Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மகாபாரதத்தில் நீங்கள் யார்?

"மகாபாரதம் எல்லா தலைமுறைகளாலும் ரசித்து படித்து, பார்த்து, பார்த்துக் கொண்டிருக்கிற காவியம். எத்தனை முறை பார்த்தாலும், சலிப்போ, அலுப்போ ஏற்படுத்தாத கதை.

டிவி-க்களில் பார்க்கும் போது ரசிக்கும் நாம், நமது எதிரில் அதே போன்று யாராவது தோன்றினால் ரசிப்பதில்லை. உதாரணமாக, டிவியில் சகுனி கதாபாத்திரத்தை, 'அட்ரா சக்க..!' என்று சகுனியின் சாதுர்யத்தை பாராட்டி ரசிக்கும் நீங்கள், உங்கள் நண்பர் யாராவது சகுனி வேலை செய்தால், கண்டபடி திட்டி தீர்த்துவிடுவீர்கள்.

அதுவே அர்ஜுனன் போல யாராவது இருந்தால் பொறாமைதான் வருமே தவிர, அன்பு வராது. யாராவது நிறைய உதவி செய்தால், "ஆமா.. இவரு பெரிய கர்ணன்..!" என்று கேலிதான் செய்வோம்;  பாராட்டமாட்டோம். அந்த வகையில் நமது அலுவலகத்திலேயே சில மகாபாரத கதாப்பாத்திரங்கள் உலாவிக் கொண்டிருப்பார்கள்.

அவர்களை கண்டாலே பலருக்கு பிடிக்காது. அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அதுபோன்ற  சில கதாப்பாத்திரங்கள் உங்கள் அலுவலகத்தில் இருக்கிறார்களா என பாருங்கள்" என வாட்ஸ் அப்பில் வலம் வந்துகொண்டிருக்கும் ஒரு சுவராஸ்ய பதிவு இங்கே...

சகுனி:

மேனேஜ்மெண்ட் என்ன கூறினாலும் ஒத்து ஊதுவது, மற்றவர்களை பழிவாங்க போட்டுக் கொடுப்பது, மற்றவர் உழைப்பில் இவர்கள் முன்னேற்றம் காண்பது என சிலர் சகுனி வேலை செய்து கொண்டு இருப்பார்கள்.

துரியோதனன்:

ஏறத்தாழ டீம் லீடரை போலத்தான். அனைத்து வேலைகளையும் செய்யத் தெரியும், வேலையை வாங்கவும் தெரியும். தட்டிக் கொடுத்தும் வேலை வாங்குவார்கள், சமயங்களில் தட்டி, தட்டியும் வேலை வாங்குவார்.

கர்ணன்:

எல்லா வேலையையும் இழுத்துப்போட்டு செய்தும், இவர்களுக்கான பெயர் கிடைக்காமல் இருக்கும். முழு ப்ராஜெக்ட்டையும் தோள்களில் தாங்கி முடித்து கொடுத்திருப்பார்கள். ஆனால், பலன் வேறு யாருக்கோ கிடைத்திருக்கும். பெண்கள் இவருடன் அன்பாக பேசி காரியத்தை சாதித்துக் கொண்டு போவார்கள்.

நகுலன், சகாதேவன்:

தவறு சொல்ல முடியாத அளவு வேலை செய்பவர்கள். இவர்களை பெரும்பாலும் யாரும் பார்த்திருக்க மாட்டார்கள். அவர்களது வேலையை கச்சிதமாக செய்து முடித்து அவர்களுக்கான ஊதியம் எவ்வளவு கிடைத்தாலும் வாங்கிக் கொண்டு, மீண்டும் தங்களது வேலைகளில் மூழ்கிவிடுவார்கள்.

பீஷ்மர்:

நிறைய அனுபவம் வாய்ந்த சீனியர் அதிகாரி. அனைவருக்கும் உதவும் குணம் கொண்டிருப்பார். சில சமயங்களில் 'பாஸ்'க்கே கூட அறிவுரை கூறி நல்வழிப்படுத்தும் அளவு மதிப்புடையவர் என்றாலும், ஏனோ இவர்களது முழு தகுதியை இவர்களே அறிந்திருக்க மாட்டார்கள்.

பலருக்கும் இவரது தகுதி பற்றி அதிகம் தெரியாது. அதுபற்றி இவர் அலட்டிக்கொள்ளவும் மாட்டார்.

யுதிஷ்டிரர்:

நல்ல நெறிமுறையான பையன்தான். அனைத்து மெயில்களுக்கும் பதிலளிப்பவர். தவறை ஒப்புக்கொள்பவர். நியாயத்தை நிலைநாட்டத் துடிப்பவர்.

பீமன்:

தொட்டதற்கெல்லாம் கோபமடையும் நபர். "ஏன்ப்பா.. அந்த வேலைய முடிச்சுட்டியா...?" என்று கேட்டால் கூட, "எங்க முடிக்கவிட்டீங்க, அதுக்குள்ள வேற வேலைய கொடுத்துட்டீகளே... எல்லாத்துக்கும் நேரம் வேணும்..." என அனைவரிடமும் கோபம் கொள்ளும் நபர்.

சமயங்களில் குணத்தில் குழந்தையாகி, 'இவரா அப்படி நடந்துகிட்டார்?!' என நம்மை குழப்பமடையச் செயவார்.

திருதிராஷ்டிரர்:

ப்ராஜெக்டில் நடக்கும் அனைத்து விஷயங்களும் தவறாக போகிறது என்று தெரிந்தும், செய், செய், என்று கூறுபவர். "சார் இது முடியாது, வேற மாதிரி பண்ணலாம்!' என்று கூறினாலும் கேட்காமல், அதே முறையில் வேலையை செய்ய வற்புறுத்துபவர்.

கிருஷ்ணர் :

இவருக்குதான் கம்பெனியில் என்ன நடக்கிறது , என்ன நடக்கப்போகிறது என்று தெரியும். யார், யார் என்னென்ன செய்கிறார்கள் என்பதையும் தெரிந்து வைத்திருப்பார்.

துரோணாச்சாரியார்:

இவர்கள் எந்த ப்ராஜெக்ட்டிலும் வேலை செய்ய மாட்டார்கள். ஆனால், வரும் ஜூனியர் எல்லாருக்கும் உதவி செய்வார், கற்றுக் கொடுப்பார். "தெய்வம் சார் நீங்க.." என்று சொல்லும் அளவுக்கு ஜூனியர்களுக்கு காட்சி தருவார்.

அர்ஜுனன்:

அலுவலகத்தில் அனைவரும் புகழும் அளவு 'ஆல் இன் ஆல்' அழகுராஜா இவர். மிகவும் திறமைசாலி. எந்த வேலையை கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிக்க கூடிய திறன் உடையவர். பெண்கள் மத்தியிலும் பிரபலமாக இருப்பார்.

- க.லட்சுமி

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close