Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்னையின் பழமை வாய்ந்த கட்டிடங்கள் ஓவியங்களில் உயிர் பெறுகின்றன

டைபயணங்கள், மாரத்தான்கள், கண்காட்சிகள் என பல்வேறு இடங்களில் பல விதமாகக் கொண்டாடப்படுகின்ற சென்னை தினத்திற்கு தங்களின் ஓவியங்கள் மூலம் மேலும் அழகூட்டினர் சென்னை வீகென்ட் ஆர்டிஸ்ட்ஸ் அமைப்பினர்.

 

2012 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முரளிதரன் அழகர் மற்றும் கணபதி சுப்ரமணியம் ஆகியோரால் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, முகநூல் வழியே பிரபலமாகி இன்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களை கொண்டுள்ளது. குழந்தைகள், மாணவர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள் மற்றும் இதர பணியாளர்கள் என அனைவரையும் வரவேற்கும் இந்த அமைப்பில் சேர, ஓவியக்கலையில் ஆர்வம் மட்டும் இருந்தால் போதும்.

வார நாட்களில் பணிக்கு சென்றுவிட்டு, ஞாயிற்றுக் கிழமைகளில் ஒன்று கூடி தங்களின் ஓவியக்கலை பசியை ஆற்றிக்கொள்ளும் இவர்கள், சென்னை தினத்தை கொண்டாடும் வகையில் மூர் மார்க்கெட், பாரிமுனை, மயிலாப்பூர் மற்றும் மெரினா ஆகிய இடங்களிலுள்ள பழம்பெரும் கட்டடங்களை, தங்கள் ஓவியங்களின் மூலம் புதுமையாக்கினர்.

“மகாபலிபுரம், காஞ்சிபுரம், எண்ணூர் ம்யூசியம், சிறுவர் பூங்கா, மெரினா, செம்மொழி பூங்கான்னு பல இடங்கள்ல எல்லாரும் ஒன்னு கூடி வரைஞ்சிருக்கோம். கண்டிப்பா ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் வெவ்வேறு இடங்கள்ல நாங்க வரைவோம். ஓவியம் வரையறதுல ஆர்வம் இருந்தா போதும், யாருவேணா இந்த அமைப்புல சேர்ந்து வரைய ஆரம்பிக்கலாம். இன்னைக்கு ‘மெட்ராஸ் டே’ங்குறதுனால மூர் மார்க்கெட், உயர் நீதிமன்றம், மயிலை, மெரினானு நாலு இடங்கள்ல வரையறோம். வரைஞ்சு முடிச்சிட்டு ஒண்ணு கூடி ஓவியங்கள பார்த்துட்டு, க்ரூப் ஃபோட்டோ எடுத்துட்டுக் கிளம்பிடுவோம்” என்றார் ஓவியர் மணவாளன், விக்டோரியா மாளிகையை வரைந்தபடி.

சென்ட்ரல் அருகில் வசிக்கும் சிறுவர்கள் சூழ்ந்து நிற்க, ரயில் பயணிகள் பலரும் இவர்களுடைய தத்ரூபமான ஓவியங்களை வியப்புடன் கண்டு களித்தனர். மழைத்துளிகளின் தாலாட்டோடு நாள் முழுதும் சென்னை நகரின் பழமை வாய்ந்த கட்டடங்கள்,  இவர்களின் ஓவியங்களில் உயிர் பெற்றன.
   
-ஜெ. விக்னேஷ்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ