Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பூப்பெய்துதல் விழா: திருநங்கைகள் உலக கொண்டாட்டம்

புதுச்சேரி: அறுவை சிகிச்சையின் மூலம் பெண்ணாக மாறியவர்களுக்கு பூப்புனித நீராட்டு விழாவினை பிரமாண்டமாக நடத்தி அசத்தி இருக்கிறார்கள் திருநங்கைகள்.

ஆச்சர்யமாக இருக்கிறதா ? நாம் சர்வ சாதாரணமாக அலட்சியப் பார்வையுடன் கடந்து செல்லும் திருநங்கைகளின் உலகத்தில் நிறைய ஆச்சர்யங்களும் சுவாரஸ்யங்களும் இருக்கின்றன. அவர்களுக்குள் இருக்கும் சடங்குகள், சம்பிரதாயங்கள் ஏராளம். அதில் ஒன்றுதான் ‘’பால் ஊட்டு விழா’’.  நாம் கொண்டாடும் பூப்புனித நீராட்டு விழாவைத்தான் இவர்கள் இப்படி அழைக்கிறார்கள்.
    
நம் பார்வைக்கு அனைவருமே திருநங்கைகளாக மட்டுமே தெரிந்தாலும் இவர்களுக்குள்ளும் இரண்டு பிரிவுகள் இருக்கின்றன. ‘’படா வழி’’ ‘’சோட்டா வழி’’ அதாவது பெரிய வீடு - சிறிய வீடு. அக்காலத்தில் ஹைதராபாத்தில் பெரிய அரண்மனை, சிறிய அரண்மனை என்ற இரண்டிலும் ஏராளமான திருநங்கைகள் பணி புரிந்திருக்கின்றனர். அதன்பின் அதன் வழி வந்தவர்கள் தங்களை அதன் மூலமாகவே அடையாளப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

இந்த இரண்டு பிரிவுகளுக்கும் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலைவி என்று ஒருவர் இருப்பார். அவரேதான் இவர்களுக்கு அம்மாவாகவும் இருப்பார்.  ஹார்மோன் குறைபாடுகளுடன் ஆணாகவே பிறந்தாலும் ஒரு கட்டத்தில் உள்ளுக்குள் தன்னைப் பெண்ணாகவே உணரத் தொடங்குவார்கள்.

அப்போது இது நமக்கான உலகம் இல்லை என்று உணரத் தொடங்கி, இந்த பொது சமூகத்தில் இருந்து விலகி தம்மைப் போன்று இருக்கும் திருநங்கைகளை நாடுகிறார்கள். அப்போது இவர்கள் பெரிய வீடோ, சிறிய வீடோ அப்போது எங்கு சென்றாலும் அந்த அம்மாவால் தத்தெடுக்கப்பட்டு இவரை மகளாக ஏற்றுக் கொள்கிறார்கள்.

தமிழ்நாட்டில் எந்த திருநங்கையாக இருந்தாலும் அவர்கள் கண்டிப்பாக பெரிய அல்லது சிறிய வீட்டைச் சேர்ந்தவர்களாகத்தான் இருப்பார்கள்.
    
அதன் பின்னர் அந்த அம்மாவின் உதவியுடன் அறுவை சிகிச்சை மூலம் முழு பெண்ணாக மாறுகிறார்கள். இந்த அறுவை சிகிச்சை முடிந்த நாற்பது நாட்களுக்கு, எந்த ஆணையும் இவர்கள் பார்த்துவிடாமல் பார்த்துக் கொள்கிறார்கள், இவர்களை தத்தெடுத்தவர்கள். அதேபோல அந்த நாற்பது நாட்களும் இவர்கள் பச்சை நிறப் புடவைகளை மட்டுமே அணிய வேண்டும் என்பது கட்டாயம்.

சடங்குகள் அனைத்தும் முடிந்ததும்தான் கலர் புடவை அணிய முடியும். அதன்படி 39-வது நாள் நள்ளிரவில் அந்தப் பெண்ணுக்கான சடங்குகளை விமரிசையாக செய்து தங்களுடன் இணைத்துக் கொள்கிறார்கள். இந்த நிகழ்ச்சி நள்ளிரவில் ஆரம்பித்து விடிவதற்குள்ளாகவே முடிந்துவிடும். பெரும்பாலும் இந்த நிகழ்வுகளை வெளி உலகத்திற்கு தெரியாமல் பார்த்துக் கொள்வார்கள்.
    
அப்படி அக்‌ஷரா, டயானா என்ற இரு பெண்களுக்குத்தான் பால் ஊட்டும் விழா புதுச்சேரி நோனாங் குப்பத்தில் உள்ள பொன் பரிசு சித்ரா என்ற திருமண மண்டபத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. பிரமாண்ட பேனர் வைத்து, செண்டை மேளங்கள் முழங்க, இவர்கள் விழாவை ஆரம்பித்த விதம் அந்த பகுதி மக்களை ஆச்சர்யத்தில் மூழ்க வைத்துவிட்டது.

அதுமட்டுமல்லாமல் நடனக் குழு மற்றும் வரவேற்புக் குழு எனத் தனித் தனியே ஏற்பாடுகள் செய்தவர்கள், இரவு அசைவ உண விருந்தளித்து அசத்தினார்கள். தமிழகம், புதுவை மட்டுமல்லாமல் அனைத்து மாநிலங்களில் இருந்தும் திருநங்கையினரும், அவர்களின் சங்கத் தலைவிகளும் வரவழைக்கப்பட்டிருந்தனர்.

நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த கிரிஜா நாயக்கிடம் பேசினோம்.‘’முன்பெல்லாம் எங்களுக்கான அங்கீகாரம் இல்லாததால்தான் இப்படியான விழாவை வெளியே தெரியாமல்தான் நடத்திக் கொண்டிருந் தோம். இப்போதெல்லாம் அப்படி இல்லை. நாங்களும் மற்றவர்களைப் போல வாழ்கிறோம். எங்களை மூன்றாம் பாலினமாக அரசு அறிவித்திருப்பது எங்களுக்கான மரியாதையை கூட்டியிருக்கிறது.

எங்களுக்கும் உறவினர்கள் இருக்கிறார்கள். இப்படியான விழாக்களில் நாங்களும் சீர் வரிசைகள் செய்வோம். முதல் முறையாக இந்தியா முழுவதும் இருக்கும் அனைத்து திருநங்கைத் தலைவிகளையும் இந்த விழாவுக்கு அழைத்திருக்கிறோம்’’ என்றார்.

நடனம் நிகழ்ச்சியில் நன்றாக ஆடிய பெண்களுக்கு பணமும், புடவைகளைகளையும் பரிசாக அளித்து மகிழ்ந்தனர். பொது சமூகத்தில் இவர்களுக்குக் கிடைக்கும் வலிகளை எல்லாம் மறந்து தங்களுக்கான உலகத்தில் இப்படியான நிகழ்வுகளில்தான் தங்களைத் தேற்றிக் கொள்கிறார்கள்.

- ஜெ.முருகன்

படங்கள் :
அ. குரூஸ்தனம்
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ