Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கோச்சிங் சென்டர் போகாமலேயே ஜெயிச்சேன்: 22 வயதில் ஐஏஎஸ் ஆன அருண்ராஜ் சொல்கிறார்!

த்திய அரசு பணியாளர் தேர்வாணையமான யு.பி.எஸ்.சி., ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ். உள்ளிட்ட பணிகளுக்காக 2014ல் நடத்திய தேர்வில் 1,236 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த 118 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அகில இந்திய அளவில் 34வது இடத்தையும், தமிழக அளவில் 3வது இடத்தையும் பெற்ற சென்னையைச் சேர்ந்த அருண்ராஜ் தேர்வின் முதல் முயற்சிலேயே வெற்றி பெற்று, 22 வயதிலேயே ஐ.ஏ.எஸ் பணிக்கு தேர்வாகி சிவில் சர்வீஸ் தேர்வு வரலாற்றில் புதியதொரு சரித்திரத்தை உருவாக்கி தமிழகத்திற்கு பெருமை தேடி தந்துள்ளார்.

இதுவரை சிவில் சர்வீஸ் தேர்வு வரலாற்றில் முதல் முயற்சியில், 22 வயதில் யாரும் இந்த வெற்றி அடைந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நெல்லை மாவட்டம், கயத்தாறு அருகே உள்ள கிராமத்தை பூர்வீகமாக கொண்ட அருண்ராஜ், இளம் வயதிலேயே இலக்கை அடைய எடுத்துக் கொண்ட பயணம் பற்றியும், எதிர்கால திட்டங்கள் குறித்து நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

"இந்த சின்ன வயதிலேயே, முதல் முயற்சியில் கிடைத்த ஐ.ஏ.எஸ். வெற்றி எனக்கு அதிக சமூக பொறுப்புகளை தந்திருக்கு. அப்பா ஐ.பி.எஸ். பணியில் இருக்கிறார். அன்புச்செல்வன் ஐ.பி.எஸ்.,  சத்யதேவ் ஐ.பி.எஸ். இப்படி பொதுவாகவே சினிமாவுல ஐ.பி.எஸ். ஆபிசர்சை மட்டும்தான் பெரிய பிரம்மாண்டமா காட்டுறாங்க. ஐ.ஏ.எஸ். ஆபிசர்சை அப்படி காட்டுவதில்லை. ஆனால், ஐ.ஏ.எஸ். மூலமா, சமூகத்துல இருக்குற கடைக்கோடி மனிதனுக்கு கூட உதவ முடியும்.

கல்வி, மருத்துவம், சுகாதாரம், உணவு இப்படி பல வகைகளில் மக்களுக்கு உதவமுடியும். அவற்றை எல்லாம் சினிமாவில் நிறைய காட்ட வேண்டும். நேர்முகத் தேர்வுக்கு போறதுக்கு முன்னாடி 'ஆயுத எழுத்து' மாதிரி இளைஞர்கள், அரசியல்கள், அதிகார பணிக்கு போகும் நிறைய படங்களை மீண்டும் மீண்டும் பார்த்தேன்.

நிறைய செலவு பண்ணி, பெரிய பெரிய கோச்சிங் சென்டர் போனால் தான் ஐ.பி.எஸ்., ஐ.ஏ.எஸ். ஆகமுடியும்னு சொல்றது பொய். நான் எந்த கோச்சிங் சென்டருக்கும் போகலை. தினமும் செய்தித்தாள்கள், நியூஸ் பாத்துட்டு, இணையதளங்கள்ல ஏற்கனவே இருக்குற வினா விடைகள், ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை உள்ள பாடப்புத்தகங்களை எல்லாம் ஆர்வமா கடுமையா படிச்சேன், வெற்றி பெற்றேன். கான்பூர் ஐ.ஐ.டி.யில் கெமிக்கல் இன்ஜினியரிங் இப்பதா முடிச்சேன். ஆரம்பத்துல ஒரு பொறியாளரா ஆகணும்னுதா ஆசைப்பட்டேன். ஆனால், எதிர்காலத்துல அதுல எனக்கு முக்கியத்துவம் கிடைக்காதுன்னு நெனச்சேன். அதுனாலதான் நான்  ஐ.ஏ.எஸ் ஆகணும்னு முடிவு பண்ணினேன். கல்லூரி இறுதியாண்டுல இருந்துதான் சிவில் சர்வீசுக்கு படிக்க ஆரம்பிச்சேன்.

பயிற்சி முடிச்சுட்டு பணிக்கு போனப் பிறகு நம் மண்ணுக்கும், மக்களுக்கும்  நிறைய திட்டங்கள் வச்சிருக்கேன். என்னோட இன்ஜீனியரிங் படிப்பையும் என்னோட பணிகளில் பயன்படுத்துவேன்.

அரசு மருத்துவமனைகளை எல்லாம் மேலும் மேலும் மேம்படுத்தி பணப்பாகுபாடு இல்லாம எல்லாருக்கும் சமமான, தரமான மருத்துவம் கொண்டு வரணும். நானும், என் துறைகளுக்கு கீழே வேலை செய்றவங்க எல்லாரும் சகாயம் சாரோட 'லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர்' கொள்கையை பின்பற்றி செயல்படுவோம். இன்ஜினியரிங், மருத்துவம் மாதிரி செலவு பண்ணி படிச்சாதான் சமூகத்துல மதிப்பு, வேலை, பணம் கிடைக்கும்னு எல்லாரும் நினைக்கிறோம். எல்லோரிடமும் எழுத்து, சினிமா, கலை இப்படினு பல திறமைகள் இருக்கு. அதை எல்லாம் வெளிய கொண்டு வரணும். அதுக்கு இளைஞர்கள் நல அமைப்பு நிறைய கொண்டு வரணும். நாங்கள் கல்லூரியில் கண்டுபிடிச்ச  தாவர, விலங்கு கழிவுகளில்  எடுக்கப்படும் உயிர் எரிபொருள் திட்டங்களை நடைமுறைப்படுத்தவும், இயற்கை சூழல் பாதுகாப்பு  திட்டங்களையும்  கொண்டு வரவேண்டும்.

பெண்களின் கல்வி, வேலைவாய்ப்புகள், வாழ்வியல் பிரச்னைகள் தீர்க்க பல நல அமைப்புகளை கொண்டு வர வேண்டும். என்னுடைய செயல்பாடுகள் அனைத்தும் மக்களுக்கு தெளிவாகவும், எளிமையாகவும், தொடர்புகொள்ள கூடியதாகவும் இருக்க சமூக வலைத்தளங்களை பெரியளவில் பயன்படுத்த வேண்டும். ஊடகங்களை நன்கு பயன்படுத்தி மக்களிடம் எப்பொழுதும் நல்ல தொடர்பில் இருக்க வேண்டும். இன்னும் நிறைய யோசிச்சு வச்சிருக்கேன். எல்லாத்தையும் அதிகாரங்களை பயன்படுத்தி சாத்தியமாக்க வேண்டும்.

ஆறுமாத கால பயிற்சி முகாமில் வெளி மாநிலங்களில் வெற்றி பெற்றவர்களிடம்  நிறைய கலந்து பேசி நம்ம  ஊருக்கு வரும்போது பல புதிய திட்டங்களோடு வரணும். குடும்ப கஷ்டம், பண கஷ்டம் உள்ள மாணவ, மாணவிகளின் சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி இஸ்ரேல் சென்னையில் இலவசமாக நிறைய உதவி வருகிறார். பணம், வசதி எல்லாம் வெற்றியை தீர்மானிக்காது. 'லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர்' மாதிரி எதிர்காலத்தில் எனக்கென்று ஒரு கொள்கை பெயர் உருவாக வேண்டும்" என்றார்.

-கு.முத்துராஜா

படங்கள்: அருண்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close