Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆர்.கே. நகர் விற்பனைக்கு...!

மீபத்தில் சென்னை, ஆர்.கே. நகர் தொகுதிக்கு இடைதேர்தல் நடந்தது. இதில் தமிழக முதல்வர் வெற்றி பெற்றார். ஆனால், தற்போது அந்த தொகுதியின் பெயரில் தஞ்சாவூரில் வீட்டு மனைகள் விற்பனை செய்யப்பட்டு வருவது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

விளை நிலங்கள் எல்லாம் வீட்டுமனைகளாக மாறி வரும் இந்த கால சூழ்நிலையில்,  அதற்கு முக்கிய தலைவர்கள் மற்றும் பிரபலமானவர்களின் பெயர்களை வைப்பது விற்பனையாளர்களின் வழக்கம். ஆனால், இடைதேர்தல் நடந்த ஒரு தொகுதியின் பெயரில் மனைகள் விற்பனை செய்யபட்டு வருவது இதுதான் முதல் முறையாக இருக்கும். தஞ்சாவூர் டூ மன்னார்குடி சாலையில், பனையகோட்டை அருகில் உருவாக்கபட்டுள்ளது இந்த ஆர்.கே நகர். மாவட்டம் முழுக்க எல்லா இடங்களிலும் பிளக்ஸ் போர்டு வைத்து பிரமாண்ட விளம்பரமும் செய்துள்ளனர்.

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றதையடுத்து, முதல்வர் பதவியை ஜெயலலிதா இழந்தார். பின்பு நடந்த மேல் முறையீட்டில் அவர் நிரபராதி என தீர்பளித்தது நீதிமன்றம். அதன் பிறகு அவர் முதல்வராக பொறுப்பேற்றார். இதைத்தொடர்ந்து, சென்னை, ஆர்.கே. நகர் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் ஜெயலலிதா போட்டியிட்டு வரலாறு காணாத வகையில் வெற்றி பெற்றார். இதனை அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். இதன் மூலம் ஆர்.கே. நகர்,  நாடு முழுக்க பிரபலமடைந்தது. தற்போது அந்த பெயரில் தஞ்சாவூரில் வீட்டுமனைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதன் உரிமையாளர்களில் ஒருவரான ராமராஜிடம் பேசினோம். 

''நாங்கள் பல வருடங்களாக ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறோம். சமீபத்தில்தான் இந்த மனைகளை உருவாக்கினோம். வியாபாரத்திற்கு விளம்பரம் என்பது ரொம்ப முக்கியம். அந்த வகையில் சமீபத்தில் இடைதேர்தல் நடந்த ஆர்.கே நகர் தொகுதியின் பெயரை வைக்கலாம் என முடிவு செய்தோம். அந்த பெயர் பத்திரிகைகள் மற்றும் மீடியாக்களில் அதிகம் உச்சரிக்கபட்ட பெயர். அதனை வைத்தால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என நினைத்தோம். அதற்கு ஏற்றார் போல் எங்கள் பெயரின் முதல் எழுத்துக்களும் அமைந்தன. மற்றபடி நாங்கள் அ.தி.மு.க. கட்சி காரர்கள் எல்லாம் கிடையாது'' என்றார்.

ஆர்.கே. நகர் விற்பனைக்கு என்ற பெயரில் பல இடங்களில் வைக்கப்பட்டுள்ள பேனர்களையும் பார்த்தவுடன், ஜெயலலிதா தொகுதியா? என மக்கள் ஒரு நிமிடம் நின்று, யோசித்து செல்கின்றனர்.

- கே.குணசீலன்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close