய தலைமுறையினரை மிக எளிதில் சென்றடைகிறது. இது இன்னும் வருங்காலத்தில் பலவித மாற்றங்களை அடையவும் வாய்ப்புள்ளது" என்றார்.

தொடர்ந்து பேசிய எழுத்தாளர் ராஜேஷ்குமார், ''பதிப்புத்துறையில் தொழில்நுட்பத்திய வருகை மற்றும் தாக்கத்தை நான் வரவேற்பவன். எனது 30 ஆண்டுகால எழுத்துலக வாழ்க்கையில் முதன்முறையாக பிரத்யேக மின்னூலை வெளியிடுகிறேன்.

தற்போது அவள் விகடனில் 'நள்ளிரவு வானவில்' என்ற பெண்களுக்கான க்ரைம் நாவலை எழுதி வருகிறேன். அது இப்போதே பலதரப்பட்ட மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. அதையும் இதேபோல் மின்னூலாக வெளியிடவே விரும்புகிறேன். இதன்மூலமாக இன்றைய தொழில்நுட்ப உலகில் மிக எளிதில் எல்லா தரப்பு மக்களையும் என் நாவல்கள் சென்றடையும் என்று நம்புகிறேன்" என்றார் மகிழ்ச்சியோடு.

காலத்துக்கு ஏற்ற நல்ல முயற்சி... வெற்றிபெற வாழ்த்துக்கள்..!

- சா.வடிவரசு

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ