Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நீங்கள் தலைவரா? தலைவரை உருவாக்குபவரா?

ஒரு நிறுவனம், கால்பந்து அணி, ராணுவ முகாம் இப்படி எந்த துறையில் இருப்பவராக வேண்டுமானாலும் இருக்கலாம். அனைவருமே தலைமை பண்பை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றுதான் எண்ணுவார்கள். இதில் சிலர் சற்று வித்தியாசமானவர்கள்; தலைவராக விரும்ப மாட்டார்கள். ஆனால் அவர்களது தலைமை பண்பை பயன்படுத்தி தலைவர்களை உருவாக்குவார்கள்.

உதாரணமாக சொல்லப்போனால் நமது ஆசிரியர்கள் அனைவருமே சிறந்த தலைமை பண்பை உடையவர்கள். அவர்களால் மிகச்சிறந்த பொறியியல் வல்லுனர்கள், மருத்துவர்கள், சிஇஓக்களை உருவாக்க முடியும். ஆனால் அவர்கள் ஆசிரியர்களாகதான் இருப்பார்கள். இவர்கள்தான் தலைவரை உருவாக்குபவர்கள்.


இதற்கு ஒரு சம்பவத்தை எடுத்துகொள்வோம். ஒரு திறந்த பூங்காவில் ஒரு மனிதர் சட்டை ஏதும் அணியாமல் பூங்காவின் மையத்தில் நடனமாடுகிறார். பூங்காவில் இருக்கும் அனைவரும் வேடிக்கை மட்டுமே பார்க்கிறார்கள். இவரும் எதற்கும் கவலைப்படாமல் தொடர்ந்து ஆடுகிறார். இதனை பார்த்து இவருடன் இன்னொருவர் இணைகிறார். இப்போது இருவர் ஆடி கொண்டிருக்கிறார்கள். இப்போது இரண்டாவதாக இணைந்தவர், கூட்டத்தில் உள்ளவர்களை அழைக்கிறார். கூட்டமே ஆடத்துவங்குகிறது.

இந்த நிகழ்வில் முதலில் சட்டையின்றி ஆடத்துவங்கியவரை தலைவர் என்று கூறலாம். எந்த எதிர்பார்ப்பும் இன்றி தன் வேலையை செய்யும் அவர், மற்றவர்களுக்கு முன் உதாரணமாக இருக்கிறார். இவரை பார்த்து பலர் தலைவனாக வேண்டும் என்ற ஆசையை வளர்த்துக் கொள்வார்கள். ஆனால் இவர் மாற்றத்துக்கு தயாராகுங்கள் என அழைக்கவில்லை. இவர் தன் தலைவர் பணியை சிறப்பாக செய்துள்ளார். ஆனால் முதலில் இணைந்த நபர்தான் நிறைய மனிதர்களை ஆடவைத்தவர். இவர் தலைவர் அல்ல ஆனால் இவரது தலைமை பண்பு பலரை தலைவர் ஆகும் பாதைக்கு மாற்றியுள்ளது. இவர் தலைவர் மட்டுமல்ல தலைவர்களை உருவாக்கும் திறன் கொண்டவராக உள்ளார்.

எப்போதுமே சிறந்த தலைவர்கள் தனது குழுவுக்கு வெற்றியை தேடி தருபவர்களாக இருப்பார்கள். தலைவர்களை உருவாக்குபவர்கள் வெற்றியை இன்று உருவாக்குவது மட்டுமின்றி, சிறந்த தலைவரை உருவாக்கி நாளைய வெற்றியையும் உறுதி செய்பவராக இருப்பார். அதனால் தலைவராக ஆக வேண்டும் என்பவர்கள், தலைவர்களை உருவாக்கும் பண்பையும் வளர்த்துக் கொண்டால், வெற்றி அவர்கள் பெயரின் அழியாத விஷயமாகிவிடும்.
 

-ச.ஸ்ரீராம்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ