Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சிறுநீர் கழித்த சட்டியை எடுத்தேன்: தியாகி தெ.வே.பகவதி பெருமாள்!

சிலருக்குதான் தமிழ் மீதும், இலக்கியங்கள் மீதும் அதீத ஆர்வம் வரும். பள்ளிப் பருவம் முதல் தொடர்ச்சியாக அந்த ஆர்வம், தள்ளாடும் வயது வரை நீண்டுக் கொண்டிருக்கிறது சுதந்திர போராட்ட தியாகி தெ.வே.பகவதி பெருமாளுக்கு.

நாகர்கோவில் நீதிமன்றம் எதிரே உள்ள அவரது மாலை நேர நூலகத்தில் சந்தித்துப் பேசியபோது, "நான் பிறந்தது நாஞ்சில் நாடு தெரிசனங்கோப்பு. அதாவது இப்போதைய குமரி மாவட்டம். அப்போது தாய் தமிழகத்தோடு இணைய பல தமிழர் உணர்ச்சி போராட்டங்கள் தொடர்ச்சியாக நடந்த நேரம். பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது எனக்கு தமிழ் மீது அதிகளவு பற்று ஏற்பட்டு கவிதைகளும், கட்டுரைகளும், நாடகங்களும் எழுதத் தொடங்கினேன்.

அப்போது, சில நண்பர்களுடன் சேர்ந்து கையெழுத்து பத்திரிக்கை நடத்தி வந்தேன். 1954 ஆம் ஆண்டு ஐ.நா. தினவிழா பேச்சுப் போட்டியில் காமராசர் கையால் பரிசுப் பெற்றேன். அதே ஆண்டு ஆகஸ்ட் 11 ஆம் நாள் திருவிதாங்கூர் தமிழக விடுதலை தினம் கடைப்பிடிக்கப்பட்டது. தோழர் ஜீவாவின் சொந்த ஊரான பூதப்பாண்டி பள்ளியில், மாணவர் தலைவனாக இருந்த நான், திட்டுவிளை ஆசாத் மைதானத்தில் 144 தடை உத்தரவை மீறி பேசினேன். அதனால் என்னை போலீசார் கைது செய்தனர்.

அப்போது நான் பள்ளி மாணவன் என்பதால் தண்டனைக் குறைவு. காவல் நிலைய லாக் அப்பில், தாய் தமிழகத்தோடு இணைய போராடிய தியாகிகள் சிறுநீர் கழித்து வைத்த சட்டியை வெளியே கொண்டு வந்து கொட்ட வேண்டும். அதனை நான் செய்தேன். கைதானதால் பள்ளி படிப்பு பாதியில் தடையானது. அதன்பின் ஐ.டி.ஐ.யில் சேர்ந்தேன். கண்தானம் விழிப்புணர்வு குறித்த, கண் கொடுத்த தெய்வம் நாடகத்தை எழுதி நடத்தினேன்.

1956 நவம்பர் 1 கன்னியாகுமரி, தாய் தமிழகத்தோடு இணைந்தது. பின்னர், இலக்கிய ஆர்வமும் அதிகமானது. கவிதை, நாவல் கட்டுரைகளைப் பற்றி அறிஞர்களோடு விவாதம் செய்வேன். வானமாமலை போன்ற பெரியவர்களை வைத்து ஓரங்க நாடகம், விவாதம் போன்றவைகளையும் நடத்தி வந்தேன். 1986 முதல் 1991 வரை தெரிசனங்கோப்பு ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தபோது, இலக்கிய விழாக்களை நடத்தி, பரிசுகளை வழங்கி, மாணவர்களை ஊக்குவித்தேன். அப்போது, மகாத்மா காந்தி மிஷனோடு இணைந்து முதியோரை பராமரிக்கும் பணியினையும் செய்து வந்தேன். புத்தகம் வாசிக்கும் ஆர்வம் இளமையிலேயே இருந்ததால், புத்தகங்களை சேகரிக்கவும் தொடங்கினேன்.

நான் பத்திரிக்கைகளில் பணியாற்றியபோது, வியாபார ரீதியாக குலுக்கல் முறையில் பரிசுகள் அளித்து வந்தபோது அதனை மாற்றி கவிதை, இலக்கியம், வரலாறு என சிறந்த படைப்புகளுக்கு பரிசளிக்க, 'கலை இலக்கிய மேம்பாடு உலக பேரவை' என்கிற அமைப்பை நிறுவி' இலக்கிய சேவை செய்யத் தொடங்கினேன். முதலில் மாவட்ட அளவில்தான் புத்தகங்கள் வரத் தொடங்கின, இப்போது மாநில அளவில் இருந்தும் புத்தகங்கள் வந்துக் கொண்டிருக்கின்றன.

எழுத்தாளர்கள், சாதனையாளர்கள் என சுமார் 30க்கும் மேற்ப்பட்டவர்களுக்கு விருதுகள் வழங்கி பாராட்டு விழா பெரிய அளவில் நடக்கும். இந்த விழா கமிட்டியில் நாவலாசிரியர் பொன்னீலனும் இருக்கிறார்.

இலக்கிய விழாவில் இதுவரை வசந்தகுமார், குமரி அனந்தன், வைகோ, வி.ஜி.சந்தோஷம், நீதியரசர் புகழேந்தி போன்றவர்கள் கையால் விருதுகளும், பொற்கிழிகளும் வழங்கப்பட்டுள்ளன. அன்றைய தினம், மறைந்த தியாகிகளின் திருவுருவப் படங்களும் திறக்கப்படும். விருது போட்டிக்கு வந்த புத்தகங்களை என்ன செய்வது என யோசித்தபோதுதான், நான் ஏற்கெனவே சேகரித்த புத்தகங்களை சேர்த்து இந்த மாலை நேர நூலகத்தை தொடங்கினேன்.

இந்த நூலகத்தில் புராண நூல்கள், திருவிதாங்கூர் பற்றிய நூல்கள், ஆய்வுகட்டுரைகள், கவிதைகள், நாவல்கள் போன்ற பல தரப்பட்ட புத்தகங்கள் இருக்கின்றன. ஆய்வு மாணவர்கள் பெரிய அளவில் வந்து செல்கின்றனர். என்னால் முடிந்த அளவு தமிழுக்கு தொண்டு செய்து வருகிறேன்" என்றவர் கண்கலங்கி, ''எனது கடைசி ஆசை உடல் தானம் செய்வது தான்" என்றார்.

தமிழ்கூறும் நல்லுலகில் பல நூல்களை எழுதி தமிழுக்கு தொண்டு செய்யும் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் தியாகி.தெ.வே.பகவதிபெருமாளும் பாராட்ட பட வேண்டியவர்தானே!

- த.ராம்

படங்கள்: ரா.ராம்குமார்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close