Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'நமக்கு அன்னாடம் வாழறதே போராட்டம்தான், அக்காங்...!'

மிழக அரசியல் அரிச்சுவடியைப் பொறுத்தமட்டில், அ - அரசியல் என்றால், ஆ - ஆர்ப்பாட்டம் என்றே சொல்லலாம். அறிக்கை, மறுப்பு, கண்டனம், கைது, விடுதலை, வெற்றி, தோல்வி, ராஜினாமா, மரணம் என அரசியல்வாதிகளின் பொதுவாழ்வில் ஏற்படும் ஒவ்வொரு நிகழ்வும் பொதுமக்களின் மத்தியில் ஆர்ப்பாட்டங்களில்தான் பிரதிபலிக்கும்.

சைக்கிள் செயின், சோடா பாட்டில், கருங்கற்கள், தக்காளி, முட்டை என ஒரு புறத்திலிருந்து பறந்து வர, மறுபுறம் போலீஸாரிடமிருந்து, தடியடிகளும், கண்ணீர் புகை குண்டுகளும் பாய்ந்து வர, ஒரு போர்க்களமாகவே அந்தப் பகுதி மாறிவிடும். மேலும் பொதுமக்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, அவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி, ஒருவித அச்சத்தை ஏற்படுத்திவிடுபவை இந்தச் சம்பவங்கள்.

மொத்தத்தில் ஒரு அரசியல் ஆர்ப்பாட்டம் என்பது வெறும் கசப்பான, வெறுக்கத்தக்க நினைவுகளையே நம் மனதில் ஏற்படுத்துகிறது.

ஆனால் அரசியல் போராட்டம் நடக்கும் இடத்தில், தங்கள் வாழ்வின் பெரும்பகுதியைக் கழிப்பவர்கள் பார்வை நம்மைப் பெரிதும் வியப்பில் ஆழ்த்துகிறது. இரு கும்பல்கள் மோதிக் கொள்வதை தங்களுக்கு லாபமாகக் கருதுகிற மக்கள் வாழ்கிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா?. சரி. யார் இவர்கள்? ஆர்ப்பாட்டத்தால் இவர்களுக்கென்ன லாபம்? வாருங்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வோம்...

கடந்த 22  ஆம் தேதி, தஞ்சாவூர் ரயில் நிலையம் அருகே தமிழக அரசைக் கண்டித்து தமிழக காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்த இடத்தில் அ.இ.அ.தி.மு.க வினரும் வந்து சேரவே,களம் சூடு பிடிக்கத் தொடங்கியது. சற்று நேரத்தில் செருப்பு வீச்சு, கல் வீச்சு என வன்முறையாக  ஆர்ப்பாட்டம் திசைதிரும்பியது. அந்த சமயத்தில்தான் அவர்களை கவனித்தோம். ஓட்டப்பந்தயத்திற்குத் தயாராகும் ‘உசேன் போல்ட்’ ஐப் போல் எதற்கோ ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர். அவர்கள் வேறு யாருமல்ல. ரயில் நிலைய வாசலில்  பிச்சை எடுக்கும் பிச்சைக்காரர்கள்.

அவர்களின் டார்கெட், ஆர்ப்பாட்டத்தில் சிதறிக்கிடக்கும் செருப்பு மற்றும் பொருட்கள். அவற்றை பொறுக்கத்தான் அப்படி ஆயத்தமாகி இருக்கிறார்கள் எனத் தெரியவந்தபோது ஆச்சர்யமாக இருந்தது. அவர்களிடம் பேச்சு கொடுத்த போது, "அப்பப்போ இங்க இப்டிதான் அட்ச்சிக்குவாங்கோ! செருப்பு, கொடில்லாம் வந்து குவியும். நாங்க எடுத்துக்கினு பூடுவோம்" என்று தங்களுக்கே உரிய மொழியில் தெரிவித்தார்கள்.

மேலும் இவ்வாறு, சிதறியும், கிழிக்கப்பட்டும், பாதி எரிந்தும் எரியாமலும் வீசப்படும் கட்சிப் பதாகைகள்தான் இவர்களுக்கு ஆடித்தள்ளுபடி புதுத்துணி போல. அதுவும் 100 சதவீத தள்ளுபடிபோல. முகத்தில் அத்தனை உற்சாகமாக அவற்றை பொறுக்கி எடுத்து சென்றனர்.

இரண்டு கால்களை  இழந்த நிலையிலும் கீழே விழுந்திருக்கும் குப்பைப் பதாகைகளையும், அறிவிப்புக் காகிதங்களையும் பொறுக்கி எடுத்துக்கொண்டிருந்தார் ஒரு நபர். தன் பெயரைக் கூட சொல்ல விரும்பாத அளவிற்கு வாழ்வில் கசப்பான அனுபவங்களைச் சந்தித்த அவர், இந்தத் தாள்களையும், மற்ற பொருட்களையும் கடையில் போட்டால் ஐந்து முதல் பதினைந்து ரூபாய் வரை கிடைக்கும் என்றார். அன்றைய பொழுதைக் கழிக்க அது போதுமென்றார்  சன்னமான குரலில்.

இது நடந்துகொண்டிருக்கும் போதே தலையில் ஒரு பெரும் பாத்திரத்தைத் தூக்கிக் கொண்டு வந்தார் ஒரு வயதானபெண்மணி.  அங்குள்ள இட்லிக் கடை ஊழியரான அவர், உருவ பொம்மைகளிலிருந்து எரியாமல் மீதமிருக்கும் கட்டைகளையும், மரத்துண்டுகளையும் அவசர அவசரமாக பொறுக்கினார். அவரிடம் கேட்டதற்கு, "நான் வேலை பார்க்கும் கடையின் அடுப்பிற்கு இன்னும் ரெண்டு மூணு நாளைக்கு இதுதான் விறகு!" என்று சர்வ சாதாரணமாக  கூறிவிட்டு நடந்தார்.

இதெல்லாம் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, யாருமே வராத அந்தப் பூக்கடையின் அருகில் அமர்ந்து பூக்கட்டிக் கொண்டிருந்தார் அந்த பெண்மணி. ’இத்தனைக் கலவரத்திற்கு மத்தியில் பூக்கட்டிக்கொண்டிருக் கிறீர்களே, உங்களுக்கு பயமாக இல்லையா?’ என்று கேட்டதற்கு, ‘போராட்டத்தல்லாம் பாத்தா பொழப்பு ஓடுமா தம்பீ! நமக்கு வாழறதே அன்னாடம் போராட்டமாத்தான் இருக்குது. எங்க போராட்டம் எங்க வயித்தக் கழுவ. அவங்க போராட்டம் சொத்துபத்து சேர்த்து வாழ. எங்க போராட்டத்தின் முன் அவங்க போராட்டம் ஒண்ணும் கிடையாது" என்று வாழ்வின் நிதர்சனத்தை பொட்டிலடித்தாற்போல் சொன்னார், அந்தப் பூக்காரப் பெண்மணி.

அரசியல் போராட்டங்கள் என்றாலே, மேல் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரிடம் வெறுப்பு மட்டுமே பொங்குகிற நிலையில், இந்த அடித்தட்டு மக்களின் வாழ்வியலில், கண்டன ஆர்ப்பாட்டங்களும், கொடும்பாவி எரிப்புகளும் ஏற்படுத்தும் உணர்வு விந்தையானது. வாழ்வின் பொதுவான நிழ்வுகளை மனிதர்கள் வெவ்வேறு கோணங்களில் அணுகுவதுதான் வாழ்வின் சுவாரஸ்யமே.

போர்க்களமாய் எரிகிற இந்தக் களங்களிலிருந்து எந்த சலனமுமின்றி தங்களுக்கு புதுத்துணி தேடுகிற இவர்களின் மனநிலையும் அந்த சுவாரஸ்யத்தின் ஒரு அங்கம்தான்.

- ச.அருண்
படங்கள்:
ம.அரவிந்த்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close