Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

காட்டு வழியே தபால் சேவை... போஸ்ட்உமன் சோலைக்கிளி!

“யானை சத்தம் கேட்குது பாருங்க. இது யானைங்க கூட்டமா தண்ணி குடிக்க வர்ற நேரம். வாங்க நாம அந்தப் பக்கமா போயிடலாம்!’’ - காட்டுக்குள் நடந்தவாறே பேசினார் சோலைக்கிளி. அடர்ந்த காட்டுப்பகுதியில் தில், திரில்லுடன் வேலை பார்த்து வரும் ‘போஸ்ட்உமன்’!

‘‘பொள்ளாச்சியை அடுத்த ஜமீன் காளியாபுரம்தான் என் சொந்த ஊரு. பன்னிரெண்டாவது முடிச்சதும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிந்ததன் மூலமா போஸ்ட்உமன் வேலை கிடைச்சது. கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் சரணாலயத்துக்கு உட்பட்ட, மானாம்போளி கிராமத்துலதான் பணியிடம் காலியா இருக்குன்னு சொன்னாங்க. ‘காட்டுக்குள்ள தனியா வேலை பார்க்குறதா? ஆத்தாடி மாட்டேன்!’னு சொல்லிட்டேன்.

‘இந்தக் காலத்துல அரசாங்க வேலை கிடைக்குறதே கஷ்டம். பொண்ணுங்க நினைச்சா, எந்த வேலையையும் துணிச்சலா செய்யலாம்!’னு தைரியம் கொடுத்து அப்பா ராமனும், அம்மா மாரம்மாளும் என்னை இங்க அனுப்பி வெச்சுட்டாங்க. 10 வருஷத்துக்கு முன்னாடி, மானாம்போளி கிளை தபால் நிலையத்துல போஸ்ட் உமனா யூனிஃபார்ம் போட்டுட்டேன்.

மானாம்போளியில இருந்து 27 கிலோ மீட்டர் தொலைவில் இருக்குற வால்பாறையில் இருந்து தினமும் காலையில, பஸ் மூலமா தபால் கட்டு வரும். அதை நான் பிரிச்சி, அடர்ந்த வனப்பகுதியில இருக்குற மலைவாழ் மக்கள் மற்றும் தேயிலைத் தோட்ட மக்களுக்கு தினமும் கொண்டுபோய் கொடுப்பேன். பவர் ஹவுஸ் பகுதி, மலைவாழ் மக்கள் அதிகம் இருக்கும் கூமாட்டி செக்ரிமென்ட், எஸ்டேட் (காபி தோட்டம்) ஆகிய 25 கிலோ மீட்டருக்கு உட்பட்ட மூன்று பகுதியில இருக்கும் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு தபால் சேவை செய்து வர்றேன்’’ என்றவரின் காட்டுப்பாதை அனுபவங்கள்... திக் திக் திக்! 

‘‘ஆரம்பத்துல இந்தப் பகுதி ஆளுங்க யாரையாச்சும் துணைக்கு கூட்டிட்டுப் போய்தான் வீடு வீடா தபால் கொடுப்பேன். ஏன்னா, போற வழியில யானைங்க கூட்டம் கூட்டாம நிக்கும். கூட்டமா இருந்தாகூட பயமில்லை, தனி ஒரு யானைகிட்ட மாட்டினா அவ்வளவுதான். காட்டு எருமைகள் கூட்டம், கரடினு எந்தப் பக்கம் பார்த்தாலும் வன விலங்குகள் நடமாடும். போகப் போக, அதுங்க நம்ம வீட்டுக்கு வரல. நாமதான் அதுங்களோட காட்டுக்கு வந்திருக்கோம். தொந்தரவு செய்யாம போனா, அதுங்களும் நம்மை எதுவும் செய்யாதுங்கங்கிற உண்மையைப் புரிஞ்சுக்கிட்டேன்.

இன்னொரு பக்கம், இங்க வசிக்குற மலைவாழ் மக்கள் எனக்கு ரொம்பவே உதவியாவும், அன்பாவும் இருப்பாங்க. வழியில ஏதாவது மிருகங்கள் தென்பட்டா எப்படி சமாளிச்சி தப்பிக்கணும்னு சொல்லிக் கொடுப்பாங்க. வாசனையை வெச்சே அந்தப் பகுதியில் மிருகங்கள் நடமாட்டத்தைக் கண்டுபிடிக்குறது, யானையோட சாணம் சூடா இருந்தா யானை பக்கத்துலதான் எங்கேயோ இருக்குனு தெரிஞ்சுக்குறது, அடர்ந்த காட்டுப்பகுதி வழியா போகும்போது தீக்குச்சியைப் பற்ற வைத்தா யானை நெருங்காதுனு நிறைய சொல்லிக் கொடுத்தாங்க’’ எனும் சோலைக்கிளி தங்கியிருக்கும் குவார்ட்ரஸும், தபால் அலுவலகமும் அருகருகேதான் உள்ளது.

‘‘எங்க வீட்டுக்குப் பின்னாடி ஓடுற சோலையாறில் ஏராளமான முதலைகள் இருக்கு. காலையில தூங்கி எழுந்ததும் பின்பக்கக் கதவைத் திறந்தா, கரையில முதலைங்க கூட்டமா தூங்கிட்டு இருக்குறதைப் பார்க்கலாம். ஒரு முறை என் கண் முன்னாடியே ஒரு பையனோட காலை முதலை கடிச்சிருச்சு. இப்படி ஒவ்வொரு நாளும் பயத்தோடவே இருந்தாலும், பழகிப் போச்சு. என் கணவர் வேல்முருகன்தான், எனக்கு ரொம்பவே உறுதுணையா இருக்கார். அவரோட விடுமுறை நாட்கள்ல, வனப்பகுதிக்கு என்னை வண்டியில கூட்டிட்டுப் போவார். மத்த நேரத்துல நானே பஸ்ல போயிடுவேன்.

காட்டுப் பகுதியில தனியா நடந்துதான் போகணும். சாயங்கால நேரம் வனப்பகுதியில நடக்குறதுதான் ரிஸ்க். ஒரு தடவை என் கணவரோட வந்தப்போ, 10 அடி தூரத்துல ஒரு புலி நடந்து போறதைப் பார்த்தோம். புலி, சிறுத்தை, யானை, கரடி, மான், காட்டு எருமை, காட்டுப் பன்றி, பாம்புனு எல்லா அனிமல் நண்பர்களையும் பத்தி நல்லா கேட்டுத் தெரிஞ்சு வெச்சிருக்கேன். இத்தனை சிரமங்களையும் கடந்து போய் லெட்டரைக் கொடுக்கும்போது, ‘நன்றிம்மா!’னு இந்த மனுஷங்க அவங்க வீட்டுல ஒருத்தியா நினைச்சு என்கூட பழகும்போது, இந்த வேலை தானா பிடிச்சுப் போயிடும். அதை உணர்ந்து பார்த்தாதான் தெரியும்!’’ என்று உள்ளத்தில் இருந்து சொன்னவர்,

‘‘நீங்களும் மிருகங்களைப் பார்க்க, எங்க வீட்டுக்கு வாங்க. பின்னாடி சோலையாற்றில் தண்ணீர் குடிக்க வரும்போது மிரண்டு, ரசிச்சுப் பார்க்கலாம்!’’ - புன்னகையுடன் அழைப்பு விடுக்கிறார் சோலைக்கிளி!

- கு. ஆனந்தராஜ்,

(மாணவப் பத்திரிகையாளர்)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close