Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பெற்றால்தான் பிள்ளையா?

பெண்களுக்கே உரிய தனித்துவமிக்க ஒரு பண்பு, தாயன்பு. தான் சுமந்து பெற்றெடுத்த குழந்தைகளோடு மட்டும் நின்று விடுவதில்லை இந்த தாயன்பு. வற்றாத ஆறு போல் என்றும் சுரந்துக்கொண்டே இருக்கும் அன்பில், தான் காணும் அனைத்து குழந்தைகளையும் அள்ளி எடுத்து அணைத்து கொள்கிறவள் பெண். இதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு சிறப்பு பள்ளிகளில் பணியாற்றும் பெண் ஆசிரியர்கள்.

வெவ்வேறு வகையான உடல் மற்றும் மன நோயால் பாதிக்கப்பட்டு, சராசரி குழந்தைகளை போல இல்லாமல் சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுத்து, அவர்களை இந்த சமுதாயத்திற்குள் வாழ அனுப்பி வைப்பது எல்லோரும் சுலபமாக செய்யக் கூடிய ஒரு விஷயம் அல்ல. எல்லையற்ற பொறுமை, அளவில்லா அன்பு, சகிப்புத்தன்மை, மனதைரியம், கலையுணர்வு போன்ற தனித்தன்மைகள் கொண்டவர்களால் மட்டுமே இது முடியும்.

ஒரே விஷயத்தை வெவ்வேறு விதங்களில் பாடலாக, கவிதையாக, நடனமாக, ஓவியமாக விளையாட்டாக, நாடகமாக குழந்தைகளுக்கு கடத்தி செல்கிறார்கள் இப்பெண்கள். மற்ற குழந்தைகளைப் போல் அல்லாமல், அதிக கவனம் தேவையாதலால் 24 மணி நேரமும் இவர்கள் எண்ணம் முழுக்க இக்குழந்தைகளைச் சுற்றிதான்  இருக்கிறது. இவர்கள் இக்குழந்தைகளுக்கு ஆசிரியர்கள் மட்டுமல்ல, மற்றுமொரு தாயும் கூட என்பதை சென்னையில் சமீபத்தில் நடந்த ஒரு சிறப்பு விளையாட்டு விழாவில் கண் கூடாய் பார்க்க முடிந்தது.

சென்னையில் செயல்பட்டு வரும் அர்விந்த் அமைப்பு  நடத்திய 'ஆடுகளம்-2015' என்ற நிகழ்ச்சி, பல மனவளர்ச்சி பாதிக்கப்பட்ட குழந்தைகளை,  தங்களுடைய குறைகளை ஒரு நாளேனும் மறந்து, விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள வைத்தது. 2004ல் தொடங்கப்பட்ட அர்விந்த் அமைப்பு, ஆட்டிசம், டவுன்ஸ் சின்ட்ரோம் மற்றும் வேறு பல மனநோயால் பாதிக்கபட்ட குழந்தைகளுக்கு மறுவாழ்வு அளித்து வருகிறது.

மேலும், சிறப்பு பள்ளிகளில் பணியாற்ற தேவையான பயிற்சியையும் தேவைப்படுபவர்களுக்கு வழங்கி வருகிறது. சமுதாயத்தில் எல்லோரையும் போல வாழவும், கல்வி பெறவும் இக்குழந்தைகளை தயார்படுத்துகிறது. பள்ளிகளில் உள்ள குழந்தைகளை எல்லாம் ஒன்று சேர்த்து நடத்தப்படும் இந்த விளையாட்டு விழாவில், நடக்கவே சிரமப்படும் குழந்தைகளுக்கு பல நாட்களாக பயிற்சி அளித்து, அவர்கள் மார்ச் ஃபாஸ்ட் செய்வதில் தொடங்கி, ரன்னிங் ரிலே ஓடுவது வரை கூடவே இருந்து பெண் ஆசிரியர்கள் உற்சாகப்படுத்திய விதம் காண்போரை நெகிழச்செய்தது.

விளையாட்டுப் விழாவில் ஒவ்வொரு குழந்தையின் தனி திறனுக்கேற்ப, வெவ்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. பங்குப்பெற்ற அனைத்து குழந்தைகளுமே வெற்றியாளர்களாக கருதப்பட்டு, அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. எங்குமே காண முடியாத ஒரு ஆச்சரியம் என்னவென்றால், எந்த ஒரு போட்டியிலுமே எந்த ஒரு குழந்தையும் போட்டி மனப்பான்மையுடனோ அல்லது வெற்றிப் பெற வேண்டும் என்ற நோக்கிலோ விளையாடவில்லை. தங்கள் ஆசிரியர்கள் ஊக்கப்படுத்த, தாங்கள் மட்டும் விளையாடாமல் சக போட்டியாளர்களையும் உற்சாகப்படுத்திக் கொண்டே விளையாடினர்.

இக்குழந்தைகளை பார்த்துக்கொள்ளும் ஆசிரியர்களின் முக்கியமான சவால், சரியாக பேசவும், யோசிக்கவும் முடியாத மாற்றுதிறனாளிகளையும், பல வகைகளில் முயன்று கம்யூனிகேட் செய்ய வைப்பதுதான். ஒரு வகுப்பில் ஒத்த வயதுடைய மாணவர்களே இருந்தாலும், அவர்களின் ஊன வகைகளை பொறுத்து ஒவ்வொருவரும் வெவ்வேறு திறன் படைத்தவர்கள். சக்கர நாற்காலியில் உட்கார்ந்து இருக்கும் ஒரு சிறுவனுக்கு இருக்கும் ஒரே திறமை, ஓவியம் வரைவதாக இருக்கலாம். இதுபோன்று ஒவ்வொரு குழந்தையின் தனி திறமையை கண்டுணர்ந்து, அதை உலகிற்கு வெளிச்சம் போட்டு காண்பிப்பவர்கள் இவ்வாசிரியர்கள்.

அர்விந்த் அமைப்பின் இணை நிறுவனர் சுதா ஆத்மராஜிடம் பேசியபோது, “இந்த குழந்தைகளோடு இருக்கும்போது ஆயிரம் கவலைகள் இருந்தாலும், மறந்து போய்விடும். ஒரு நிமிடமேனும் நாம் கடந்த கால கவலைகளிலோ அல்லது வருங்காட கனவுகளிலோ மூழ்கி நம்மை மறக்க நேர்ந்தால், இந்த குழந்தைகள் எளிதில் கண்டுப்பிடித்து விடுவர். அதனாலேயே அவர்களோடு இருக்கும்போது அந்த நிமிஷத்தில், அவர்களோடு, அங்கே வாழ வேண்டும்” என்கிறார்.

அர்விந்த் அமைப்பை பற்றி கூறும்போது, “தங்கள் குழந்தைகளுக்கு ஏதோ ஒரு வகையில் மனநோய் இருக்கிறது என அறிந்த உடனே பல பெற்றோர்கள் அவர்களை தொல்லையாகவே பார்க்கின்றனர். முறையான பயிற்சி அளித்தால் அவர்களும் இந்த சமூகத்தில் ஒரு அங்கமாக வாழலாம் என்பதை இந்த சமுதாயத்திற்கு எங்கள் அமைப்பின் மூலம் சொல்ல ஆசைப்படுகிறோம்” என்றார்.

நாம் வாழும் இந்த உலகில் மாற்றத்தை கொண்டுவர வேண்டுமென்றால் ஒரு அரசியல்வாதியாகவோ, ஒரு தொழிலதிபராகவோ அல்லது ஒரு விஞ்ஞானியாகவோதான் இருக்க வேண்டும் என்று கட்டயாமில்லை. பெற்றோர்களாலும், மற்றவர்களாலும் ஒதுக்கப்பட்டு தாங்கள் யார் என்பதைக் கூட முழுமையாக  உணர முடியாத குழந்தைகளின் வாழ்வில், ஆசிரியர்கள் என்ற ரூபத்தில் வந்து ஒளியேற்றி வைக்கும் இந்த தேவதைகளும் சாலச் சிறந்த சமூக போராளிகளே!

கோ. ராகவிஜயா

படங்கள்: கிரண் குமார்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ