Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

திருமண அழைப்பிதழாய் புத்தகம்: உறவுகளின் மேன்மை சொல்ல ஒரு முயற்சி!

கூட்டுக்குடும்பங்கள் ஏறத்தாழ சிதைந்து விட்ட தற்போதைய நிலையில், தன் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் உறவுகளின் முக்கியத்துவத்தைச் சொல்லும் வகையில் தன் மகள் திருமணத்தை நடத்தி முடித்துள்ளார் திருப்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் வேலுசாமி.

திருமண பத்திரிகையாக வழங்கப்பட்ட புத்தகம், திருமண மண்டபத்தில் எழுத்தாளருடன் கலந்துரையாடிய உறவினர்கள் என உறவுகளின் மேன்மையையும், முக்கியத்துவத்தையும் சொல்லும் வகையில் திருமண நிகழ்வில், உறவுகளுக்கு ஏகப்பட்ட முக்கியத்துவம்.

மனித உறவுகளின் உன்னதத்தை சொல்லும் வகையில், எழுத்தாளர் நா.முத்துக்குமார் எழுதிய 'அணிலாடும் முன்றில்' எனும் தொடர் ஆனந்த விகடனில் வெளிவந்தது. பின்னர் இது விகடன் பிரசுரம் சார்பில் புத்தகமாகவும் வெளியானது. அம்மா, அப்பா, அண்ணன், அக்கா, தம்பி, தங்கை, மகன் என அனைத்து உறவுகளைப்பற்றி எழுத்தாளரின் பார்வையில் எழுதப்பட்ட இந்த புத்தகம் வாசகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த புத்தகத்தோடு தன் மகள் திருமண அழைப்பிதழை அச்சிட்டு, அதை தன் உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் வழங்கி திருமணத்துக்கு அழைத்துள்ளார் வேலுசாமி. அதோடு அந்த நூலின் ஆசிரியர் நா.முத்துக்குமாரை திருமணத்துக்கு அழைத்து, மண்டபத்திலேயே அவருடனான கலந்துரையாடல் கூட்டடத்தையும் நடத்தினார்.

ஏன் இந்த அழைப்பிதழ் முயற்சி? என வேலுசாமியிடம் கேட்டோம்.

"திருமண அழைப்பிதழ்கள் எப்போதும் பாதுகாக்கப்படுவதில்லை. படித்த உடன் அதன் தேவை முடிந்து விடுகிறது. அதிகபட்சம் திருமணம் முடியும் வரை அந்த அழைப்பிதழ் பாதுகாக்கப்படும்.

அப்படியில்லாமல் புத்தகத்தோடு இணைத்து அழைப்பிதழ் கொடுத்தால் என்ன என யோசித்தேன். இதற்காக பல புத்தகங்களை நான் படித்தேன். இதில் 'அனிலாடும் முன்றில்' தான் எனக்கு நிறைவை கொடுத்தது. இதில் குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை யாரையும் தாக்காமல், தாழ்த்தாமல் மிக அழகாக சொல்லியிருந்தார்.

இன்றைய சூழலில் உறவுகளின் முக்கியத்துவத்தை பலரும் அறிந்து வைத்திருக்கவில்லை. அதனால் இந்த புத்தகத்தை வழங்க திட்டமிட்டு, நா.முத்துக்குமாருக்கு மெயில் அனுப்பினேன். பின்னர் விகடன் நிறுவனத்திடம் இருந்து 6 ஆயிரம் புத்தகங்களை வாங்கி அதை அழைப்பிதழோடு இணைத்து வழங்கினேன். தாம்பூல பைகளில் போட்டுக்கொடுத்தால் பலர் அதை பிரித்து கூட பார்க்கமாட்டார்கள். அழைப்பிதழ் என்றால் அதை பிரித்து பார்ப்பார்கள். அதை படிப்பார்கள். புத்தகம் என்பதால் அழைப்பிதழோடு அது பாதுகாக்கப்படும். உறவுகளை பாதுகாக்க அதன் ஆணிவேரான அன்பினை பரவச்செய்வதற்கான முயற்சி தான் இது" என்றார்.

நா.முத்துக்குமார் பேசுகையில், " 'அணிலாடும் முன்றில்' நான் ஆனந்த விகடனில் தொடராக எழுதியது. கூட்டுக்குடும்பங்கள் என்பது சிதைந்து வந்த நிலையில் தான் இந்த புத்தகத்தை எழுதினேன். அப்போது ஒவ்வொரு வாரமும் எனக்கு நிறைய மெயில் வரும். ஆனந்த விகடன் அலுவலகம் மூலம் பலர் என்னிடம் தொலைபேசியிலும் பேசியிருக்கிறார்கள். ஒவ்வொரு உறவு முறை பற்றி எழுதும் போதும், பலர் என்னை அழைத்து அழுதிருக்கிறார்கள். பலர் தங்கள் பிரச்னைகளை மறந்து உறவுகளை தொடர்ந்ததையும் சொல்லி மகிழ்ந்திருக்கின்றனர்.

இப்படி ஒவ்வொருவரையும் இந்த இந்த புத்தகம் வெகுவாக கவர்ந்தது. பலர் இதை திருமண தாம்பூலத்தில் வைத்து தருவார்கள். பிறந்த நாள் பரிசாக கொடுப்பார்கள். விழாக்களில் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், அழைப்பிதழாக கொடுப்பது இது தான் முதல் முறை. அதற்கு வேலுசாமி சொன்ன காரணம் சரியான காரணம். அழைப்பிதழாக கொடுக்கும் போது அது பத்திரமாக இருக்கும். அனைவரும் படிப்பார்கள். மனித உறவுகள் என்பது மிக முக்கியமானது. இந்த புத்தகம் என் பார்வையில் ஒரு ஆணின் பார்வையில் எழுதப்பட்டது. இதேபோன்று உறவுகளை பெண்ணின் பார்வையில் எழுத திட்டமிட்டுள்ளேன்" என்றார்.

கலந்துரையாடல் கூட்டத்தில் பேசிய எழுத்தாளர் பாமரன், "தம்பி முத்துக்குமாருக்கும், எனக்கும் தலைகீழ் வேறுபாடான வாழ்க்கை முறை. அவர் உறவுகளால் சூழப்பட்ட வாழ்க்கை வாழ்ந்தவர். நான் உறவென்றால் என்னவென தெரியாமல் வாழ்ந்தவன். சினிமாவை பார்த்து சிலதை அறிந்துகொள்வது போலத்தான், உறவுகளைப்பற்றி இந்த புத்தகத்தை படித்து அறிந்து கொண்டேன். தம்பி முத்துக்குமார் வந்திருக்கிற துறை என்பது முடிந்த அளவு சமூகத்தை ஒரு வழி செய்து விடலாம் என நினைக்கிற துறை.

பல திரைப்படங்கள் உறவுகளை இழிவுபடுத்தி சமூக சீர்கேட்டை உருவாக்கும் சாக்கடையான சூழலில், அங்கிருந்து தான் முத்துக்குமார் வந்திருக்கிறார். சீர்கெட்டு கிடைக்கும் சமூகத்தை உறவுகளை நோக்கி திருப்பும் முயற்சியாகத்தான் இந்த புத்தகத்தை பார்க்கிறேன். நாம் பல் விளக்க, குளிக்க என எல்லாவற்றுக்கும் என ஒரு நேரம் வைத்திருக்கிறோம். ஆனால், உறவுகளை சந்திக்க நேரமில்லை. கேபிள் டி.வி. ஆப்பரேட்டர்கள் ஸ்டிரைக் செய்தால் தான் குடும்ப உறவுகளோடு பேசவே நேரம் கிடைக்கிறது. தயவு செய்து டி.வி. பார்க்க ஒரு நாளுக்கு ஒரு மணி நேரம் என வைத்துக் கொள்ளுங்கள். உறவுகளோடு உங்கள் நேரங்களை செலவிடுங்கள்" என்றார்.

தொடர்ந்து எழுத்தாளர் நா.முத்துக்குமாருடன் பலர் உரையாடினர். புத்தகத்தில் தங்களுக்கு பிடித்தவை, அதை படித்த பின் தங்கள் குடும்பத்தில் ஏற்பட்ட மாற்றங்கள், உறவுகளின் அவசியத்தை உணர்ந்து கொண்ட தருணங்களை பலரும் பகிர்ந்து கொண்டனர்.

"எங்க அப்பாவுக்கு அக்கா, தங்கச்சி, அண்ணன், தம்பினு  எல்லோரும் இருந்தாங்க. ஆனா, இப்போ வீட்டுக்கு ஒரு குழந்தை என ஆயிடுச்சு. எங்களுக்கு அக்கா, தங்கச்சி, அண்ணன், தம்பினு யாரும் இல்லை. அடுத்த தலைமுறைக்கு சித்தப்பா, சித்தி, பெரியம்மா, பெரியப்பா, அத்தை, மாமானு யாரும் இருக்க மாட்டாங்க.

எதிர்கால சந்ததி குடும்ப உறவுகளை பத்தி புத்தகத்துல படிக்க தான் முடியும். உறவுகள் பத்தி நீங்க எழுதுனதையும், இங்கே பேசறதையும் கேட்க ரொம்ப நல்லா தான் இருக்கு. ஆனா அது எங்களுக்கு எப்பவும் எட்டாக்கனி தானே'' என உருக்கமாக பேசி முடித்தார் இளம்பெண் ஒருவர்.

ச.ஜெ.ரவி,


படங்கள்: ரமேஷ் கந்தசாமி

எடிட்டர் சாய்ஸ்

MUST READ