Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சாதனை செய்ய சாக்பீஸே போதும்!

"வெட்டியாக நேரத்தை செலவழிப்பதே எனக்கு பிடிக்காது. ஓய்வு கிடைக்கும் நேரங்களில், புதுப் புது சாக்பீஸ் சிற்பங்களை செய்துகொண்டே இருப்பதுதான் என்னுடைய பொழுதுபோக்கு!" என்கிறார் சேலத்தைச் சேர்ந்த சரவணன்.

பொழுதுபோக்கு என்று குறிப்பிட்டாலும், சரவணனின் சாதனை பாராட்டத்தக்கது. சாதாரணமாக நாம் பயன்படுத்தும் சாக்பீஸ் துண்டுகளில், விதவிதமான கலைவடிவ பொருட்களை உருவாக்கி வருகிறார் இந்த சாக்பீஸ் சிற்பி.

நான் ஆறாவது படிக்கும் போது, தாரமங்கலத்தில் இருக்கும் கைலாசநாதர் கோவிலுக்கு போனபோது, கோவிலில் இருந்த சிற்பங்களையும், தூண்களையும் பார்த்து பிரமிப்பு அடைந்தேன். தொடர்ந்து பலநாட்களுக்கு அந்தக் கோவிலில் பார்த்த சிற்பங்களும், அவற்றின் வேலைப்பாடுகளுமே எனக்கு நினைவில் வந்துபோனது. நாமும் சிற்பங்களை செய்ய வேண்டும் என்ற ஆசை எனக்கு ஏற்பட்டது. ஆனால், கல்வெட்டுக்களில் சிற்பங்களை செய்ய முடியாது; புதுமையாக சாக்பீஸில் சிற்பங்களை செய்வோம். அதனால் பெரிய அளவிலான பொருட்செலவுகளும் ஏற்படாது என முடிவு செய்தேன்.

சிற்பங்களை செய்ய முடிவு எடுத்தபின் முதலில், சிறிது சிறிதான வேலைப்பாடுகளுடன் கூடிய சிற்பங்களை மட்டுமே செய்து வந்தேன். ஆரம்பத்தில் சாக்பீஸ் உடைந்துகொண்டே இருந்தது. பின்னர் பக்குவமாக சாக்பீஸ் உடையாத வகையில், சிற்பங்களை செய்ய பழக ஆரம்பித்தேன். தொடர்ந்து பள்ளிக்கு செல்லும் நேரம் தவிர, எல்லா நேரங்களிலும் சாக்பீஸ்தான் என் துணை. இரவு, பகலாக  ஒவ்வொரு சிற்பமாக செய்துகொண்டே இருந்தேன். சின்னச் சின்ன சிற்பங்களாக செய்ய ஆரம்பித்து, யாருடைய உதவியும் வழிகாட்டுதலும் இல்லாமல், நானே எல்லா வகையான கடினமான சிற்பங்களையும் செய்ய கற்றுக் கொண்டேன்.

தொடர்ந்து 14 ஆண்டுகளுக்கும் மேலாக, இதை செய்து வருகிறேன். ஆரம்பத்தில் பொழுதுபோக்காக ஆரம்பித்த இந்த வழக்கம், தற்போது சாதனைக்காக விதவிதமான சாக்பீஸ் சிற்பங்களை செய்யும் கலைப்பணியாக மாறிவிட்டது. இதுவரை 500-க்கும் மேற்பட்ட சாக்பீஸ் சிற்பங்களை செய்துள்ளேன்“ என்கிற சரவணன், தற்போது பி.காம். முடித்துவிட்டு, மார்கெட்டிங் பணியில் இருக்கிறார். வேலை நேரம் தவிர, மற்ற நேரங்களில் சிற்பங்கள் செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

“சிற்பங்களை செதுக்கும் முன் ஒவ்வொரு சாக்பீஸையும், தீயில் சூடுபடுத்துவேன். அப்போதுதான் சாக்பீஸ் எளிதில் உடையாமல், என்னுடைய கற்பனைத் திறனுக்கு ஏற்ப ஒத்துழைக்கும். தாரமங்கலம் கைலாசநாதர் கோயிலில் உள்ள சிற்பங்களைப் போன்றும், குறிப்பாக அந்தக் கோவிலில் யாழி என்ற மிருகத்தின் வாயில், பந்துகள் சுழலும் வகையில் இருக்கும் சிற்பத்தைப் போலவும் சாக்பீஸில் சிற்பங்களை செய்திருக்கிறேன்.  அந்த சிற்பத்தை, பல நாட்கள் சிரமத்துடன் செய்து முடித்தேன்.

சிற்பத்தைப்பொறுத்து பத்து நிமிடங்களில் இருந்து, பல மணி நேரங்கள் வரை ஒரு சாக்பீஸ் சிற்பத்தை செய்ய நேரம் தேவைப்படும். 40-க்கும் மேற்பட்ட யோகாசனங்களை செய்வது போன்ற சிற்பங்களையும், 63 நாயன்மார்களையும் சாக்பீஸ்லேயே சிற்பமாக செய்திருக்கிறேன்.

அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள், தேசத் தலைவர்கள், சமூகத்தில் பிரபலமான மனிதர்கள் என 140-க்கும் மேற்பட்ட பிரபலங்களையும் சிற்பமாக செய்திருக்கிறேன். ஏழு உலக அதிசயங்கள் மற்றும் ஏராளமான கலைநயம் கொண்ட சிற்பங்களையும் செய்து இருக்கிறேன்” என்றபடி அவைகளை பெருமிதத்துடன் நம்மிடம் காட்டி மகிழ்கிறார் சரவணன்.

தொடர்ந்து, “எந்த கோவிலுக்கு சென்றாலும், டிவியில் ஏதாவது ஒரு புதிதான சிற்பத்தை கண்டாலும் உடனே அவற்றை செதுக்க துவங்கி விடுவேன். இந்த சிற்பங்களை எல்லாம், அருகம்புல் நிறைந்த பெட்டிகளில் வைத்து, உடையாமல் பாதுகாத்து வருகிறேன். ஒரு சிலர், திருமணம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பரிசாக கொடுக்கவும், தேவைக்கேற்ற வடிவங்களிலும் சாக்பீஸ் சிற்பங்களை கேட்கிறார்கள். அவர்களின் தேவைக்கேற்ப நான் செய்து கொடுக்கிறேன்.

எதிர்காலத்தில் எனக்கு தெரிந்த சாக்பீஸ் சிற்பக்கலையை பிறருக்கும், குறிப்பா பள்ளிக் குழந்தைகளுக்கும் ஒரு மையம் வைத்து கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால், இப்போதைக்கு ஆர்வமுள்ள மாணவர்களுக்கு என் வீட்டிலேயே இலவசமாக சாக்பீஸ் சிற்பங்களை செய்ய கற்றுக் கொடுத்துக் கொண்டு இருக்கிறேன். சாக்பீஸில் சிற்பம் செய்வது அவ்வளவு ஈசியான வேலை இல்லை. கூர்மையான கவனமும், ஈடுபாடும் ரொம்பவே அவசியம்.

‘தற்போது சாக்பீஸ்களில் இசை ஒலியைக் கண்டுபிடிக்கும் வித்தியாசமான ஆராய்ச்சியிலும் ஈடுபட்டுள் ளேன்” என தனது புது முயற்சியை ஆர்வமாக கூறுகிற சரவணனின் படைப்புகள் 'இந்திய புக் ஆப் ரெக்கார்டி'ல் இடம்பிடித்துள்ளது.

"என்னுடைய சாக்பீஸ் சிற்பங்களை எல்லாம், எக்ஸிபிஷனாக அமைக்கணும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால், அதற்கு போதிய பொருளாதார வசதி என்னிடம் இல்லை. ‘என்னுடைய ஆசை மற்றும் கனவு எல்லாமே, சாக்பீஸ் சிற்பத்தில் பல புதுமைகளைச் செய்து, கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற வேண்டும் என்பதுதான்'’ என நம்பிக்கை தெறிக்க பேசுகிறார் சரவணன்.

சாக்பீஸ் சிற்பிக்கு நாமும் வாழ்த்துக்களை சொல்வோமே!

- கு.ஆனந்தராஜ்
படங்கள்:
சூ.நந்தினி

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ