Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

படிக்க மட்டுமல்ல... குடிநீரை சுத்திகரிக்கவும் பயன்படும் புத்தகம்!

றிவை வடிகட்டி அதிலுள்ள அழுக்குகளை அகற்றி, அதனைச் சுத்திகரிக்கும் கருவியாகவே மனித சமுதாயம் புத்தகங்களை அறியும்.

பனையோலைகளில் எழுதப்பெற்று, அவை நூல் கொண்டு அறுத்துக் கட்டப்பட்டதனாலேயே, நூல் எனும் பெயர் பெற்றவை புத்தகங்கள். அந்த நூல் வடிவம் தொடங்கி, இன்று நாம் ‘கிண்ட்ல்’ வரைப்பட்டிகையில் வாசிக்கும் மின்னூல் வரை தன் வடிவத்தைத் தக்கபடி மாற்றி மாற்றித் தன் இன்றியமையாமையை பறைசாற்றி வருகின்றன புத்தகங்கள். இந்நிலையில், அறிவைச் சுத்திகரிப்பது மட்டுமன்றி, தண்ணீரையும் சுத்திகரிக்கப் பயன்படும் புத்தகங்களைத் தயாரிக்கத் தொடங்கியுள்ளது, நியூயார்க்கை சேர்ந்த ‘வாட்டர் இஸ் லைஃப்’ நிறுவனம்.

உலகம் முழுவதும், ஆண்டொன்றுக்கு சுமார் 34 லட்சம் மக்கள் குடிநீர் சார்ந்த நோய்களால் உயிரிழக்கின்றனர். இதில் மேலும் வருத்தத்திற்குரிய செய்தி யாதெனில், இவர்களில் பெரும்பாலனோர் தாங்கள் அருந்துகின்ற நீர் பாதுகாப்பனதுதானா என்று கூட அறிந்திருப்பதில்லை. இதை கருத்தில் கொண்டு தன் ஆராய்ச்சியைத் தொடங்கினார் ’பிட்ஸ்பர்க்’ நகரைச் சேர்ந்த நேனோத் தொழில்நுட்பவியலாளர் முனைவர்.தெரஸா டேன்கோவிச்.

விர்ஜினீயாப் பல்கலைக்கழகத்தின் நேனோ தொழில்நுட்ப ஆராய்ச்சித் துறையில் பணிபுரியும் தெரஸா, தன் தலைமையிலான குழுவொன்றை உருவாக்கி, உலகின் விலை குறைந்த நீர் சுத்திகரிப்புக் கருவியொன்றைத் தயாரிக்கும் ஆய்வில் ஈடுபட்டுள்ளார். இம்முயற்சி குறித்த பல்வேறு சிந்தனைகளுள் ஒன்றாக உதித்தது தான், தண்ணீர் சுத்திகரிப்புப் புத்தகம்.

செப்பும், வெள்ளியும் நச்சுயிரிகளைக் கொல்லும் தன்மையுடைவை என்பது நம் மூதாதையர்கள் கண்டறிந்த உண்மை. நாம் புனிதமாகக் கருதும் உற்சவ விக்கிரகங்களும், வழிபாட்டுக் கலன்களும் வேறு எந்த உலோகத்தாலும் உருவாக்கப்படாததன் காரணமும் அதுவே. அத்தகைய சிறப்பு வாய்ந்த அவ்விரு உலோகங்களையும் கொண்டு நேனோ தொழில்நுட்பத்தின் மூலம் தயாரிக்கப்பட்டுள்ள தாள்களைக் கொண்டதுதன் ‘ட்ரிங்கபிள் புக்’ எனப்படும் நீர் சுத்திகரிப்புப் புத்தகம்.

நீரைப் பற்றிய அறிவியல் மகத்துவங்கள் அச்சாகியுள்ள இப்புத்தகத்தில், நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றுதான். படித்துவிட்டு, ஒரு தாளைக் கிழித்து புத்தகத்தோடு கொடுக்கப்படும் வடிகட்டியில் பொருத்த வேண்டும். பின்பு அவ்வடிகட்டியின் மூலம் எத்தகைய அழுக்கடைந்த நீரையும் நன்னீராகச் சுத்திகரித்துவிட முடியுமென்கின்றனர் ஆய்வாளர்கள். “இந்தத் தாளிலுள்ள அயனிகளால் ஈர்க்கப்படும் நுண்ணுயிரிகள், இவற்றை நோக்கி நகரும்; அவ்வாறு வந்தடையும்போது செப்பு மற்றும் வெள்ளி மூலக்கூறுகள் அவற்றைக் கொன்றுவிடும்” என்று பூரிக்கிறார் தெரஸா.

மேலும், ஒரு தாள் நூறு லிட்டர் நீரைச் சுத்திகரிக்குமென்றும், ஒரு முழுப்புத்தகம் ஒரு தனிமனிதரின் குடிநீரை, ஏறத்தாழ நான்காண்டுகளுக்குச் சுத்தப்படுத்துமென்றும் தெரிவிக்கிறார் இவர். தென்னாப்பிரிக்கா, கானா, வங்கதேசம், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் சோதித்துப் பார்க்கப்பட்ட இப்புத்தகம், 90 விழுக்காட்டிற்கும் மேல் நுண்ணுயிரிகளைக் கொன்றுள்ளது. எனினும், ப்ரோட்டோஸோவா போன்ற சில அதிநுண்ணுயிரிகளுக்கான சோதனை நிகழ்த்திப்பார்க்க வேண்டியுள்ளது என்கிறார் பரிசோதனைக் குழுத் தலைவர் டாக்டர், டேனியல் லேண்டேக்னா.

இதன் முக்கிய சிறப்பம்சம் யாதெனில், தண்ணீர் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அச்சடிக்கப்பட்ட இந்தப் புத்தகம், ஆப்பிரிக்க-அமெரிக்கப் பழங்குடி மக்கள் பேசும் ‘ஸ்வஹெய்லி’ மொழியில் தன் சொற்களைக் கொண்டுள்ளது என்பதேயாகும்.

இத்தனைக்கும் மேலாக, மிகக் குறைந்த செலவில் இப்புத்கத்தைத் தயாரித்துவிட முடியும் என்பது, இதன் எதிர்காலச் சந்தைத்தேவையைத் தெளிவுறுத்துகிறது. தற்சமயம் கைவினைப் பொருளாகத் தயாரிக்கப்படும் இப்புத்தகம், தயாரிப்பு விரிவாக்கத்திற்காக இயந்திரமயமாக்கப்படலாம் என்கின்றனர் குழும விஞ்ஞானிகள்.

இதற்காகத் தங்கள் வலைதளமான pagedrinkingpaper.com இல் நிதி திரட்டி வருகின்றனர். தன் புதுமையாலும், மலிவான விலையாலும் இந்தப் புத்தகம் மக்களிடையே பெருத்த வரவேற்பைப் பெறும் என நம்பிக்கைத் தெரிவிக்கின்றனர் ’வாட்டர் இஸ் லைஃப்’ நிறுவனத்தினர்.

மரங்களை அழித்து தாள் உருவாக்கும் இக்காலக் கட்டத்தில், நீரைச் சுத்திகரிக்கப் புத்தகங்களைக் கண்டறிந்த ஆய்வாளர்களுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம்தானே!

- ச.அருண்
(மாணவப் பத்திரிகையாளர்)video link - https://www.youtube.com/watch?t=18&v=qYTif9F188E

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close