Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஞாயிறில் ஞாளித் திருவிழா!

ஞாயிறில் ஞாளித் திருவிழா!- ‘ரைமிங்கெல்லாம் நல்லத்தான் இருக்கு…ஆனா ஒண்ணும் விளங்கலை யேப்பா…!’ என்கிறீர்களா…?

"மனிதனுக்கு ‘நன்றி’ என்கிற மூன்றெழுத்து வார்த்தையை நம்முடனேயே இருந்து கற்றுத் தரும் ஒரே இனம், நண்பனாகவும், பாதுகாவலனாகவும் விளங்கும் செல்லக் குட்டீஸ்…!" - பில்டப் போதுங்களா?

சங்கத்தமிழ் இலக்கியத்தில் 'ஞாளி' என்றால் நாய். ஒரு மிருகம் என்பதையும் தாண்டி மனிதன் அந்த நன்றியுள்ள ஜீவனுக்கு அளிக்கும் அங்கீகாரம் எக்காலமும் பொதுவானதே. கடந்த 23  ஆம் தேதி மதுரை காந்தி மியூசியம் மைதானத்தில் நாய்களுக்கான கண்காட்சி நடந்தது. இதாங்க விஷயம். அவ்வளவு தானா…! என ரியாக்ஷன் கொடுத்தீங்கன்னா, ஒரு நிமிடம், அது வெறும் கண்காட்சி இல்லைங்க... ஒரு இனத்தின் உதவியால், இன்னொரு இனமே சேர்ந்து கொண்டாடிய திருவிழா.

மதுரை 'கெனைன் க்ளப்' (canine club) நடத்திய இந்த நிகழ்ச்சியில்,  இந்திய வகை கோம்பை, ராஜபாளையம் மற்றும் வெளிநாட்டு வகைகளான ஆப்கன் ஹவுண்ட், டெரியர், ஸ்னூசர், பூடுல், ஐரிஷ் ஷட்டர்   உள்ளிட்ட 150 க்கும் மேற்பட்ட வகைகளை சேர்ந்த  நாய்கள் பங்கேற்றன.

இக்கண்காட்சியில் ஆரோக்கியம், பழக்க வழக்கம், தோற்றம், உடல் அமைப்பு ஆகியவைகளின் அடிப்படையில் போட்டி வைத்து சிறந்த வகையை ஒவ்வொரு சுற்றிலும் கவனமாக தெரிவு செய்தனர். வயதின் அடிப்படையில் குழுக்களாகப் பிரிக்கப்பட்ட நாய்கள் இரண்டு விதமான ரிங்குகளில் (மைதானங் களில்) பங்கேற்றன.

அனைத்து சுற்றிலும் கலந்து கொண்ட நாய்கள் மாலையில் புதுவிதமான சுற்றில் ஈடுபடுத்தப்பட்டன. அதாவது உரிமையாளரோ அல்லது வெளிநபரோ, பன்னிரெண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள் நாய்களை கையாளும் திறன் போட்டி நடைபெற்றது. இதில் வென்றவர்களுக்கு பரிசும் அளிக்கப்பட்டது.

இக்கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்களிடம் பேச “மக்களின் தற்கால பொழுதுபோக்கு அம்சங்கள் பயனற்றவைகளாக உள்ளன. பிராணி வளர்ப்பு என்பது அறிவியல் சார்ந்த ஒரு கலை. குடும்பத்தில் ஒரு உறுப்பினராகப் பார்க்கப்பட்ட வளர்ப்புப் பிராணிகள், இன்று, இயந்திர வாழ்கைக்கு சற்றும் ஒத்துவராத ஒரு நிலையில் நீடிக்கின்றன.

எங்களது சங்கம் மூலம் நாய் வகைகளை மக்களின் சூழலுக்கு ஏற்றவாறு தேர்ந்தெடுப்பது எப்படி என்பதை ஒரு விழிப்புணர்வுக் கல்வியாகப் பரவலாக்குகிறோம். எந்தவொரு மிருகமும் துன்பம் விளைவிப்போருக்கு மட்டுமே இடையூறு ஏற்படுத்தும். வளர்ப்புப் பிராணிகளை ஒரு குழந்தையாக பாவிக்கும் மனோபாவம் இளைய சமூகத்துக்கு வளர வேண்டும் என்கிற ஒரே காரணத்திற்காகத்தான் வித்தியாசமான போட்டிகள், என்றனர்.

போட்டிகளில் பல்வேறு இன நாய்களும் அதனதன் சுற்றில் பரிசுகளை உரிமையாளர்கள் வசமாக்கின. விழாவில் நடிகர் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரனின் வளர்ப்பு நாய்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன. கண்காட்சியில் நாய்கள் வளர்ப்பிற்கான அத்தனை பொருட்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. வளர்ப்பு முறைகள், பிராணிகளுக்கும் உரிமையாளர்களுக்கும் தேவைப்படும் மருத்துவ விழிப்புணர்வு என பயன்களின் பெட்டகமாக விளங்கியது நாய்கள் கண்காட்சி.


ராகினி ஆத்ம வெண்டி மு.
படம்: நா. விஜயரகுநாதன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close