Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சிறுவர்களுக்கு தன்னம்பிக்கையை அதிகரிக்கும் மாடலிங்!

பிரபல புகைப்படக்கலைஞர் கார்த்திக் ஸ்ரீநிவாசன் சமீபத்தில் 'ட்ரீம்காஸ்ட் மாடலிங் வொர்க் ஷாப் 2015' என்ற நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார்.

வருடாவருடம் நடக்கும் இந்த நிகழ்ச்சி ஆரம்பித்து இவ்வருடத்துடன் பதினைந்து ஆண்டுகள் நிறைவடைகிறது. மற்ற மாடலிங் வொர்க் ஷாப்பிலிருந்து சற்று மாறுபட்டு, 4 முதல் 20 வயதுள்ளவர்களுக்கு மாடலிங் கற்றுத்தருவது இவரின் சிறப்பு.

இந்த நிகழ்ச்சியில் 'ராம்ப்வாக் செக்மன்ட்' முழுவதையும் ஒருங்கிணைத்து நடத்தியது அவரது மனைவி ஹேமா. இது குறித்து கார்த்திக் ஸ்ரீனிவாசனிடம் கேட்ட போது,

எதற்காக இந்த வொர்க் ஷாப்?

நான் ஊர்ல இருந்து மாடலிங் பண்ணலாம்னு கிளம்பி வந்தபோது, எனக்கு யார்கிட்ட போய் கத்துக்கணும், இது என்ன மாதிரி விஷயம்னு எதுவும் தெரியாது. ரொம்ப கஷ்டங்கள கடந்துதான் இந்த இடத்துக்கு வந்திருக்கேன். இப்போ அதே கஷ்டம் அடுத்து வர்ற தலைமுறைக்கு இருக்கக் கூடாதுனு தோணுச்சு. அதனால தான் இந்த வொர்க் ஷாப்.

 



சின்னப் பசங்களுக்கும் மாடலிங் கத்துக்கொடுக்கலாம்னு எப்படி தோணுச்சு?

இந்த வயசில இருந்தே அவங்க கத்துக்க ஆரம்பிச்சாங்கன்னா, வளர்ந்து வரும்போது அவங்களுக்கு இந்த மாடலிங் எல்லாம் ரொம்ப சுலபமா வரும். பொதுவா அந்தப் பசங்களுடைய அம்மா, அப்பா எல்லாம் சொல்றது என்னென்னா, 'எங்க பசங்க நாளைக்கு நடிப்பாங்களோ மாட்டாங்களோ அதெல்லாம் எங்களுக்குக் கவலை இல்ல. இது மூலமா அவங்களுக்கு ஒரு தன்னம்பிக்கை வந்திருக்கு. அது போதும் எங்களுக்கு'னு சொன்னாங்க. அதுதான் விஷயம். இப்போ இவங்க எடுத்துக்கற பயிற்சி, அவங்களுடைய தன்னம்பிக்கையை  அதிகப்படுத்தும். அதுதான் முக்கியம். அழகுங்கறது உங்க நிறத்தில இல்ல, நீங்க உங்கள எப்படி பிரசன்ட் பண்ணிக்கறீங்கங்கறதிலதான் இருக்கு. அத அவங்களுக்கு இப்போ இருந்தே புரிய வெச்சிட்டா, அவங்க எதிர்காலம் நல்லா இருக்கும்ல.

மேலும் படங்களுக்கு க்ளிக் செய்க...



சின்னப் பசங்களுக்கு சொல்லிக் கொடுக்கறதில சிரமம் இல்லியா?

நாங்க அவங்கள உட்கார வெச்சு, பேசக்கூடாது, இந்த ட்ரெஸ் போடக் கூடாதுனு ரூல்ஸ் எதுவும் போட்டு சொல்லிக் கொடுக்கறதில்ல. அவங்க போக்குலயே விட்டு சொல்லிக் கொடுக்கறோம். உனக்கு பாடணுமா பாடு, நடிக்கணுமா நடி, ஆடணுமா ஆடுனு அவங்களோட பழகி அந்த விதத்திலேயே சொல்லிக் கொடுப்போம். முழுசா 2 வாரம் இந்த வொர்க் ஷாப் நடக்கும். இது முடிஞ்ச பின்னால அவங்க இந்தக் க்ளாஸ எவ்வளவு மிஸ் பண்ணுவாங்க தெரியுமா? அதனாலேயே அடுத்த வருஷமும் வந்து க்ளாஸ்ல சேர்ற ஸ்டூடெண்ட்ஸ் கூட இருக்காங்க.


அடுத்ததா இதன் மூலமா என்ன செய்யலாம்ணு திட்டம்?

அப்படி எதுவும் இல்ல. நான் இத பணத்துக்காக பண்ணல, உங்களுக்கே நல்லாத் தெரியும் நான் ஏற்கனெவே பிரபலமான ஒரு போட்டோகிராஃபர்னு. அதனால இத புகழுக்காகவும் பண்ணல. இப்போ சினிமாவில் கூட எங்க ஸ்டூடெண்ட்ஸ் நடிக்கறாங்க. பொதுவா நடிப்புங்கறது சொல்லிக் கொடுக்க முடியாதுனு சொல்லுவாங்க, நாங்களும் அதை சொல்லிக் கொடுக்கல... அதுக்கான வழியதான் காட்டுறோம், அவ்வளவுதான். என்னுடைய ஸ்டூடெண்ட்ஸ் முன்னேறினா அதைவிட எனக்கு வேற என்ன சந்தோஷம் இருந்திட முடியும்.

- பா.ஜான்சன்

படங்கள்: எம்.உசேன்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ