Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அரச இலையில் அசத்தல் ஓவியம்... கலையை சுவாசிக்கும் கமலநாதன்!

லைக்கு வயதில்லை என்று நிரூபிக்கிறார் சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்த கமலநாதன்.

எழுத்து, பேச்சு, நடிப்பு, இசை, கல்வி என்று தாங்கள் சார்ந்த துறைகளில் தங்கள் திறமைகளை நிலைநாட்ட இடை விடாமல் போராடிக் கொண்டே இருப்பவர்களில் சிலர் விரைவில் இலக்கை எட்டி விடுவர். அதன்பின் அவர்களி்ன் முயற்சி தொய்வடைந்துவிடும். ஆனால் சிலர் வாழ்வின் இறுதி வரைக் கூட முயன்று கொண்டே இருப்பர். அவர்களில் ஒருவர்தான் கமலநாதன்.

சென்னையில் நடக்கும் ஓவியக் கண்காட்சிகளிலும், ஓவியம் சார்ந்த நிகழ்வுகளிலும் ஓவியர் கமல நாதனையும் அவரது ஓவியங்களையும் கண்டிப்பாக பார்க்க முடியும். அரங்கில் தனது ஓவியங்களை பார்வைக்கு வைப்பதோடு நில்லாமல் பார்வையாளர்களிடம் தனது ஓவியம் குறித்தான உழைப்பை ஒரு இளைஞனுக்குரிய சுறுசுறுப்புடன் பகிர்ந்துகொள்வார். சிறு வயது முதலே ஓவியங்களில் தீராத காதல் கொண்ட கமலநாதன் குடும்ப சூழல் காரணமாக தொடர்ந்து படிக்கமுடியவில்லை.

ஓவியங்களையும் சரியாக கற்று, அடுத்தடுத்த தளங்களுக்கு  செல்ல சரியான வழிகாட்டுதல் இல்லை என்கிற அவர், சிறு பத்திரிகைகள், நாளிதழ்கள், புத்தகங்கள் போன்றவற்றை படித்தும், அதில் உள்ள ஓவியங்களை பார்த்து பார்த்து வரைய கற்றுக்கொண்டவர் என்பது ஆச்சர்யமானது.

வழக்கமான பெரிய பெரிய சார்ட்டுகளில் விலை அதிகமான வண்ண முலாம்களை பயன்படுத்தி நவீன ஓவியங்களை இவர் வரைவதில்லை. உதிர்ந்து விழும் அரச இலைகளை சேகரித்து, அவற்றை பதப்படுத்தி, அவற்றில்தான் இயற்கை, சுற்றுச் சூழலியல், பறவைகள் சார்ந்த ஓவியங்களை வித்தியாசமாக வரைந்து வருகிறார். காகிதங்கள், சார்ட்டுகளை வெட்டி பூக்கள், உருவங்கள் போன்று ஓவியங்களை வரைவதும் கமலநாதனின் பாணி.

"சின்ன வயசிலிருந்தே ஓவியங்கள் என்றால் எனக்கு அவ்வளவு பிரியம். பத்திரிக்கைகள்ல வர்ற ஓவியங்களை கண் சோர்ந்துபோகிற வரை எடுத்துப்பார்த்துட்டு இருப்பேன். அதைப்பார்த்து வரைய முயற்சிப்பேன். ஆனால் குடும்ப சூழல் சரியில்லாத காரணத்துனால ஓவியங்களை சரியா, முறையா கற்க முடியல. அதனால் பல படப்பிடிப்பு தளங்கள், ஓவிய கண்காட்சிகள் போறது, நாளிதழ்கள், புத்தகங்கள் படிக்கிறது, பாக்குறது மூலமா ஓவியங்களை கற்க தொடங்கினேன். இப்படித்தான் ஓவியம் எனக்கு பரிச்சயமாச்சு. ஓரளவு அதில் தேர்ச்சிபெற்றேன்.

ஆரம்பத்துல என்னோட ஓவியங்கள், ஆர்வத்தை பார்த்து பள்ளிக் குழந்தைகளுக்கு கத்துக்கொடுக்க கூப்பிட்டாங்க. ஆனால் அங்கு என்னால சுதந்திரமா செயல்பட முடியலை. அதனால அந்த வேலைகளை உதறிட்டேன். என் நண்பர்கள் பலர் சினிமா, பத்திரிகை னு பல துறைகளில் இருந்தாலும் பரிந்துரைகளால் இல்லாம என் திறமையால் மட்டுமே அங்கு பரிமளிக்கணும்ங்கற உறுதியோட போராடிட்டு இருக்கேன்.

காலங்கள் ஓடிருச்சு. இப்பவும் நான் சோர்ந்து போகாம, வித்தியாசமா இப்படி காய்ந்த அரச இலைகள், காகிதங்களில்  ஓவியங்களை வரைஞ்சுட்டு கண்காட்சிகள்ல அவற்றை வைக்கிறேன். காய்ந்த அரச இலைகளில் வரையும்போது பார்த்து பக்குவமா வரையனும் இல்லைனா இலை கிழிஞ்சுரும். எத்தனை கஷ்டம் இருந்தாலும் பார்வையாளர்கள் நேர்ல பாராட்டுறதுல கிடைக்கிற மகிழ்ச்சியே தனி” என உற்சாகம் தெறிக்க பேசுகிறார் கமலநாதன்.

“ சார்ட்டுகளை வெட்டி, ஒட்டி அதிலேயும் ஓவியங்கள்  தீட்டுவேன். இப்படி வரைந்தவைகளை 20 ரூபாயிலிருந்து 300 ரூபாய் வரை விற்பனை செய்றேன். சமயங்களில் ஓவியத்தை ரசிப்பவர்கள் வாங்கும் சூழலில் இல்லையென்றால் இலவசமாக கூட கொடுத்திடுவேன். குடும்ப வருமானம் போதுமானதா இல்லைனாலும் இந்த ஓவியங்கள் எனக்கு ஒருவித மன நிறைவை தருது. மற்ற வகை ஓவியங்களை வரைய நேரம் அதிகம் ஆகும். மக்கள் புரிந்து கொள்ளவும் கஷ்டமாகும்.

ஆனால் இந்த ஓவியங்கள் மிக எளிதாக வரையக்கூடியது.  மக்களுக்கும் எளிதில் புரிந்து விடும். பிடித்து விடும். குறிப்பாக குழந்தைகளுக்கு இந்த வகை ஓவியங்களை பார்த்த உடனேயே பிடித்துப் போகும். பெண்கள் இந்த அரச இலை ஓவியங்களை அலங்காரத்திற்கு வாங்கிட்டு போறாங்க.

என் வீடு, அளவில் சிறிய  வாடகை வீடுதான். ஆனால் பள்ளி விடுமுறை நாட்களில், பக்கத்துல இருக்குற குழந்தைகள் எல்லாரும் என் வீட்டுலதான் இருப்பாங்க. அவங்களுக்கு இந்த வகை ஓவியங்களை வரையும் முறைபற்றி சொல்லித்தந்துக்கிட்டு இருக்கேன். வீட்டின் சூழலைத்தாண்டி இந்த அரச இலை ஓவியங்களை அடுத்த தலைமுறைக்கு கொண்டு போக விரும்பி இதை செய்திட்டு இருக்கேன்.

காலங்கள் போயிருச்சு, தொழில்நுட்பம் வளர்ந்துருச்சுனு இப்பவரைக்கும் நான் சோர்ந்துப் போய் ஓய்வு எடுக்க போகல. கண்டிப்பா ஒரு இலக்கை அடைவேன். வாழ்கையோட எல்லா நிலையிலும் இந்த தள்ளாத வயசுலேயும் எனக்கு தன்னம்பிக்கை டானிக் என் மனைவிதான்.

வீட்டின் வறுமையை என்னிடம் காட்டிக்கொள்ளாமல் என் விருப்பத்திற்கு குறுக்கே நிற்காமல் என் உழைப்பை அங்கீகரிக்கிற முதல் ஜீவன் அவள்தான். அவள் பெருமைகொள்கிற அளவில் நான் சாதித்துக்காட்டுவேன்" என தன்னம்பிக்கை வழியும் குரலில் ஓவிய பேசுகிறார், அரச இலை ஓவியர் கமலநாதன். 

- கு.முத்துராஜா
படங்கள்:
அருண்    

(மாணவப் பத்திரிக்கையாளர்கள்)

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

நன்றி மறக்காத ஜெயலலிதா...! - மைசூரு முதல் - 81, போயஸ் கார்டன் வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்! - 8
placeholder

சசிகலா. ரத்த உறவு ஏதும் இல்லை; மைசூருவில் உடன் விளையாடியவரும் இல்லை; சர்ச் பார்க்கில் உடன் படித்தவரும் இல்லை; சாதாரணமாக திரைப்பட கேசட் வாடகைக்கு விட்டுக்கொண்டிருந்தவர்... அவ்வளவுதான்..! அவர் எப்படி இந்த அளவுக்கு ஜெயலலிதாவுக்கு நெருக்கமானார்... அவர் எப்படி தமிழ்நாட்டின் ஓர் அதிகார மையம் ஆனார்... அவரின் ஆசி கிடைத்துவிட்டால்போதும், எந்த உச்சத்தையும் தொடலாம் என்ற அளவுக்கு அவர் எப்படி உயர்ந்தார்...? அவர் குடும்பத்தால் தனக்குக் கெட்ட பெயர் என்று தெரிந்தபின்னும், அவரை முற்றும் முழுவதுமாக ஜெயலலிதா கைவிட மறுப்பதன் காரணம் என்ன...? சோ முதல் சுப்பிரமணிய சுவாமி வரை, எவ்வளவோ முயற்சித்துவிட்டார்கள். ஆனாலும், அவர்கள் நட்பைப் பிரிக்க முடியவில்லை என்ன காரணம்...? இதற்கான விடையைத் தெரிந்துகொள்ள வேண்டுமானால், ஜெயலலிதாவைப் புரிந்துகொள்ள வேண்டும். அவரைப் புரிந்துகொள்ள வேண்டுமானால், அவர் பள்ளிக் காலத்தில் நடந்த சம்பவத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

MUST READ