Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'என் பையன் சொக்கத்தங்கம்!'- 'வாணி ராணி' பப்லு பெருமிதம்!

"என்னோட அப்பா ஜபார் நல்லா அழகா இருப்பார். அவருக்கு பூனைக்கண். அப்போலாம் பிளாக் அண்ட் ஒய்ட்ல எடுத்தா கண்ணு ஒய்டா தெரியும். அதனாலேயே அவருக்கு படம் நடிக்க வாய்ப்பு இல்லாமலேயே போயிடுச்சு. ரொம்ப முயற்சி எடுத்து 'காதலிக்க நேரமில்லை' படத்துல கூப்பிட்டுட்டு கடைசியா அவர வேண்டாம்னு சொல்லிட்டாங்க. இந்த கோபத்துலயே போலீஸ் சர்க்கிள் இன்ஸ்பெக்டரா சேர்ந்தார்.

ஜெமினி ரவுண்டானாக்கிட்ட நின்னுட்டு வரப்போற பைக், கார் எல்லாத்தையும் நிறுத்தி, காத்து கம்மியா இருக்கு, லைட் எரியலனு செக் பண்ணிட்டு இருப்பாராம். அதே போல  டைரக்டர் பாலசந்தரை பார்க்கணும்னு வழி கேட்கிறவங்ககிட்ட,  வாங்க நான் கூட்டிட்டுப் போறேனு போவாராம். அப்படி ஒருதடவ என்னையும் கூட கூட்டிட்டு போனாரு. 'உன்பையன் அழகா இருக்கானே, அவன படத்துல நடிக்க வைக்கவா'னு கேட்டதும், என் அப்பாவுக்கு பயங்கர சந்தோஷம். அப்படி எனக்கு கிடைச்சதுதான் 'நான்கு சுவர்கள்' படவாய்ப்பு.

அதுக்கு பிறகு,  'நாளை நமதே',' நீதி', 'பாரதவிலாஸ்'  என  எம்.ஜி.ஆர், சிவாஜி, முத்துராமன்  போன்ற பலரது படங்களில் நான் குழந்தை நட்சத்திரமா நடிச்சிருக்கேன். சுமார் 68 க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளப்படங்கள்ள குழந்தை நட்சத்திரமா நடிச்சேன்.

''எனக்கு அப்போலாம் ஷூட்டிங் போறதுக்கு ரொம்ப பிடிக்கும். அதுவே பள்ளிக்கூடம்னா சுத்தமா பிடிக்காம போச்சு. என்னோட பத்தாம் வகுப்பு பரீட்சைக்கு மூணு மாசம்தான் படிச்சேன். கண்டிப்பா ஃபெயில் ஆகிடுவோம், நமக்குப் பிடிச்ச சினிமாவுக்குப் போயிடுவோம்னு ஆசையா இருந்தேன். என்னோட கெட்ட நேரம் பத்தாம் வகுப்புல செகண்ட் கிளாஸ்ல பாஸ் பண்ணிட்டேன். அதுக்குப்பிறகு என்ன?? மேல் படிப்புத்தானே?. என்னோட அப்பா கண்டிப்பா படிச்சே ஆகணும்னு சொல்லிட்டார். படிக்கிறதுனு முடிவாயிடுச்சு.. நமக்குப் பிடிச்ச சினிமா சார்ந்த படிப்பையே படிக்கலாமேனு அப்பாக்கிட்ட கேட்டேன்.

அப்பாவும், அடையார் ஃபிலிம் இன்ஸ்டிடியூட்ல அப்ளை பண்ணி எனக்கு அங்க படிக்கிறதுக்கான சீட் கிடைச்சது. தலைவாசல் விஜய், ரகுவரன், நாசர் இவங்க எல்லாம் எனக்கு கிளாஸ்மெட்ஸ். நாசர்தான் உனக்கு டி.வி சீரியல் மூலமாதான் பரிச்சயம் இருக்கு. அங்கிருந்து படத்துக்கான வாய்ப்பைத் தேடுன்னு சொன்னார்.

அதுக்கு பிறகு என்னோட டான்ஸ், ஃபேஷன் ஷோ எல்லாம் டி.வியில  பார்த்துட்டு, குட்டி பத்மினி, டி.ராஜேந்திர்கிட்ட சொல்லி அவரது சில படங்களில் எனக்கு வாய்ப்புகள் கொடுத்தார். நானே ஒரு முறை அவரிடம், 'படத்துக்கு நீங்க கொடுத்த காசைவிட, ஷோ மூலமா சம்பாதிச்சதுதான் சார் அதிகம்'னு சொன்னேன்.

நான்கு வருடம் சினிமாவுல இருந்து பிரேக். என்னோட அப்பாதான், 'பாலசந்தரைப் போய்ப் பாருடா'ன்னு சொன்னார். அப்படியே செய்தேன். 'அழகன்' படத்துல நடின்னு சொன்னார். அந்த படம் முழுக்க நான் செகண்ட் ஹீரோவா நடிச்சிருந்தேன். ஆனா, படம் லென்த்தா இருந்ததா கட் பண்ணிட்டாங்க. அதுக்கப்புறம், 'என்ன சார் இப்படி பண்ணிட்டீங்க..?'னு கேட்டேன். உனக்கு அடுத்தபடத்துல கண்டிப்பா சான்ஸ் தரேன்னார்.

அதேமாதிரி  'வானமே எல்லை'  படத்துல நடிக்கிற வாய்ப்புக் கிடைச்சது. அதன் பிறகு 'அவள் வருவாளா' படத்துக்கான வாய்ப்பும் அந்த படத்தோட டைரக்டர்  டி.வி-ல என்னைப்பார்த்துதான் கிடைச்சது. பிறகு தெலுங்கு பட டைரக்டராக முதன் முதல்ல சமுத்திரக்கனியை நான்தான் அறிமுகப்படுத்தினேன். அந்தபடம் பிளாஃப் ஆகவும், என்னோட மொத்தப்பணத்தையும் இழந்து சென்னைக்கு வந்து மறுபடியும் ஏபிசிடி - யில ஆரம்பிச்சது என்னோட லைஃப். இதுவரை கிட்டத்தட்ட 200 - க்கும் மேற்பட்ட படங்கள் பண்ணியிருக்கேன்.

டி.வியைப் பொருத்தவரை, தூர்தர்ஷனில் நான் முதன் முதலில் கதை எழுதிய, 'மேகங்கள் போடும் கோலங்கள்' என்ற சீரியல் ஒளிபரப்பானது. 'மறக்க முடியவில்லை' என்ற சீரியலுக்கு பெஸ்ட் ஆக்டர் அவார்டை 1994 -ல வாங்கினேன். அப்போ சில சீரியல்களில் கமிட் ஆகியிருந்தேன். சீரியல் மூலமா பலருக்கும் நான் பரிச்சயமானேன். அப்படியே தொடர்ந்து 50, 60 சீரியல்கள் பண்ணேன். தூர்தர்ஷன்லயும் என்னோட நாடகங்கள் பலரிடம் வரவேற்பை பெற்றன" என்ற பப்லு,  தன்னுடைய சொந்த வாழ்க்கைப்பற்றி தொடர்ந்தார்.

'' என் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை பயணம் தொடர்ந்துகொண்டே இருந்தவேளையில் திருமணம் முடிந்து எனக்கு ஒரு மகன் பிறந்தான். எல்லா சந்தோஷத்தையும் கொடுக்க வந்துவிட்டானு சந்தோஷத்துல துள்ளிக்குதித்துக்கொண்டிருந்தேன். அவனுக்கு 'அஹத் மோகன் ஜபார்' னு பேர் வச்சோம். அஹத் என்பதற்கு அரபிக்கில் ஒருவன் என்று பெயர்.

எங்கள் குடும்பத்தில் உள்ள மற்ற குழந்தைகள் போல துறுதுறுவென்று இல்லாமல், சமத்துப்பையனா அமைதியா சொல்வதை கேட்டுட்டு இருப்பான். இவ்வளவு சமத்தானப் பையனா நமக்கு என்று அவனைக்கொண்டாடிட்டு இருந்தோம். என்னுடைய மாமனார்தான் அவனிடம் ஏதோ வித்தியாசத்தை உணர்ந்திருக்கிறார். அதை அவர் சொன்னதும் எனக்கு பயங்கரமா கோபம் வந்தது. 'நீங்க எப்படி அப்படி சொல்லலாம். யாருக்கும் எந்தத் தொந்தரவும் கொடுக்காம எவ்வளவு அமைதியானப் பையனா இருக்கான். அவன் எப்படி குறையானவனா இருக்க முடியும்?'னு சொன்னேன். அதனாலத்தான் சொல்றேன் நாம ஒரு டாக்டர்கிட்ட காட்டலாம்னு சொன்னார். அதற்குப்பிறகுதான் டாக்டர்கிட்ட காட்டினோம். பார்த்த உடனே, உங்க பையனுக்கு ஆட்டிசம்னு சொல்லிட்டாங்க.

இதைக் கேட்டவுடனே வானமே இடிஞ்சு விழுந்தமாதிரி  இருந்தது. நேற்றுவரை சமத்துப்பையனா அமைதியா இருந்தவனுக்கு ஆட்டிசம் பாதிப்பானு நினைச்சப்போ தாங்க முடியாத துன்பம். மன உளைச்சலுக்கு ஆளானாலும், அதிலிருந்து மீண்டு வந்தோம். கடவுளால் எனக்கு பரிசளிக்கப்பட்ட தூய்மையானக் குழந்தை.. இதை நல்லபடியா காப்பாற்றனும்ங்கற முடிவு எடுத்தோம். நிறைய பேர் வேற குழந்தை பெற்றுக்கவேண்டியதுதானேனு கேட்டாங்க. இன்னொரு குழந்தை பிறந்தா அந்த குழந்தை இதேமாதிரி பிறக்கவும் 50% வாய்ப்பிருக்கு. அப்படி நல்லபடியா பிறந்தாலும், இவன் இரண்டாம் பட்சமாகிடுவானு தவிர்த்திட்டோம்.

இந்த மாதிரி குழந்தைகளுக்கு பொதுவா, ஏதாவது எக்ஸ்ட்ரார்டனரி டேலண்ட் இருக்கும்னு சொல்லுவாங்க. அப்படி இல்ல... அவனுக்கென தனி உலகம் இருக்கும். அவன் வேலையை அவனே செய்யத்தெரியற அளவுக்கு இப்போ வரைக்கும் பழக்கிவிட்டிருக்கோம். இப்போ எங்கள் உலகமே என் பையன்தான்" என்றவர்,

" நீலாங்கரையில 'வி கேன்' என்கிற ஸ்கூல் வச்சிருக்கோம். இதில் ஆட்டிசத்தால பாதிக்கப்பட்ட பல குழந்தைகளை கவனிச்சுட்டு இருக்கோம். இவனையும் பன்னிரண்டு வயசு வரைக்கும் அங்கதான் படிக்க வச்சோம். அதுக்குமேல அவனால படிக்க முடியலைங்கறதால நிறுத்திட்டோம். நிறைய ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு, மலேசியா, சிங்கப்பூர், லண்டன், ஜெர்மனினு பல இடங்களுக்கு அவனை கூட்டிட்டுப் போயிருக்கேன்.

2006- ம் வருஷம் ஒரு இன்சிடன்ட் நடந்தது.  பெங்களூர்ல இருந்து சென்னைக்கு வரும்போது, ஏர்போட்ல செக்கிங் ஆபீஸர் என் பையனை செக் பண்ணும்போது இவன் சரியா கோ ஆப்ரேட் பண்ணாததால.. என்ன கூப்பிட்டாரு. நானும் அவர் இருக்கிற இடத்துக்குப் போனேன், 'உங்கப்பையன் என்ன லுாசா'னு கேட்டார். எனக்கு கிர்னு இருந்தது. நீங்க ஒரு ஆபீசர் அப்படி பேசக்கூடாதுனு சொன்னேன். நான் அப்படித்தான் கேட்பேன்னு பேச ஆரம்பிக்கவும், தகறாரா ஆகிடுச்சு.

இந்த பிரச்னைனால ஒரு மாற்றம் வந்தது. பொதுவா  மெண்டல் டிஸார்டர், பிக்ஸ் வரவங்க, அனிமல்ஸ் என லட்டர் இல்லாமலோ, துணைக்கு யாரும் இல்லாமலோ ஃபிளைட்ல போகக்கூடாது என்பது ரூல்ஸ். பிரச்னை செய்தவரை கேமரா எடுத்து ஃபுல் ஷூட் பண்ணி, சி.என்.என்ல கொடுத்து பெரிய அளவுல இஷ்யூப் பண்ணேன். பிறகு அவங்களே சாரி கேட்டாங்க. நீங்களும், நல்ல காரியம் பண்ணிருக்கீங்க..

இன்னிக்கு பல பேருக்கு ஆட்டிசம்னா என்னனு தெரியாது. இதுமூலமா நிறையபேருக்கு விழிப்புணர்வு வரும்'னு சொன்னேன். இன்னிக்கு வரைக்கும் அவர்களுக்கான அத்தனை சலுகையும், ஏர்போர்ட் மற்றும் ரயில்வேயில் கிடைக்கிறது.

'நான் அரவாணி வேஷம் பண்ணதாலதான் எனக்கு அவங்களோட கஷ்டம் எல்லாம் தெரிந்தது. எனக்கு இப்படி ஒரு பையன் இருக்கறதாலதான், ஆட்டிசம்னா என்னனு என்னால புரிஞ்சுக்கமுடியுது.. அதேபோல, மத்தவங்களுக்கும் ஆறுதலா இருக்க முடியுது. நாங்க சந்தோஷமா இருந்தாதான், என் பையனும் சந்தோஷமா இருக்கான். நார்மல் பர்சன் ஒரு நாள்ல ஒரு விஷயத்தை கத்துக்கிட்டாங்கனா, இவனுக்கு ஒருமாசம் ஆகும் அவ்வளவுதானே வித்தியாசம்.

இன்னும் என்னோட பையன் 19 வயசு குழந்தையாத்தான் இருக்கான். பொய் சொல்லத்தெரியாது, திருடத்தெரியாது. இதுவே இன்னிக்கு பல பெற்றோர்கள் பையன் வீட்டுக்கு வரலனா, 'ஃபேஸ்புக்ல என்னப்பண்றானோ, எந்த பொண்ணுப் பின்னாடி சுத்திட்டு இருக்கானோனு பயத்துல வாழ்ந்துட்டு இருக்காங்க. எனக்கு அந்த பயம் இல்லை. என் பையன் எந்த தப்பும் செய்யாத சொக்கத் தங்கம்” என் கட்டி அரவணைக்கிறார் வாஞ்சையுடன்.

சாதாரணமா, டி.வி ய அவனே ஆன் பண்ணான் என மூன்று வயசு குழந்தையைப்பற்றி சொன்னா, கொஞ்ச நாள் சந்தோஷமா இருப்பாங்க.. அடுத்தடுத்து அதுவே ஒவ்வொரு வேலையையும் பண்ணும்போது அது நார்மலா டே டு டே லைஃபா மாறிடும். இதுவே, என் பையன் அதைப்பண்ணா எங்களுக்கு அன்னிக்குத்தாங்க திருவிழா. கடந்த ஆறு மாசத்துக்கு முன்னாடி என்னோட பையன் அவனே பர்ஃப்யூம் அடிச்சிக்கிட்டான். நான் இதை மத்தவங்கக்கிட்ட சொல்லி சந்தோஷப்பட்டப்போ இது என்ன அவ்வளவு பெரிய விஷயமானு சாதாரணமா சொன்னாங்க. ஆனா எங்களுக்கு, தீபாவளி, பொங்கல், நியூ இயர், ரம்ஜான் எல்லாமே அன்னிக்குதான்.

தமிழ், மலையாளம், ஹிந்தி, தெலுங்கு மொழியும் புரியும். போட்டோ எடுக்கும்போது ஒன் டூ த்ரீ சொல்லணும். உடனே போட்டோவுக்கு சிரிப்பான்.

2014 - ம் வருஷம் 'வாவ் மேகசின்' எனக்கு 'பெஸ்ட் ஃபாதர்' அவார்டு கொடுத்தாங்க. 1% இருந்தாலும், 100% இருந்தாலும் அது ஆட்டிசம்தான். என் பையன் 100% ஆட்டிசம்தான்.  கடந்த 10 -ம் தேதி 'வி மேகசின்' எனக்கும், என் மகனுக்கு 'சோல்மேட்' அவார்டு கொடுத்தாங்க.

நல்லா படிக்க வச்சா, படிச்சு, வேலைக்கு சேர்ந்து, ஒருபெண்ணைக் கல்யாணம் பண்ணிட்டுப் போயிடுவான். உங்க சொத்துக்காக நிற்பாங்க. ஆனா, என் பையன் அப்படி இல்லையே, கடைசி வரைக்கும் என் பையனா என்கூடத்தானே இருப்பான் ''என்று மகனை இறுக அணைத்து நெகிழும்போது அஹத் குழந்தை சிரிக்கிறான்.

- வே. கிருஷ்ணவேணி

படங்கள்:
தி. குமரகுருபரன்
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close