Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'தூரிகையும் வேண்டாம், காமிராவும் வேண்டாம் மரங்கள் போதும்...!'

ரைந்த படங்களையோ அல்லது எடுத்த புகைப்படங்களையோதான்  சட்டகத்துக்குள் அடைத்து, ஆணி அடித்து, சுவர்களில் மாட்டி அலங்கார அழகு பார்ப்போம்.

படங்களில் பலவாறான பொருட்கள், உருவங்கள், வண்ணங்கள் என்று பல விஷயங்கள் இருக்கும். அவற்றை ஓவியங்களாக வரைந்தோ அல்லது புகைப்படங்களாக எடுத்தோ ஒரு வடிவமாக கொண்டு வந்திருப்பார்கள். மாறாக அவற்றை எல்லாம் மரங்களை பயன்படுத்தியே உருவங்களாக கொண்டு வருவது என்பது சாதாரண விஷயமல்ல.

பார்க்க பல வண்ணங்களில் தீட்டப்பட்ட ஓவியங்களாகத்தான் தெரிகின்றன. ஆனால் அவைகள் ஓவியங்கள் அல்ல. மாறாக எந்த வண்ணங்கள் தேவைப்படுகின்றதோ அல்லது பிடிக்கின்றதோ அந்த நிறத்திலான மரக்கட்டைகளை சேகரித்து உருவங்களாக செதுக்கப்படுகின்றன. ஆனால் தொட்டுத் தடவிப் பார்த்தால்தான் அவைகள் மரங்கள் என்றே  உணர முடிகிறது. அந்தளவிற்கு நேர்த்தி.

உதாரணமாக வனத்தில் ஒரு குதிரை ஓடுவது போல இருந்தால், வனத்தின் தோற்றத்தையும்  அந்த குதிரையையும் மரங்களை கொண்டு இழைத்தே உண்மையான புகைப்பட வடிவத்திற்கு கொண்டு வருவதாகும். இதில் வண்ணங்கள் தீட்டாமல், தேவைப்படும் வண்ணங்களில் உள்ள மரங்களையே பயன்படுத்துதல் என்பது மிகவும் சவாலான, கடினமான செயலாகும். இந்த சவாலையும், கஷ்டத்தையும் தனது உழைப்பால் சாத்தியாமாக்கி வருகிறார் சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த சந்தகேஷ்.

தமிழகம் மட்டுமில்லாமல் பல மாநிலங்களுக்கும், கிராமங்களுக்கும் தொடர்ந்து பயணம் மேற்கொண்டு மரக்கடைகளில் கிடைக்கும் கழிவு மரங்களையும், ரீப்பர்களையும் சேகரித்து வைத்தால்தான் இந்த மர உருவ படங்களை உருவாக்க முடியுமாம். சின்ன சின்ன உருவங்கள் என்றால் கிடைக்கின்ற மரங்களை வைத்து உருவங்களை கொண்டு வந்து விடலாம். ஆனால் பெரிய பெரிய படங்கள் என்றால் வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு படங்கள்தான் கொண்டு வர முடியுமாம்.

இது பற்றி சந்தகேஷிடம் பேசினோம்.

" இதை நான் உழைப்பாகவோ, தொழிலாகவோ பார்க்கவில்லை. ஒரு கலையாகத்தான் பார்த்து வருகிறேன். படாக்மரம், நாகமரம், நூக்கமரம், பனஸ் மரக்கட்டை என்று வெளி மாநிலங்களிலிருந்து மட்டுமின்றி தமிழகத்தின் பல கிராமங்களுக்கு பயணித்து பல அரிய மரக்கட்டைகளை சேகரித்து, தேவை என்றால் பட்டையை உரித்தும், மரக்கடைகளில் கிடைக்கும் கழிவுக் கட்டைகளை சேகரித்தும் வருகிறோம். பிறகு தேவைப்படும் உருவங்களை செதுக்கி, பசையால் ஒட்டி தேவையென்றால் மட்டுமே சிறிய கோட்டோவியங்களை வரைவோம். பதிக்கப்படும் உருவம் பாதிக்கு பாதி அளவு ப்ரேமுக்குள் அழுத்தி பதிக்கப்பட்டால்தான் ப்ரேமும் உருவங்களும் மிக உறுதியாக இருக்கும். கரையான்கள் அரிக்காமல் இருக்க குறிப்பிட்ட திரவங்களை பூசுவோம். மர வகைகளிலும் நாம் விரும்பும் எல்லா வண்ணங்களும் கிடைக்கின்றன. நாம் தேடி தேடி அலைந்தால்தான் கொஞ்சமாவது கிடைக்கும்.

சின்ன உருவங்கள் என்றால் இரண்டு மூன்று வகை மர இனங்கள் பயன்படுத்தப்படும். அதுவே பெரிய அளவு என்றால் பல வண்ணங்களுக்காக நூறுக்கு மேற்பட்ட மர வகைகளை பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்கும். இவ்வளவு மரத்தேவைகள் உள்ள இந்த கலைக்காக நாங்கள் ஒரு போதும் மரங்களை வெட்டியதே கிடையாது. மரக்கடைகளில் அறுவையில் கிடைக்கும் கழிவுகளை மட்டும் வைத்துதான் இந்த கலையில் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம்

உதாரணமாக, ஒரு பெண் நடந்து போகின்ற மாதிரியும், குதிரை ஓடி வருவது  மாதிரியும் உள்ள சட்டகத்தின் படங்களில் ஒவ்வொன்றிலும் நூறுக்கும் மேற்பட்ட மரவகைகள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. இவைகள் சிறந்த கைவினைக்கான மத்திய, மாநில விருதுகளை  வாங்கி உள்ளன. இந்த வேலை மிகவும் நுணுக்கமாக செய்யக்கூடியது. மற்ற கடைகளில் வேலை செய்வது போல இருக்காது. இதுவும் ஒரு நுட்பமான கலையாகும். இதில் எவ்வளவு பேரின் ஈடுபாடும், குழுவின் உழைப்பும் இருக்கிறது என்பதை வேலை முடிந்து பார்த்தால்தான் தெரியும். மரவகைகள் விரைவாக கிடைத்துவிட்டால் பிரச்சனை இல்லை. கிடைக்கவில்லை என்றால் வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு சட்டக உருவங்கள்தான்  செதுக்க முடியும்.

வெளி மாநிலத்தவர்கள் இவற்றை விரும்பி வாங்கி செல்கின்றனர். அவர்கள் விரும்பும் உருவங்களையும் உருவாக்கி தருகிறோம். இவ்வளவு சிறப்பும், உழைப்பும் உள்ள இந்த படங்களில் ஒன்று விற்பனை ஆவதே பெரும்பாடாக உள்ளது. ஏனென்றால் இவற்றின் தொடக்க விலையே ஆயிரத்தில்தான் தொடங்கும். எவ்வளவு சிரமங்கள் இருந்தாலும் இந்தக் கலையின் மீதான ஆர்வத்தில் இதை விடமுடியவில்லை." என மரங்களின் மீதான உறவுடனும், அக்கறையுடனும் பேசினார் சந்தகேஷ்.

- கு.முத்துராஜா
படங்கள்:
அருண்

(மாணவப் பத்திரிக்கையாளர்கள்)

எடிட்டர் சாய்ஸ்