Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'புற்றுநோயை வெல்லலாம் வாங்க...!'- டெர்ரி ஃபாக்ஸ் நிறுவனத்தின் மாரத்தான் ஓட்டம்!

சென்னை ஐ.ஐ.டி யில் ஞாயிற்றுக்கிழமை  ஏழாவது டெர்ரி ஃபாக்ஸ் மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்ட இந்த மாரத்தான் ஓட்டம், புற்றுநோய் ஆராய்ச்சிக்கு நிதி திரட்டும் வகையில், டெர்ரி ஃபாக்ஸ் நிறுவனத்தால் நடத்தப்பட்டது.

சென்னை- கிழக்கு ரோட்டரி க்ளப் மற்றும் ஐ.ஐ.டி மெட்ராஸின் உதவியுடன் நடைபெற்ற இந்த ஓட்டத்தில்,  குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் குடும்பத்துடன் பங்கேற்றனர். பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களும் ஆர்வத்துடன் இதில் கலந்து கொண்டனர். உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெறும் இந்த மாரத்தான் ஓட்டத்தின் வரலாறு, மனிதர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் அமைந்துள்ளது.

கனடாவின் வின்னிபெக் நகரில் 1958-ல் பிறந்த டெர்ரி ஃபாக்ஸ்,  ஆஸ்டியோசார்கோமா எனும் ஒருவகை புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு தனது வலது காலினை இழந்தார். மனம் தளராத டெர்ரி ஃபாக்ஸ், செயற்கை காலுடன் புற்றுநோய் ஆராய்ச்சிக்கு நிதி திரட்ட கனடா முழுவதும் 143 நாட்கள் 5373 கிலோமீட்டர்கள் ஓடினார். 1981 ஆம் ஆண்டு தன்னுடைய 22 வது வயதில் புற்றுநோயின் தாக்கம் அதிகரித்து மரணமடைந்தார். அவருடைய மறைவுக்குப் பின், 53 நாடுகளில் 600க்கும் மேற்பட்ட நகரங்களில் ஆண்டு தோறும் “டெர்ரி ஃபாக்ஸ் ரன்” எனும் மாரத்தான் ஓட்டம் நடைபெற்றுவருகிறது.

சென்னையில், 2009 ஆம் ஆண்டு புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட இளைஞரான ஆகாஷ் துபே என்பவரால், டெர்ரி ஃபாக்ஸ் மாரத்தான் ஓட்டம் தொடங்கப்பட்டது. ஆகாஷ் புற்றுநோயுடனான பல்வேறு போராட்டங்களுக்கு பின் 2012 ஆம் ஆண்டு இறந்தார். சென்னையில் இதுவரை ஆறு மாரத்தான் ஓட்டங்கள் நடைபெற்றுள்ளன. இந்த ஏழாவது மாரத்தான் ஓட்டத்தின் தனி சிறப்பு, இதில் டெர்ரி ஃபாக்ஸின் சகோதரி ஜூடித் ஃபாக்ஸ் பங்கேற்றதுதான்.

“சென்னையில், டெர்ரி ஃபாக்ஸ் ஓட்டம் மிகச்சிறப்பாக உள்ளது. இத்தனை மக்களை காண்கையில் மகிழ்ச்சி அடைகிறேன். சென்னை மக்களும் கனடா நாட்டு மக்களைப் போல் மிகுந்த கண்ணியத்துடன் நடந்துகொள்கின்றனர்” என உருக்கமாக கூறினார் ஜூடித் ஃபாக்ஸ்.

ஜெனரல் ஜக்பீர் சிங், ஐ.ஐ.டி யின் மாணவர்களின் டீன் சிவா, ரோட்டரி க்ளப்பின் மாவட்ட கவர்னர் சி.ஆர். ராஜு ஆகியோரும் இந்த மாரத்தான் ஓட்டத்தின் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

மாரத்தானில் பங்கேற்றவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் இசை நிகழ்ச்சியும் இடம்பெற்றது. மக்களின் நன்கொடையும், டீ-சர்ட்டுகள் விற்பனையின் மூலம் கிடைக்கும் பணமும் புற்றுநோய் ஆராய்ச்சிக்காக பயன்படுத்தப்படும் என்றனர் இந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்கள்.   
 
- ஜெ. விக்னேஷ்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ