Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரூ. 150 ல் தொடங்கி ரூ. 30 கோடி சாம்ராஜ்யத்தை நிறுவிய மும்பை தமிழனின் சாதனை கதை!

யர் கல்வி படிக்க வசதியின்றி, தெரிந்தவர் ஒருவர் 1200 ரூபாய் சம்பளத்துடன் வேலை வாங்கி தருவதாக கூறியதை நம்பி, 1990 ல் மும்பைக்கு வேலை தேடி சென்றார் 17 வயது பிரேம் கணபதி. மும்பை சென்று சேர்ந்த உடன்,  ரயில் நிலையத்திலேயே தான் வைத்திருந்த 200 ரூபாயையும் பிக்பாக்கெட் திருடனிடம் பறிக்கொடுத்து விட்டு நின்றார்.

தன்னம்பிக்கையை தவிர வேறு எதுவும் கையில் இல்லாமல் அன்று உதவியற்று நின்ற பிரேம் கணபதி, இன்று 30 கோடி ரூபாய் சாம்ராஜ்யத்தை கட்டி வளர்த்திருப்பது, முன்னேற நினைப்போருக்கெல்லாம் ஒரு தன்னம்பிக்கை டானிக்.

ஹிந்தியும் புரியாமல், கையில் காசும் இல்லாமல் அன்று ரயில் நிலையத்தில் நின்ற அவருக்கு உதவும் வகையில், ஒரு தமிழர் அவரை அருகில் இருந்த கோவிலுக்கு அழைத்து சென்று, வந்து போவோரிடம் பணம் கேட்டு, சென்னைக்கு ஒரு டிக்கெட் எடுத்து கொடுக்க ஏற்பாடு செய்தார். ஆனால் தமிழ் நாடு திரும்பி வர பிரேமுக்கு மனம் இல்லை. வாழ முயன்றுதான் பார்ப்போமே என்ற உந்துதலோடு வேலை தேடினார். ஒரு பேக்கரியில் பாத்திரங்கள் கழுவும் வேலை கிடைத்தது. மாதம் 150 சம்பாதித்தார். அதன் கூடவே பல உணவகங்களில் வேலை பார்த்தார்.

இரண்டு வருடங்களில் ஒரு தள்ளு வண்டியில் இட்லி வியாபாரம் செய்யும் அளவுக்கு பணம் சேர்த்தார். 150 ரூபாய் வாடகைக்கு ஒரு தள்ளு வண்டியையும், 1500 ரூபாய்க்கு சமைக்க தேவையான பாத்திரங்களையும் வாங்கி, தன் வியாபாரத்தை வாஷி ரயில் நிலையம் முன் 1992 ல் தொடங்கினார். தன சகோதரர்களையும் மும்பைக்கு அழைத்துக் கொண்டார். சாலையோர தள்ளு வண்டி கடைகள் என்றால் சுத்தத்தை எதிர்பார்க்க முடியாது என்ற பொதுவான கருத்தை மாற்றினார்.

தொப்பிகள் அணிந்து சுத்தமான முறையில் சமைத்து வியாபாரம் செய்தார்கள். சாலையோர கடைக்கு லைசென்ஸ்  தேவை என்பதால், அவ்வப்போது போலீசிடம் சிக்கி அபராதம்  கட்ட வேண்டிய சூழல் இருந்தது. 5000 ரூபாய் மொத்தமாக சேர்ந்த பின், ஒரு கடையை வாடகைக்கு எடுத்து சின்ன ரெஸ்டாரெண்ட் ஒன்று திறந்தார். கடைக்கு சாப்பிட வரும் கல்லூரி மாணவர்களின் உதவியோடு இணையதளங்களில் தேடி, பல புதிய உணவு வகைகளை செய்து, பரிசோதனை செய்து பார்த்தார். வெவ்வேறு வகையான தோசைகள் செய்ய கற்றுக் கொண்டார். பனீர் தோசை, ஸ்ப்ரிங் ரோல் தோசை என முதல் கட்டமாக 26 வகை தோசைகளை அறிமுகப்படுத்தினார். 2002 ல் 105 வகையான தோசைகள் தயாரிக்கும் அளவுக்கு உயர்ந்தார்.

பிரம்மாண்ட கார்ப்பரேட் கம்பெனிகளின் போட்டிகளை எல்லாம் தாக்கு பிடித்து ஒரு மாலிலும் தனது ரெஸ்டாரெண்ட்டை திறந்தார். வற்றாத தன்னம்பிக்கைக்கும், விடா முயற்சிக்கும் கிடைத்த பலனாக இன்று “தோசா பிளாஸா” என்ற பெயரிலான நிறுவனம், உலகெங்கும்  45 கிளைகள்,  பல கோடி ரூபாய் டர்ன் ஓவரோடு இவர் கீழ் இயங்கி வருகிறது.

ஒரே பாட்டில் ஹீரோ கோடீஸ்வரனாகும் கதையெல்லாம் சினிமாக்களில் மட்டும்தான் போல. நிஜ வாழ்கையில் வெற்றி கனியை சுவைத்தவர்களை எல்லாம் பார்க்கும் போது, “முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்” என்ற வள்ளுவரின் கூற்று தான் கண் முன்னே தோன்றுகிறது.

புதிதான விஷயங்களை தேடி தேடிச் சென்று கற்று கொள்வதும், எந்த ஒரு சூழ்நிலையிலும் தன்னம்பிக்கையை இழக்காமல் இருப்பதும் இந்த தமிழனிடம் நாம் அவசியம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்.
 
- கோ. ராகவிஜயா

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close