Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விகடனில் துவங்கிய ஐஏஎஸ் பயணம்!

மீபத்தில் வெளியான ஐ.ஏ.எஸ். தேர்வு முடிவுகளில் மதுரையைச் சேர்ந்த உமேஷ்,  இந்திய அளவில் 77வது இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

ஐ.ஏ.எஸ். படிக்க வேண்டும் என்ற ஆசையே விகடனிலிருந்துதான் ஆரம்பமானது என்று சொல்லும் உமேஷை, தொடர்ந்து பேச அழைத்தோம்.

"சிறு வயது முதலே நான் 'விகடன்' ரசிகன். தொடர்ந்து 'ஆனந்த விகடன்' படிப்பேன். அப்போது நான் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். ஆனந்த விகடனில் சுஜாதா எழுதிய 'கற்றதும், பெற்றதும்' என்ற தொடர் வெளியானது. மிகவும் இன்ட்ரஸ்ட்டாக இருக்கும். அதனை தொடர்ந்து, ஆர்வமாக படிக்க ஆரம்பித்தேன்.

அந்த தொடரின்மூலம், என்னுடைய ஜன்னல்களை திறந்துவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். அதில், ஒரு முறை நவீன இந்தியாவின் எதிர்காலம் இளம் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கையில்தான் இருக்கிறது என்று சுஜாதா சொல்லியிருந்தார்.

இந்த வரிகள்தான் என் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. நானும் ஐ.ஏ.எஸ். படிக்கலாமே என்று முதன்முதலில் அன்றுதான் தோன்றியது. ஐ.ஏ.எஸ். படிக்க வேண்டும் என்று ஆசையிருந்தாலும், தீர்க்கமாக என்னால் முடிவெடுக்க தெரியவில்லை அந்த வயதில். அதனால் என் பெற்றோர்களின் விருப்பபடி என்ஜினியரிங் படித்தேன். அங்கே என் நண்பர்கள் பலரும் ஐ.ஏ.எஸ்.க்கு படித்துக் கொண்டிருந்தனர். அவர்களைப் பார்த்து எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது. அதன் பின் ஒரே முடிவாக ஐ.ஏ.எஸ்.தான் ஆக வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டேன்.

எந்த பிரசரும் இல்லை எனக்கு. அதனால் நிம்மதியாக ஐ.ஏ.எஸ். மட்டுமே என்னுடைய கனவாக நினைத்து செயல்பட ஆரம்பித்தேன். நிறைய புத்தகங்கள் வாசிக்க கிடைத்தது. 2012ஆம் ஆண்டு தேர்வு எழுதினேன். அப்போது Prelims   தேர்வு கிளியர் செய்துவிட்டேன். Main தேர்வு கிளியர் செய்ய முடியவில்லை. பின்னர் 2013ஆம் ஆண்டு தேர்வு எழுதிய போது Prelims கூட என்னால் கிளியர் செய்ய முடியவில்லை. பின்னர் 2014 ஆம் ஆண்டும் தேர்வெழுதினேன். அதில்தான் வெற்றி பெற்றேன்.

ஐ.ஏ.எஸ்.-ஐ பொறுத்தவரையில் மிகவும் விசாலமான பார்வை இருக்க வேண்டும். அதற்கு நிறையவே படிக்க வேண்டும். எவ்ளோ படித்தாலும் போதாது. இதற்கு அன்றாட நிகழ்வுகளை தெரிந்து கொண்டேயிருக்க வேண்டும்.

ஐ.ஏ.எஸ். தேர்வு என்பது த்ரீ ஸ்டெப் அப்ரோச் என்றுதான் சொல்ல வேண்டும். Prelims க்கு நன்றாக படித்திருக்க வேண்டும், மெயின் தேர்வுக்கு நன்றாக எழுத தெரிந்திருக்க வேண்டும், நேர்காணலுக்கு நன்றாக பேச தெரிந்திருக்க வேண்டும்.

Prelims ல் 100 கேள்விகள் கேட்கிறார்கள் என்றால், அதில் 25 கேள்விகள் மிகவும் கடுமையாக கேட்டிருப்பார்கள். மீதமிருக்கும் 75 கேள்விகளைதான் நாம் டார்கெட் வைத்து படிக்கலாம். இதற்கெல்லாம் நெகட்டிவ் மார்க் இருப்பதால் நமக்கு ஊர்ஜிதமாய் தெரியாமல் இருக்கும் கேள்விகளுக்கு பதிலளிக்க கூடாது. 2013 ஆம் ஆண்டு நான் Prelims கிளியர் செய்யாததற்கு இதுவே காரணம்.

நாம் படித்ததை தெளிவாக, கோர்வையாக ஒரு பாஸிட்டிவ் திங்கிங் உடன் எழுத தெரிந்திருக்க வேண்டும். தேர்வு எழுதும் மாணவனைப் போல அல்லாமல் பிரச்னைகளை தீர்க்கும் மனோபவத்துடன் எழுத வேண்டும். அன்றாடம் செய்தித்தாள்களை தொடர்ந்து படிக்க வேண்டும். பொலிட்டிக்கல் சயின்ஸ் தேர்வின்போது அன்றைய தினம் காலையில் படித்த செய்திக்கு தொடர்புடைய கேள்வியை கேட்டிருந்தனர். இதனால் ஒவ்வொருநாளும் தேர்வுக்கு தயாராவது போல் விழிப்புடன் இருக்க வேண்டும்.

இப்போது தினமும் செய்தித்தாள்களை படிக்க வேண்டும் என்று சொல்லி சொல்லியே பலரும் படிக்க ஆரம்பித்துவிட்டனர் அவர்களிலிருந்து நீங்கள் சொல்லப்போகும் விடை வித்யாசமாக இருக்க வேண்டும். உங்களது பதில் புதுமையாக இருக்க வேண்டுமாயின் உங்களது பார்வையை விசாலப்படுத்த வேண்டும். அதற்கு நிறைய படிக்க வேண்டும். பல்வேறு செய்தி தளங்கள் இப்போது இருக்கிறது. அவற்றிலிருந்து எல்லாம் படிக்க வேண்டும்.

நேர்காணலை பொறுத்தவரையில் நமக்கு என்ன தெரிந்திருக்கிறது என்று அவர்கள் தெரிந்து கொள்ள விரும்பவில்லை. நமக்கு விடை தெரியாதபோது நாம் எப்படி ரியாக்ட் செய்கிறோம் என்பதை பார்ப்பதற்கான இடமாகத்தான் அதனை பார்க்கிறேன்.

- ந.ஆஷிகா

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close