Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்தியவர்கள்: தமிழக ஆச்சரியம்!

ரசு அதிகாரிகள் என்றாலே லஞ்சம் ஊழல் இல்லாமல் காரியம் செய்யாதவர்கள் என்ற நிலை நம் நாட்டில் உருவாகிவிட்டது. அது ஓரளவு உண்மை என்றாலும், அத்தி பூத்தது போல் நேர்மையான அதிகாரிகள் நம்மிடையே வாழ்ந்து கொண்டுதானிருக்கிறார்கள். அவர்கள் நம் கண்களுக்கு தெரிவதில்லை.

நம் சமூகத்தில் மாத ஊதியத்தை தவிர, வேறு வழியில் பணம் ஈட்டாதவர்களை பிழைக்க தெரியாதவர்கள், அணுசரனையாக நடக்கத் தெரியாதவர்கள் என்று ஒதுக்கி வைத்து விடுகிறார்கள். இன்னும் சொல்லப் போனால் குடும்ப உறவுகளேகூட அவர்களை மதிப்பதில்லை.

இதுபோன்ற பல நெருக்கடிகளை கடந்து, 'லஞ்சம் வாங்க மாட்டேன், விதிகளை மீறி செயல்பட மாட்டேன்...!' என்று ஐ.ஏ.எஸ்.அதிகாரி சகாயம் போல் நெஞ்சம் நிமிர்த்தி செயல்படுகிறவர்கள், எதற்கும் வளைந்து கொடுக்காமல் இயங்கிக் கொண்டுதானிருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் ஒரு சங்கம் போல் இணைந்து சந்தித்து, கருத்து பரிமாறி, தங்களைப்போல் மற்ற ஊழியர்களையும் லஞ்சம் வாங்காதவர்களாக மாற்றி வருகிறார்கள். அவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியும், அவர்களை பெரியவர்கள் பாராட்டும் நிகழ்வும் மதுரையில் நடந்தது.

லஞ்சம் தவிர்த்து, நெஞ்சை நிமிர்த்தி நடைபோடும் அப்படிப்பட்ட  அரசு ஊழியர் முதல் மேல்மட்ட அலுவலர்கள் வரையில், லஞ்சம் வாங்காமல் செயல்படுவது பற்றிய அவர்களது அனுபவங்கள் பற்றியும் மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் ‘நெஞ்சம் நிமிர்ந்தவர்கள்’ என்ற  புத்தகம் வெளியிடப்பட்டது.

பொதுப்பணித்துறை உள்ளிட்ட பணம் புழங்கும் துறைகளில் பணியாற்றினாலும், நேர்மையுடன் வாழ்வது பற்றியும், அதனால் அவர்கள் படும் பலவித கஷ்டங்களையும் பதிவு செய்திருக்கிறார்கள் இந்நுாலில்.

லஞ்சம் வாங்காமல் பணி செய்வதை பெருமையாக கருதுகிறார்கள். சிலருக்கு தன் பெற்றோர், ஆசிரியர், சகாயம் போன்றவர்கள் ரோல் மாடலாக இருந்திருக்கிறார்கள். இவர்களை காந்தி அருங்காட்சியகத்திற்கு வந்திருந்த விருந்தினர்கள் கவுரவப்படுத்தினார்கள். இவர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.

இது ஒரு நல்ல முன்னுதாரணமான நிகழ்ச்சி. இப்படிப்பட்டவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரிக்க வேண்டும். லஞ்சம் வாங்குவது கேவலமானது என்ற சிந்தனை அனைவர் மனதிலும் நிலைக்க வேண்டும்.

- செ.சல்மான்
படங்கள்:
ஈ.ஜெ.நந்தகுமார்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ