Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஒரே டீச்சர்.. 74,000 மாணவர்கள்!

ரு ஆசிரியர் என்றால், வகுப்பறைக்கு வந்து நேரடியாக பாடம் நடத்தி உரையாடினால்தான் மாணவர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்ற வழக்கத்தை உடைத்துள்ளார்  26 வயது ரோஷினி முகர்ஜி. இவர் 9-12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, அறிவியல் மற்றும் கணித பாடங்களில் 3900 வீடியோக்கள் மூலம், இதுவரை கிட்டதட்ட 74,000 மாணவர்கள் படிப்பு சுமையை சுலபமாக்க உதவி செய்துள்ளார்.



சிறு வயதிலிருந்தே ஒரு ஆசிரியராக வேண்டுமென்பது ரோஷினியின் கனவாக இருந்திருக்கிறது. அந்த கனவு இன்று சிறகு முளைத்து பறந்து விரிந்து, நான்கு சுவர்களுக்குள் நின்று விடாமல், பல்லாயிரம் மாணவர்களை தினந்தோறும் தொட்டுக் கொண்டிருக்கிறது.

இயற்பியலில் முதுநிலை பட்டம் பெற்றிருக்கும் ரோஷினி, குடும்ப சூழ்நிலை காரணமாக முதலில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். இருந்தும் பாடம் சொல்லிக் கொடுக்கும் கனவில் மனம் திளைத்துக் கொண்டிருக்கவே, தான் பார்த்துக் கொண்டிருந்த வேலையோடு சேர்த்து, examfear.com  என்ற வலைதளத்தை  உருவாக்கினார்.

வாரத்திற்கு ஆறு நாட்கள் தான் வேலை பார்த்த கம்பெனிக்கு உழைத்தது போக, இரவு நேரங்களில் வலைதளத்திற்கான வீடியோக்கள் உருவாக்குவதற்கான வேலைகளில் ஈடுபடுவாராம். வீடியோக்களை பார்த்து, மாணவர்கள் அதிகமாக இவரை தொடர்பு கொண்டு நன்றி தெரிவிக்கவே, இன்னும் அதிகமாக உழைக்க ஆரம்பித்தார்.

ஒரு கட்டத்தில் முழு நம்பிக்கை ஏற்பட்டு,  தான் பார்த்துக் கொண்டிருந்த பன்னாட்டு நிறுவன வேலையை ராஜினாமா செய்து விட்டு, முழு நேரமாக மாணவர்களுக்கு உதவ இயற்பியல், கணிதம், வேதியியல் போன்ற பாடங்களில் வீடியோக்களளை உருவாக்கி,  ஒரு பிரத்யேக யூடியூப் சேனலில் அப்லோட் செய்ய ஆரம்பித்தார். குறிப்பாக வீடியோக்களை பார்த்து விட்டு, அதன் கீழே கமெண்ட்களில் மாணவர்கள் கேட்கும் கேள்விகளுக்கும், சந்தேககங்களுக்கும் அங்கேயே விளக்கம் தருகிறார்.

பெரும்பாலான வீடியோக்கள், வாழ்வியல் எடுத்துக்காட்டுக்களோடு சுவாரஸ்யமாக இருப்பதால், மாணவர்கள் எளிமையாக புரிந்துகொள்ளும் வண்ணம் உள்ளது.

இந்த வீடியோக்களை கட்டணமின்றி மாணவர்கள் டவுன்லோட் செய்து கொள்ளலாம். தரமான பள்ளிகளில் படிக்க வசதியின்றி தவிக்கும் மாணவர்களுக்கும், தன் உதவி நீள வேண்டும் என்பதே தனது கனவு என்கிறார் இந்த இளம் ஆசிரியர்.

மேலும் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும், அனைத்து பாடங்களிலும் உதவ வீடியோக்கள் தயாரித்து வெளியிட உழைத்து வருவதாகவும்  சொல்கிறார்.

ஒரே இடத்தில் இருந்துகொண்டு தனது அசராத உழைப்பின் மூலம் பல்லாயிரம் மாணவர்களுக்கு வழிகாட்டிக்கொண்டிருக்கும் இந்த அற்புத ஆசிரியைக்கு ஒரு சபாஷ்!
 
கோ. ராகவிஜயா

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close