Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கிழிந்த ரூபாய் நோட்டுக்கு புது ரூபாய் தாள்கள்!

கிழிந்த ரூபாய் நோட்டுக்களை நேரடியாக சென்று  வாங்கி,  பழைய ரூபாய் நோட்டுக்களுக்கு பதிலாக புதிய நோட்டுக்களை தந்து பழசுக்கு மவுசு சேர்த்து வருகிறார் தேனியை சேர்ந்த சோமசுந்தரம் என்பவர்.

தனது டூ வீலரில் இது பற்றிய விளம்பரங்களோடு ஊர் ஊராக சுற்றி வரும் சோமசுந்தரத்தை, ராஜபாளையத்தில் நோட்டும் கையுமாக பிடித்து பேச்சு கொடுத்தோம்.

"சொந்த ஊர் தேனி. 10 வருடங்களுக்கு முன்பு தேனியில் ஒரு லாட்ஜில் அட்டெண்டராக  வேலை செய்து வந்தேன். அங்கு வரும் வாடிக்கையாளர்கள் எனது சர்வீசை பார்த்து பாராட்டி, டிப்ஸ் தருவார்கள். அதில் சில நேரம் கிழிந்த நோட்டுக்கள் இருக்கும். கைக்கு கிடைச்சது வாய்க்கு எட்டவில்லையே என்ற கதையாக இந்த கிழிஞ்ச நோட்டுக்களை வச்சு என்ன செய்யுறதுன்னு தெரியாம முழுச்சிக்கிட்டு இருப்பேன். அப்போதுதான் கிழிந்த ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் நேரடியாக சென்று மாற்றிக்கொள்ளலாம் என்று நண்பர்கள் சிலர் ஐடியா சொன்னார்கள்.

பிறகென்ன, அடிக்கடி வங்கிக்கு சென்று கிழிந்த நோட்டுக்களை கொடுத்து புது நோட்டுக்களாக வாங்கிட்டு வருவேன். அப்போது வங்கியில் உள்ள அதிகாரி ஒருவர், பழைய கிழிந்த நோட்டுக்களையும், எலி மற்றும் கரையான் அரித்த நோட்டுக்களையும் வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம். இதற்கு குறிப்பிட்ட தொகை கமிஷனாக கிடைக்கும் என்று ஐடியா கொடுத்தார். இது நல்ல யோசனையாக இருக்கேன்னு நினைத்து பிறகு இதை தொழிலாக செய்ய ஆரம்பித்தேன்.

முதலில் தேனியில் மட்டும் இதை செய்த நான்,  பிறகு படிப்படியாக வெளியூர்களுக்கும் செல்ல ஆரம்பித்தேன். எனது டூ வீலரில் இது பற்றி விளம்பரம் செய்து ஊர் ஊராக சுற்றி வருகிறேன். தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடாகாவுக்கும் சென்று பழைய நோட்டுக்களை வாங்கிக்கொண்டு புது ரூபாய் நோட்டுக்களை தந்து வருகிறேன்.

கிழிந்த ரூபாய் நோட்டுக்கள், எலி கடித்த நோட்டுக்கள், தீயில் கருகிய நோட்டுக்கள், கரையான் அரித்த ரூபாய் நோட்டுக்களை பொது மக்களிடம் இருந்து வாங்கி, அவர்களுக்கு என் கைவசம் உள்ள புதிய நோட்டுக்களை பழசுக்கு புதுசு என்ற வகையில் கை மேல் கொடுத்து விடுவேன்.

பிறகு கிழிந்த நோட்டுக்களை, சென்னையில் ரிசர்வ் பாங்க்கில் கொடுத்து புதிய ரூபாய் தாள்களாக மாற்றிக்கொள்வேன். ஒரு நாளைக்கு  குறைந்த பட்சம் ஆயிரம் ரூபாயில் இருந்து 10 ஆயிரம் ரூபாய் வரை ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொடுத்துள்ளேன். அதிக பட்சமாக ஒரு வியாபாரியிடம் சில ஆண்டுகளுக்கு முன்பு 60 ஆயிரம் ரூபாய்க்கு கிழிந்த நோட்டுக்களை வாங்கிக்கொண்டு, புது நோட்டுக்களாக திருப்பி தந்துள்ளேன்.

ஒரு நாளைக்கு 200 கி.மீ., வரை ஊர் ஊராக சுற்றி வருவேன். கை வசம் ரூ. 5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை வைத்திருப்பேன். அதற்கு மேல் பணத்தேவை இருந்தால் ஏ. டி. எம்.,  இல் இருந்து பணத்தை எடுத்து தந்து  விடுவேன். சில பேர் கள்ள நோட்டுக்களை கிழிந்த நோட்டுக்கள் மாதிரி நம்மக்கிட்ட தள்ளி விடப்பார்ப்பார்கள். அது கள்ள நோட்டுக்கள் என்பதை எளிதாக கண்டுபிடித்துவிட்டு,  அவர்களிடம் இது வங்கியில் பாஸ் ஆகாது என்று சொல்லி தவிர்த்து விடுவேன்.

தமிழகத்தில் எனக்கு எல்லா ஊர்களும் அத்துப்படி. பொதுமக்களை விட வியாபாரிகள்தான் எனக்கு ரெகுலர் கஷ்டமர்கள். ஒவ்வொரு ஊரிலும் வாடிக்கையாளர்களிடம் கிழிந்த நோட்டுக்களை, புதிய நோட்டுக்களாக மாற்றிக்கொள்ளலாம் என்று ஒரு சின்ன கார்டில் அச்சடித்து கொடுத்து விடுவேன்.

அதில் உள்ள எனது செல்போன் நம்பரை பார்த்து பலர் தொடர்பு கொள்வார்கள். சில நேரங்களில் பழைய தாள்கள் அதிகம் சேர்ந்த வாடிக்கையாளர்கள் போன் செய்வார்கள். நான் குறிப்பிட்ட நாளில் சென்று வாங்கி விட்டு, சூட்டோடு சூட்டாக புது நோட்டுக்களை தந்து விடுவேன். இந்த தொழிலில் கிட்டத்தட்ட எனக்கு 20 வருச சர்வீஸ்" என்று பெருமிதத்துடன் சொல்கிறார் தேனி சோமசுந்தரம்.

"இதுவும் ஒரு வகையில் வியாபாரம் என்றாலும், பொதுமக்கள் வங்கி களுக்கு நேரிடையாக சென்று அலையாமல் நேரடியாக மாற்றிக்கொள் ளும் வகையில் இதை சேவையாகத்தான் கருதுகிறேன்“ கூடுதல் விளக்கம் தருகிறார் சோமசுந்தரம்.

- எம்.கார்த்தி
படங்கள்:
ஆர்.எம்.முத்துராஜ்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ