Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

புரோகிதர், மந்திரம் கிடையாது... குறளில்தான் திருமணம்... கலக்கும் திருக்குறள் ஆசிரியர்!

திருவள்ளுவருக்கும், குமரி மாவட்டத்துக்கும் நெருங்கிய தொடர்பு தொண்டுதொட்டே இருந்து வருகிறது.

வள்ளுவர் பெயரில் மலை, நாடு, நகர்  என குமரி மாவட்டத்தில் இருந்தது. 133 அடியிலுள்ள திருவள்ளுவர் சிலை கன்னியாகுமரியின் அடையாளமாக மாறிப் போய் விட்டது. திருவள்ளுவர் பெயரில் பல அமைப்புகளும் இப்போது குமரியில் செயல்பட்டு வருகிறது.

வருடம் ஒருமுறை மட்டும் நடக்கும் திருக்குறள் பூஜையும் சுசீந்திரம் அருகே உள்ள நல்லூரில் நடைப்பெற்று வருகிறது. இவைகளை தவிர்த்து திருவள்ளுவருக்கு பெருமை சேர்க்கும் விதமாக திருக்குறள் வகுப்பு,  'குறளகம்' என்கிற அமைப்பு மூலமாக பயிற்றுவிக்கப்படுகிறது.

அதன் நிறுவனரும், திருக்குறள் ஆசிரியருமான தமிழ்க்குழவி விசுவநாதனை சந்தித்து பேசிய போது, "என் இயற்பெயர் விசுவநாதன். 1970ல் இருந்து 'தமிழ்க்குழவி' என்கிற பெயரில் மரபுக் கவிதைகளை எழுதி வருகிறேன். நான் பி.எஸ்.என்.எல்-ல டிவிசனல் என்ஜீனியராக இருந்தேன். சிறுவயதில் இருந்தே குறள் மீது ஒரு அதீத ஈடுபாடு உண்டு.

ஊட்டி, கோவை பகுதியில் வேலை பார்க்கும் போதே இலக்கிய நிகழ்ச்சிகளை அங்குள்ள பிள்ளைகளுக்கு நடத்தி வந்தேன். சுமார் 300க்கு மேற்பட்ட இலக்கிய நிகழ்வுகளில் கலந்திருக்கேன். கடந்த 2010ல் ஓய்வு பெற்றேன். அதன் பிறகு என்ன செய்வது என யோசித்துக் கொண்டிருந்த போது, தினசரி செய்தித் தாள்களில் வருகிற பாலியல் தொல்லை, திருட்டு, மதுவுக்கு அடிமை போன்ற செய்திகள் என்னை கொஞ்சம் சிந்திக்க வைத்தது. இளைய சமுதாயத்தை மீட்டெடுக்க குறள்தான் சிறந்த வழி என நினைத்தேன். அதற்காக 'குறளகம்' என்கிற அமைப்பை நிறுவி, குறள் பயிற்றுவிக்கத் தொடங்கினேன். முதலில் 40 மாணவர்கள் வந்தனர். அது படிப்படியாக குறைந்து 15 மாணவர்களானது. அதன்பின் பெரிய அளவில் மாணவர்கள் கற்க விரும்பவில்லை.
 

தமிழக அரசு 1330 குறள் ஒப்பிக்கிற மாணவர்களுக்கு ரூபாய் 10,000 பரிசு வழங்கி ஊக்குவிக்கிற செய்தியை அறிந்து, பல மாணவர்களை தயார் செய்தேன். அவர்களை நன்கு பயிற்றுவித்து, தமிழ் வளர்ச்சித்துறைக்கு அழைத்து சென்று அங்கே ஒப்புவித்து,  தமிழக அரசின் மூலமாக எனது மாணவர்கள் 2013ல் 5 பேரும், 2014ல் ஒருத்தரும், இந்த ஆண்டு 4 பேரும் தலா 10,000 ரூபாய் பரிசு பெற்றுள்ளனர்.

திருக்குறளை மாணவர்களுக்கு மிகவும் எளிய முறையில்தான் கற்பிக்கிறேன். அவர்களை குறள் நெறிபடி வாழ அவர்களுக்கு வழிகாட்டியாகவும் இருக்கிறேன். குறள் சொல்லுவது போல கள்ளுண்ணாமை, புலால் உண்ணாமையை கடைப்பிடிக்கிறேன். நம் அன்றாட வாழ்க்கையில் நேரிடும் பிரச்னைகளுக்கு குறளிலேயே  தீர்வு இருக்கிறது.
 

அறத்துப்பால்-தனிமனித ஒழுக்கத்தையும், பொருட்பால்- சமுதாய பங்களிப்பு, அரசு, கல்வி போன்றவற்றையும், இன்பத்துப் பால்- நாகரிகம், பாலியல் உணர்வு, எப்படிப்பட்ட அன்பு தேவை என பல நல்ல கருத்துக்களை சொல்கிறது. இதுவரை இரண்டு குறள்வழி திருமணமும், ஒரு குறள்வழி வளைகாப்பும் நடத்தி வைத்துள்ளேன்.  இரண்டு குறள்வழி திருமணத்தையும் பொறியியல் பட்டதாரிகளுக்கு செய்து வைத்தேன். அதாவது திருமணத்தில் புரோகிதர் கிடையாது. சிறுவர்கள் குறளை மந்திரமாக சொல்வார்கள். ஒரு பெரியவர் தாலி எடுத்துக் கொடுக்க திருமணம் நடைபெறும். அதன்பின் ஒவ்வொருவரும் ஒரு குறளைச் சொல்லி மணமக்களை வாழ்த்துவார்கள். வளைகாப்பில் ஒரு குறளைச் சொல்லி, வளையலை கர்ப்பிணி பெண்ணின் கையில் போடுவார்கள்.

பள்ளி மாணவர்களுக்கு குறள் போட்டிகள் நடத்தியும், புதிதாக பள்ளியில் சேர்க்கும் மாணவர்களுக்கு தமிழில் பெயர் இருந்தால் அவர்களுக்கும் பரிசுகளை கொடுக்கிறேன். இன்னொரு சிறப்பு என்னவென்றால் குறள் வகுப்புக்கு மகனை அழைத்து வந்த தாய், மகன் கற்பதை பார்த்து தானும் 1330 குறளை மனனம் செய்து ஒப்புவித்து விட்டார்.

என்னிடம் குறள் வகுப்புக்கு வரும் மாணவர்களுக்கு இலவசமாகதான் கற்றுக் கொடுக்கிறேன். இது மட்டுமல்ல, ஒவியப் பயிற்சியையும் அளிக்கிறேன். குறளகத்தில் திருக்குறள் நூலகத்தை அமைத்துள்ளேன். அதில் குறள் சார்ந்த பல்வேறு நூல்களை பலரும் இலவசமாக பயன்படுத்தி வருகின்றனர். இதுவரை 12 புத்தகங்கள் எழுதியிருக்கிறேன். பல்வேறு அமைப்புகளிலிருந்து 10 விருதுகள் தந்து என்னை பாராட்டியிருக்கிறார்கள்" என்கிறார் தமிழ்க்குழவி.

குறளை கற்பிக்க மட்டுமல்ல, அதன்படி வாழவும் கற்றுக் கொடுக்கும் தமிழ்க்குழவியும் "தமிழ்கூறும் நல்லுலகில்" தனக்கென தனி இடம் பிடித்து விட்டார்.

-த.ராம்

படங்கள்:
ரா.ராம்குமார்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close