Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கடைசியாக எப்போது கடிதம் எழுதினீர்கள்..?

வீனயுகத்தில் நாம் இருப்பதால், எல்லோரிடமும் எப்போதும் பேசும் வசதியும், தகவல்களைப் பெறும் வசதியும் தற்போது வந்துவிட்டது. அதற்கேற்றாற்போல் பல்வேறு தகவல்தொடர்பு சாதனங்கள் உருவாகிவிட்டன. ஆனால் இவற்றையெல்லாம் கண்டுபிடிப்பதற்கு முன் இருந்த நிலையே வேறு.

ஓலைச்சுவடிகளில் எழுத்தாணி கொண்டு எழுதப்பட்ட திருக்குறள்தான் இன்று உலகப் பொதுமறையாக விளங்குகிறது. அதுபோல சில எழுத்தாளர்கள் மற்றும் தலைவர்கள் தங்கள் கைப்பட எழுதிய கடிதங்கள், புத்தகங்களாக வடிவம் பெற்றுள்ளன. ஆனால் தற்போதைய காலக்கட்டத்தில் எழுதப்படும் கடிதங்கள் குறைவு என்பது வேதனைக்குரியது.

இருவருக்கிடையே உள்ள தகவல் பரிமாற்றத்தை பகிர்ந்துகொள்ள பயன்படுத்தப்பட்ட முறையே அஞ்சல் சேவை ஆகும். இது கடிதம், தபால் என அழைக்கப்படும். மன்னர்கள் காலத்தில் கடிதப் போக்குவரத்து மற்றும் தூது ஓலை அனுப்புவதற்கு புறாக்கள் பயன்படுத்தப்பட்டன. இதற்காக புறாக்கள் தனியாக வளர்க்கப்பட்டு பழக்கப்படுத்தப்பட்டன. தற்போதும் ஒடிசாவில் காவல் துறையினர் ஒரு போலீஸ் ஸ்டேஷனில் இருந்து, மற்றொரு போலீஸ் ஸ்டேஷனுக்கு (ஒரு மலை கிராமத்திலிருந்து, மற்றொரு மலை கிராமத்துக்கு) சாலை வசதிகள் கிடையாததால் புறா விடு தூதுதான் நடத்துகின்றனர்.

காலம் செல்லச்செல்ல மன்னர்கள் தகவல்களை அனுப்புவதற்கு என்று தனியாக தூதுவர்களை நியமித்து இருந்தார்கள். எழுத்து முறை தொடங்கிய காலத்திலேயே தகவல்களையும் கடிதங்களையும் கொண்டுபோய் சேர்த்திருந்தாலும் முறைப்படியான அஞ்சல் சேவைகள் நீண்ட காலத்துக்குப் பின்னரே அறிமுகமாயின. அப்படித் தொடங்கப்பட்ட அஞ்சல் சேவை அசுர வளர்ச்சி கண்டது. அனைத்து நாடுகளிலும் அஞ்சல் துறையில் மாற்றம் ஏற்பட்டதுடன் வணிக நோக்கிலும் வெற்றி பெற்றது. இன்றும் எத்தனையோ முறைகளைப் புகுத்தி அஞ்சல் சேவை வளர்ச்சி அடைந்தாலும் தற்போது கடிதங்களின் வரத்துக் குறைவே.

உலக நாடுகளுடனும், உலக அறிஞர்களுடனும் நட்புறவு கொண்டிருந்தமைக்குக் கடிதத் தொடர்பும் ஒரு காரணம். எண்ணற்ற அறிஞர்களும் இலக்கியவாதிகளும் எழுதிய கடிதங்கள்தான் இன்று நம் கண் முன் புத்தகங்களாய் குவிந்து கிடக்கின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை நம் விடுதலை வீரர்களின் கடிதங்கள்தான் சுதந்திரம் பெறுவதற்கு உயிர்மூச்சாக இருந்தது.

பாரதி, வ.உ.சி போன்றோரின் கடிதங்கள் விடுதலை வேட்கைக்கு அடித்தளமிட்டன. ஜவஹர்லால் நேரு, சிறைச்சாலையில் இருந்தபடியே தன் மகள் இந்திராவுக்கு எழுதிய கடிதங்கள் உலக புகழ்பெற்றவை ஆகும். அரசியலில் அத்தனை வலிமை வாய்ந்த பெண்ணாக இந்திரா மாற அந்த கடிதங்களும் முக்கிய காரணம்.

அதுபோல் மேலைநாடுகளில் கார்ல் மார்க்ஸ், ஃபிரடெரிக் ஏங்கல்ஸ், லெனின், ஆபிரகாம் லிங்கன், ஐன்ஸ்டீன், மர்லின் மன்றோ போன்றோர் எழுதிய கடிதங்களும் அழியாப் புகழ்பெற்றவை. இன்று அவை, கோடிக்கணக்கில் ஏலம் போகின்றன. காரணம் அதில் நிரம்பியிருக்கும் கருத்துச் செறிவுகள்தான். தமிழகத்தைப் பொறுத்தவரை தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, மு.வ., கலைஞர் ஆகியோரின் கடிதங்கள் கருத்தாழமும், இலக்கிய நயமும் கொண்டவை. அழகான கையெழுத்தால் உருவான அந்தக் காலத்துக் கடிதங்கள்தான் இன்று அறிவான வரலாற்றுக்கு ஆயுதமாக இருக்கின்றன.

இதுகுறித்து கல்லூரி மாணவர் ஒருவர், “எனது தாத்தா பழைய காலத்துக் கடிதங்களை எல்லாம் பொக்கிஷமாக சேர்த்து வைத்திருந்தார். அதைப் பார்க்கும்போது எனக்கு ஆச்சர்யமாக இருக்கும். தலைவர்களோட கையெழுத்தும் கருத்தும் அழகாக இருக்கும். அந்தக் கடிதங்களை அப்படியே கண்ணில் எடுத்து ஒற்றிக்கொள்ளலாம். ஆனால் நவீன காலத்தில் எழுதப்படும் கடிதங்களுக்கு வேலையில்லாமல் போய்விட்டது'' என்றார் வேதனையுடன்.

“10 வருஷத்துக்கு முன்னாடி தூக்க முடியாத அளவுக்கு போட்டிக் கடிதங்கள், வாழ்த்துக் கடிதங்கள் எனப் பல கடிதங்கள் வரும். சாதாரணமா ஒரு வீட்டுக்கே ரெண்டு மூணு தபால் வரும். ஆனா இப்ப அவ்வளவு வர்றது இல்ல. எல்லாரும் இமெயில், ஃபேஸ்புக், வாட்ஸ்அப்னு போன்லயே தகவல் அனுப்பிடுறாங்க. அதனால தபால்களோட எண்ணிக்கை குறைஞ்சு போச்சு. இருந்தாலும் முக்கியமான தபால்கள் வந்துகொண்டுதான் இருக்கு'' என்றார் அஞ்சலக ஊழியர் ஒருவர்.

தனியார் கூரியர் சேவை நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் இளம்பெண் ஒருவர், “ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி ஒருநாளைக்கு சராசரியா 500-லே இருந்து 800 தபால் வரும். ஆனா இப்ப 200 வர்றதே கஷ்டம்தான். எங்க பார்த்தாலும் கூரியர் வந்துவிட்டது. அதோடு போன்லயும் கம்ப்யூட்டர்லயும் வேலைய முடிச்சுடுறாங்க. இன்னும் கொஞ்சம் காலத்துல கூரியர் சேவையே இல்லாமல் போயிடும் போலிருக்கு'' என்றார் கவலையுடன்.

கடிதங்கள் காலத்தின் பொக்கிஷம் என்பதை எதிர்கால தலைமுறைகள் அறிந்துகொள்ள வேண்டும். இன்றே நமக்கு பிடித்தவர்களுக்கு கடிதம் எழுதத் துவங்குவோம்!

- ஜெ.பிரகாஷ்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close