Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கூடியம் ஆவணப்படம் திரையிடல் !

2015 ஆம் வருடம் பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் திரைப்படவிழாவில் திரையிடப்பட்ட ஆவணப்படமான குடியம் முதன் முறையாக தேனியில் திரையிடப்பட்டது. 

இந்தியாவில் திரையிடப்படுவது இதுதான். முதன்முறை தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தது.

திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூரிலிருந்து 20 கி.மீட்டர் தொலைவில் உள்ள குடியம் எனுமிடத்தில் பழையகற்காலத்திலுள்ள மனிதர்கள் வாழ்ந்ததாகவும் அந்த பகுதிகளிலுள்ள குகைகள் , பாறையமைவுகள்   2 லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை விளக்கும் ஆவணப்படமே இந்த குடியம். இதன் மூலம்
தமிழர்களின் தொன்மம் இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை அறியலாம்.

இங்குள்ள ஒவ்வொரு பாறையும் 140 மீட்டர் உயரமுள்ளவை. இதுகுறித்து ஆவணப்படத்தில் பேசிய அறிஞர்கள் , “ராபர்ட் புரூஸ் பூட் என்ற ஆராய்ச்சியாளர் 1864-ல் இந்த ஆராய்ச்சியை நடத்தினார். அதன்பின் 1930 -60 வரை இந்திய தொல்லியல்துறையை சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவரும் , 1962 ல் கே.டி.பானர்ஜி யும் ,  1976 ல் ஏ. சுவாமியும் , 2003 துளசிராமன் ,2011 ல் சாந்தி பப்பு ஆகியோர் ஆய்வு செய்துள்ளனர் . இவர் களின் ஆராய்ச்சிபடி இந்தியாவின் தொல்லியல் தன்மையை இந்த குடியம் குகைகள் தான் சிறப்பிக்கின் றன.

2011 ல் ஆய்வு செய்த பப்பு இந்த கற்பாறைகளின் பகுதிகளை ப்ரான்ஸ்க்கு அனுப்பி நடத்திய ஆய்வுகளின் மூலம் இந்த பாறைகள் 15 லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை என தெரிவிக்கப்படுகிறது. “ 13 கோடி ஆண்டு களுக்கு முன்பிருந்த மலைகள் தொடர்ச்சியான வெயில், மழையினால் பல்வேறு நிலைகளை அடைந்து படிவுப்பாறைகளாக மாறியுள்ளனர்.  இந்த பாறைகளை பயன்படுத்தி வேட்டையாட தேவையான கூர்மையான கற்கருவிகளை  மனிதன் கண்டறிந்தான் .

உணவுக்கு தேவையான காடுகள் , நீராதாரமாக ஆறு , வசிக்க குகைகள் இருந்தால்போதும் அக்காலத்திய மனிதனுக்கு. இந்த அடிப்படை தேவைகள் அனைத்தும் இந்த அகுதியில் இருந்துள்ளன என்பதால் பழைய கற்கால மனிதன் வாழ்ந்தபகுதி இது ” என சில ஆய்வாளர்கள் சொல்கின்றனர்.  2012 ல் துளசிராமன் என்பவரும் இந்த ஆய்வை மேற்கொண்டார்.

தற்போது அதன் பெருமையை உணராமல் இந்த பகுதி மக்கள் இருக்கிறார்கள். இந்த குடியம் குகையின் கீழே மண்ணச்சியம்மன் சாமி சிலையை நிறுவி  வழிபடுகின்றனர். சிலர் அங்கேயும் சென்று மதுபாட்டில் கள் , பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தி அந்த பகுதிகளை சுகாதார சீர்கேட்டுக்கு ஆளாக்குகின்றனர். நம்முடைய  தொல்லியல் பண்பாட்டை நிரூபிக்க இதுபோன்ற பகுதிகளை பாதுகாப்பது அவசியம் “ என முடிகிறது படம்.

இப்படம் குறித்து பேசிய ஒளிப்பதிவாளர்  வசந்தகுமார் , “ கேன்ஸ் உலக திரைப்பட விழாவில் திரையிடப் படுவதற்கு கமர்ஷியல் அல்லாத படங்களாக இருப்பது அவசியம். உலகம் முழுவதும் இருந்து கமர்சியல் அல்லாத படங்களை இயக்கிய இயக்குநர்கள் அந்த விழாவில் கலந்து கொண்டிருந்தனர்.

மொத்தம் 8000 படங்கள் அனுப்பப்பட்ட இந்த விழாவில் 4500 படங்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்ட இந்த 68 வது கேன்ஸ் திரைப்பட விழாவில் ஷார்ட் பிலிம் கார்னர் என்ற பிரிவில் எங்கள் படம் திரையிடப் பட்டதையே மிகச்சிறந்த விருதாக கருதுகிறோம்.

அதன் பிறகு ஈழ தமிழ் மக்கள் அதிகம் வசிக்கும் பாரீஸ் நகரில் எங்கள் படத்தை திரையிட்டோம். அந்த விழாவில் கலந்துகொள்வதற்காக அங்கே விரிக்கப்பட்ட சிவப்பு கம்பளத்தில் நடப்பதே வைர கிரீடம் சூட்டியது போன்ற உணர்வை ஏற்படுத்தியது “ என்றார்.

இயக்குநர் ரமேஷ் யந்த்ரா , “ ஆய்வாளர்களை தேடித்தேடி  அவர்கள் மூலம் தேவையான தகவல்களை திரட்டி , அதன்படி படத்தினை அடுத் தடுத்த கட்டத்திற்கு படத்தினை கொண்டு சென்றிருக்கிறோம். இது வரையிலான புவியியல் மற்றும் நம்முடைய பழைய காலம் சம்பந் தமான பதிவுகளை கொண்டு ஒரு பகுதி தயாரித்திருக்கிறோம்.

இதனுடைய இரண்டாவது பாகம்  தமிழர்களின் மானுடவியலையும் அறிந்து கொள்ள இயலும் வகையில் எடுக்க முயற்சிக்கிறோம்.

அதன்பின் பேசிய எழுத்தாளர் பொன்முடி , “ ஒவ்வொரு மதத்தினரும் தங்களுடைய மதநம்பிகையிலிருந்து இந்த உலகம் தோன்றியதை வெவ்வேறாக சொல்வார்கள். 1856-ல் டார்வினின் உயிரினங்களின் தோற்றம் கொள்கை வெளிவந்தபோது உலகமே பயந்தது.

அவருடைய கோட்பாடை ஏற்க மறுத்தனர். இறுதியில் அவருடைய கோட்பாடுதான் வெற்றியடைந்தது.  நம்முடைய தமிழ் பாரம்பரியம் உயர்ந்தது என்கிற வேளையில் ஆப் பிரிக்காவில் முதல் மனிதன் தோன்றினான் என்பதற்கு எதிராக நாம் எப்படி இதனை நிறுவுவது? அதைவிட நம் சமூகம் 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதையே பெரிய நம்பிக்கையாக கருதுகிறேன் “ என்றார்.

இதுபோல நம்முடைய பழங்கால சிறப்பினை சமர்ப்பிக்கும் ஆய்வுப்படங்கள் வெளிவர வேண்டும்!

- உ.சிவராமன்
படங்கள் : வீ.சக்தி அருணகிரி

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close