Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

‘அப்பா, அம்மாகூட இருந்தா நல்ல மார்க் எடுக்க முடியாதா?!’

சில மாதங்களுக்கு முன் வெளிவந்த பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவில், 486/500 மதிப்பெண்கள் எடுத்தாள் எங்கள் நாத்தனாரின் மகள். இதுவரை எங்கள் குடும்பத்தில் யாரும் எட்டாத அந்த மதிப்பெண்ணால், எங்களுக்கெல்லாம் சந்தோஷமும், பெருமிதமும். ஆனால், அவள் அம்மா, ‘490க்கு மேல எடுப்பான்னு எதிர்பார்த்தேனே’ என்று அலுத்துக்கொண்டபோது, ஆரம்பமானது முரண்.

‘பெங்களூருவுல சூப்பர் ஸ்கூல் இருக்காம். அங்க சேரு. அப்போதான் டாக்டராக முடியும்’ என்று சுற்றியிருந்தவர்கள் தொலைநோக்குடன் பரிந்துரைக்க, உடனடியாக பெண்ணை அழைத்துக்கொண்டு பெங்களூரு கிளம்பினார்கள் நாத்தனாரும், அவர் வீட்டுக்காரரும். காலை ஒன்பது மணியில் இருந்து, மதியம் மூன்று மணி வரை வரிசையில் நிற்க வைக்கப்பட்டவர்கள், ஒருவழியாக விண்ணப்பம் வாங்க அழைக்கப்பட்டபோது, ‘ரெண்டு லட்சம் ஃபீஸ். ஆனா, இவ்ளோ குறைவான(?!) மார்க்குக்கு நாங்க சீட் கொடுக்குறதில்லை. 497 அண்ட் அபவ் எடுத்திருந்தா மட்டும்தான் இங்க அட்மிஷன் கிடைக்கும்’ என்று சொல்ல, ‘அப்போவே சொன்னேன்ல... இன்னும் கொஞ்சம் மார்க் எடுத்திருக்கலாம்லன்னு’ என்று பெண்ணை திட்டியவாறே ஊர் வந்து சேர்ந்தார் நாத்தனார்.

விடவில்லை அறிவுரைப் படலம். ‘சரி நாமக்கல்ல சேர்த்துடு. பிளஸ் டூ மார்க்குக்கு அவங்க கியாரன்டி’ என்று நாமக்கல் பஸ்ஸுக்கு டிக்கெட் எடுக்க வைத்தார்கள். ‘ம்மா நான் இங்கேயே நல்லா படிக்கிறேன்மா. ஹாஸ்டல் எல்லாம் வேணாம்மா’ என்ற மகளின் கெஞ்சல் நாத்தனார் காதில் விழவே இல்லை. இன்னும் சில வருடங்களில், ‘டாக்டரோட அம்மா’ என்று தான் அழைக்கப்படப் போகும் கனவே அவரை ஆட்டிப்படைத்தது.

நாமக்கல் பள்ளி நிர்வாகத்தினர் விதித்த கட்டளைகள் இன்னும் வெறுப்பேற்றும் ரகம். ‘வருஷத்துக்கு ரெண்டு லட்சம் ஃபீஸ். மாசம் ஒரு தடவை வந்து பேரன்ட்ஸ் மட்டும் ஸ்டூடன்ட்ஸைப் பார்க்கலாம். நீங்களா ஸ்டூடன்ட்டுக்கு போன் பண்ணக் கூடாது. வாரத்துக்கு ஒரு தடவை ஸ்டூடன்ட்டே உங்களுக்குப் போன் பண்ணிப் பேச நாங்க ஏற்பாடு செய்வோம். பிளஸ் ஒன், பிளஸ் டூ முடிக்கும் வரை வீட்டு ஞாபகமோ, பெத்தவங்க ஞாபகமோ வரக்கூடாதுனுதான் இந்த ஏற்பாடு’ என்று சொல்லி அனுப்ப, ‘மனசுக்கு கஷ்டமாதான் இருக்கு. இருந்தாலும் பிள்ளை படிக்கணும்ல’ என்று ‘பை’ சொல்லிவிட்டு வந்துவிட்டனர் நாத்தனாரும், அவர் கணவரும்!

‘நான் இங்க படிச்சுதானே டென்த்ல இவ்வளவு மார்க் வாங்குனேன்? அதேபோல பிளஸ் டூ-லயும் இங்கேயே படிச்சு நல்ல மார்க் வாங்கிடுவேன். என் மேல உங்களுக்கு நம்பிக்கை இல்லையா? உங்க ஞாபகமெல்லாம் இல்லாம இருந்தாதான் நான் மார்க் எடுப்பேனா..? அப்பா, அம்மாவை எல்லாம் மறந்தாதான் நல்ல மார்க் எடுக்க முடியுமா?’ - அந்தக் குழந்தையின் கதறலுக்கு பதில் இல்லை இங்கு! 

- அதிதி

எடிட்டர் சாய்ஸ்

MUST READ