Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தன்னம்பிக்கையின் வண்ணங்களை சொல்லும் 'பன்மை'!

னிதனை மனிதன் ஒதுக்குதலை விடவும் மடமை வேறெதுவுமிருக்காது. 'தீண்டாமை ஒரு பெருங்குற்றம், தீண்டாமை ஒரு பாவச் செயல்' என வாய்மணக்க பேசினாலும்,  இன்னமும் திருநங்கைகள் என்ற பாலியல் குறைபாட்டுடன் பிறந்த சகோதரிகளை, தீண்டாமையின் அடையாளமாகத்தான் பார்க்கிறார்கள் சமூகத்தில் ஒரு சாரார்.

இந்த நிலையில் சமூகத்தில் தங்களைப் புறக்கணித்தவர்களை, தங்களின் திறமைகளால் திரும்பிப் பார்க்க வைத்துள்ளனர், 'பன்மை' நாடக குழுவினர்.

முழுக்க முழுக்க திருநங்கைகளால் நடத்தப்படும் இந்த குழுவினரால், கடல் தாண்டி ஐரோப்பாவில் அரங்கேற்றப்பட்ட 'கலர் ஆப் ட்ரான்ஸ்'  நாடகம்தான், இந்தியாவிலேயே திருநங்கைகளால் திருநங்கைகளுக்காக நடத்தப்பட்ட முதல் நாடகமும். அவர்களுடன் நடத்திய சிறு உரையாடலில் பெரும் ஆச்சரியங்கள் ஒளிந்திருக்கின்றன.

பன்மை தியேட்டர் குழுவின் இயக்குனர், லிவிங் ஸ்மைல் வித்யா பெருமிதமான குரலில் பேசினார்.

"10 வருஷத்துக்கு மேலாக முழுநேர நாடக கலைஞரா இயங்கி வருகிறேன். அந்த அனுபவம்தான் எனக்கு பிரிட்டிஷ் கவுன்சில் ஸ்காலர்ஷிப் கிடைக்க காரணமா இருந்துச்சு. அதன் மூலமா லண்டன்ல 6 மாசம் தியேட்டர் கோர்ஸ் பண்ணேன். அது என் நாடகம் பத்தின பார்வையை நிறையவே மாத்திச்சு.

என்னை வளர்த்துக்கவும் உதவியது. கூடவே அங்கே நான் பார்த்த பல திருநங்கைகள் ஏதோ வகையில் கலைத்துறையில் இருப்பதையும் பாத்தேன்.  இங்கேயும் பல திருநங்கைகள் கலைத்துறையில் ஆர்வமா இருப்பதுண்டு.

இங்கு திருநங்கை தோழியான ஏஞ்சல் கிளாடி, பல வருடங்களாக நாடகத்துறையில் இருக்காங்க.. ‘தொய்டா’ங்கிற கொரிய நாடகக்குழுவோட சேர்ந்து, இந்தியாவிலும், கொரியாவிலும் நாடகங்கள் அரங்கேற்றியிருக்காங்க. திருநம்பியான ‘ஜீ இம்மான் ‘ஒரு நல்ல எழுத்தாளர், மற்றும் சமூக செயல்பாட்டாளர். எனக்கு சகோதரன் போன்றவர். நாங்க மூவரும் சேர்ந்து ‘பன்மை’ தியேட்டர் குழுவை ஆரம்பித்தோம்.

எங்க முதல் நாடகமான 'கலர் ஆப் ட்ரான்ஸ்’க்கு எங்ககிட்ட எந்த பொருளாதார முதலீடும் கிடையாது. பல நண்பர்களோட உதவியால், க்ரௌட் சோர்ஸ் மூலமாவும்தான் எங்கள் முதல் நாடகம் சாத்தியமாச்சு. தொடர்ந்து பல நண்பர்களின் உதவியால சென்னை, பெங்களூர், கோழிக்கோடுலேயும் நாடகம் போட்டோம்.

இதுக்கு நடுவுல பிலடெல்பியாவில் வருடா வருடம் நடக்கும் பிலடெல்பியா சர்வதேச திருநங்கைகள் மாநாட்டில் எங்கள் பன்மை நாடகக்குழுவிற்கு அழைப்பு வந்தது. அதன் மூலம், பிலடெல்பியா, பாஸ்டன் மற்றும் நியூ யார்க்கிலும் எங்களது “கலர் ஆப் ட்ரான்ஸ் 2.0”  நாடகம் போட்டோம். இதற்கெல்லாம் காரணமான ஜீ இம்மானுக்கு நாங்க நன்றி சொல்லணும்" என்றவரிடம்,

"எங்கள் வாழ்கையில், நாங்கள் கடந்து வந்த அனுபவங்களையும், திருநங்கைகளின் வாழ்க்கையில் உள்ள தினசரி அவஸ்தைகளையும் பார்வையாளர்களுக்கு பிடிக்கும் வகையில் கலைவடிவத்தோடு அமைச்சிருக்கோம்.

உதாரணத்துக்கு என் சொந்த வாழ்வில், நான் திருநங்கைனு தெரியவந்த போது, எங்கப்பா எப்படி அதை எதிர்கொண்டார். கிளாடியின் வாழ்வில் அவர் தம்பி,  தன் அண்ணன் ஒரு திருநங்கைன்னு தெரியவந்தப்போ அதை எப்படி எதிர் கொண்டார் என்பதை பதிவு செய்திருக்கோம். இதன் இடையே திரைப்படங்களில் எங்களை இழிவு படுத்திய காட்சிகளை தொகுத்து திரையிடுகிறோம்.

அப்படியாவது எதிர்காலத்தில் இந்த மாதிரி காட்சிகளை தவிர்ப்பாங்க என்று ஒரு நம்பிக்கை. மேலும் கோமாளி நாடகம் போன்ற பல வடிவங்களையும் இந்த நாடகத்ததில் பயன்படுத்திருக்கோம்” என்றனர் வித்யா மற்றும் ஏஞ்சல் கிளாடி.

ஏஞ்சல் கிளாடி, 'ஓநாயும் ஆட்டுக் குட்டியும் படத்தில் 'பாரதி' யாக நம்மை கவர்ந்தவர்.

"முழுக்க முழுக்க இந்த பன்மை குழுவின் முயற்சிகளில் வணிக நோக்கமில்லை. இதுவரை எங்க நாடகத்திற்கு நுழைவு கட்டணம் கூட வசூலித்ததில்லை. நாடகம் முடிந்த பின் பார்வையாளர்களிடையே துண்டு நீட்டுவோம். அவர்கள் விரும்பி தர்றதைதான் இதுவரை பகிர்ந்துக்குவோம்" என்று வெளிப்படையாக பேசிய சிவா, பாரம்பரிய கலைவடிவமான தெருக்கூத்தில், தன் பயணத்தை தொடர்பவர். பல குறும்படங்களிலும், சமீபத்தில் மேடையேற்றப்பட்ட பொன்னியின் செல்வன் நாடகத்திலும் திறமையாக நடித்துள்ளார்.

"எங்க நாடகத்தோட சிறப்பே ஒவ்வொரு முறை அரங்கேற்றத்தின்போதும் மேடையில் கண்டிப்பாக ஏதாச்சும் ஒரு சின்ன வித்தியாசம் இருக்கும். இந்த முயற்சி, பார்வையாளர்களை அசத்த மட்டுமில்லை; எங்களை புதுப்பித்துக்கொள்ளவும்தான். இதுதான் எங்கள் சீக்ரெட்”  என்று கண்சிமிட்டியபடி தங்கள் வெற்றியின் ரகசியத்தை உடைக்கிறார் பன்மை தியேட்டர் குழு நிர்வாகிகளில் ஒருவரான மயூரன் மோகன்.

இன்றைய நாகரீக உலகிலும், சமுதாயம் உங்களை பார்க்கும் பார்வையில் பெரிய மாற்றங்கள் இருப்பதாக உணர்கிறீர்களா? என்றோம்.

“ஒரு ஆணின் தவறுக்கு எல்லா ஆண்களையும் தப்பு சொல்வதில்லை. அதே போலதான் பெண்கள் நிலையும். எல்லா வாய்ப்பும் வசதியும் இருக்கும் சாமானியர்களே தப்பு செய்யறபோது,  எந்த வசதியும் இல்லாத திருநங்கைகளின் சூழ்நிலை தவறுகளுக்கு எல்லா திருநங்கைகளையும் தவறாக பார்க்கிற கண்ணோட்டம் மக்களிடம் இருந்து மாறணும். அது ரொம்ப வேதனை தர்ற விஷயம்.

நான், சிவா, கோபி எல்லாரும் ஆண்களாக இருந்தாலும் ஸ்மைலி, க்ளாடி மற்றும் ஜீ ஆகியோரோடு நட்பு கண்ட பிறகு நாங்கள் புதுமனிதர்களா உணர்ந்தோம். திருநங்கைகள் என்பவர்கள் நம்மில் ஒருவர்தான். இயற்கையின் இயல்பான இந்த குறையை நாம் ஏற்றுக்கொள்ளாதது மிக வேதனையான விஷயம். திருநங்கைகளை புறக்கணிக்கும் மனோபாவம் மக்களிடம் இருந்து மறையணும்" என தன் ஆதங்கத்தை வெளிபடுத்தினார், நாடக ஆர்வலரும் இயக்குனராகும் முயற்சியில் இருக்கும் இளைஞரான குரு எடிசன்.

'திருநங்கைகள் மீதான தவறான பார்வை' என்ற ஒற்றை பாமர சிந்தனை மாறி 'அவர்களும் நம்மில் ஒருவரே என்ற 'பன்மை' சிந்தனை வளர வேண்டும்தான். 

சகோதரிகளுக்கு வாழ்த்துக்கள்!
                         
- பி.நிர்மல்

படங்கள்: ம.நவீன்

(மாணவப் பத்திரிகையாளர்கள்)

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close