Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பெண்களுக்கு அரசமரம்.. ஆண்களுக்கு ஆலமரம்!

”……புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்” என்பது அறப்பணியாம் ஆசிரியர் பணிக்கு ஒரு மேற்கோள்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகில் உள்ள வேமங்காட்டுவலசு நடுநிலைப்பள்ளியில் உள்ள ஆசிரியர் ரகுநாத்,  தம் பள்ளி மாணவர்களுக்கு எழுத்தறிவோடு சேர்த்து இயற்கை அறிவையும் விதைத்து வருகிறார். அப்பள்ளியிலும், அதன் சுற்றுப்புறத்திலும் உள்ள ஒவ்வொரு மரமும் ஒவ்வொரு மாணவரின் பெயர் சொல்லும்.

இங்குள்ள மாணவர்கள் அனைவரும் 20-20 என்ற திட்டத்தின் கீழ், பள்ளியில் ஒரு குழுவாக இயங்கி வருகின்றனர். அதாவது 2020-ஆம் ஆண்டுக்குள் 20,000 மரங்களை நட்டு, சுற்றுச் சூழலுக்கு தங்களால் இயன்ற பங்கை மாசில்லாமல் அளிக்க வேண்டும் என்பதே இத்திட்டத்தின் இலக்கு.

இத்திட்டத்தின் செயல் வடிவம் குறித்தும், பலன்கள் குறித்தும் அவர் கூறுகையில், “வாகனங்களும், தொழிற்சாலைகளும் புகை கக்கும் நகரத்தில் அதன் தீமைகளை விளக்குவதை விட, அதை தடுப்பதற்கான வழிமுறைகளை செயல்படுத்துவதே உத்தமம். முதலில் மரக்கன்றுகள் இருந்தால் மட்டுமே மழை கிடைக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. அதையும் தாண்டி மரங்களால் விளையும் பலன்கள் ஏராளம். ஏதோ ஒரு மரத்தையோ, அழகு செடியையோ வளர்ப்பதைக் காட்டிலும் பாரம்பரிய மரக்கன்றுகளை மாணவர்கள் மூலமாக நட்டு, அது குறித்த விழிப்பு உணர்வை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே இத்திட்டத்தின் தலையாய கடமை.

அதன்படி பெண்கள் அதிகம் கூடும் இடங்களில் அரசமரம், அசோகமரம், ஆண்கள் கூடும் இடங்களில் ஆலமரம், குழந்தைகள், வயதானவர்கள், அடிக்கடி உடல் நிலை சரியில்லாதவர்கள் இருக்கும் இடங்களில் வேப்பமரம், புங்கன், அரசமரம் முதலான மரங்களை நட வேண்டும் என மாணவர்களும், அவர்கள் மூலம் மக்களும் அறிந்து கொண்டுள்ளனர்.

 மேலும், இயற்கை விதிப்படி, ‘ஒன்றின் கழிவு மற்றொன்றிற்கு உரமாகும். இந்த உயிர்ச்சூழல் சுழற்சி பாதிக்காமல் இருக்க, இந்த மரக்கழிவுகளை உரமாக்கி மீண்டும் அதற்கே தருகிறோம். மேலும் பள்ளியில் மாணவர்கள் பயன்படுத்தும், வீணாக்கும் கழிவுகள் உதாரணமாக பேப்பர், நெகிழி போன்ற மக்கும் மக்காத குப்பைகளையும் பிரித்து அதையும் மறுசுழற்ச்சிக்கு உட்படுத்த வழிவகை செய்துள்ளோம். இதற்கென தனி கேன் வைத்துள்ளோம். இது குறித்து விழிப்பு உணர்வு மாணவர்களிடையே அதிகரித்ததன் விளைவாக மாணவர்கள் நெகிழி பொருட்கள் பயன்படுத்துவதை குறைத்துள்ளனர்” என விளக்கினார்.
 
இந்த ஆர்வம் எங்கிருந்து வந்தது?

”எனது குடும்பம் விவசாய குடும்பம். விவசாயத்தில் ஏதாவது செய்ய வேண்டும் என ஆர்வம் இருந்தது. இந்த ஆர்வத்தில்,  இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரிடம் இயற்கை வேளாண்மை பயிற்சி எடுத்தேன். அதன் பிறகு இதனை மாணவர்களிடம் முதலில் பரப்ப வேண்டும் என இத்திட்டத்தை செயல்படுத்தினேன். இந்த ஊர் மக்களிடையேயும் இது குறித்து விழிப்பு உணர்வு ஏற்படுத்த, கேட்போருக்கு இலவசமாக மரக்கன்றுகளை வழங்கி வருகிறோம்” என தனது  அனுபவத்தை பகிர்ந்தார்.

மாணவர்களிடம் இதனால் ஏற்பட்ட மாற்றங்கள்?

”திட்டத்தின் ஆரம்ப காலத்தில் ஆர்வமுள்ள மாணவர்களை மட்டுமே பயன்படுத்தி வந்தோம். ஆனால் இப்பொழுது மாணவர்களிடம் இது குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டதும் அனைவரும் ஆர்வமுடன் பங்கேற்கின்றனர். மாணவர்களின் ஆர்வம் என்னை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது.

மாணவர்கள் இத்திட்டத்தில் பங்கெடுப்பதன் மூலம், மாணவர்களின் குணங்களில் மென்மைத் தன்மை அதிகரித்துள்ளது. அவர்கள் முகத்திலும், அகத்திலும் மலர்ச்சியை உணர முடிகிறது. தங்கள் ஓய்வு நேரத்தை மரங்களுடன் செலவிடுவதன் மூலம், அவர்கள் உடல் ஆரோக்கியமும் மேம்பட்டுள்ளது. இது போன்று சிறு வயதிலேயே அவர்கள் இயற்கையுடன் இயைந்து இருப்பதால், எதிர்காலத்தில் இவர்கள் எந்த ஒரு துறைக்கு போனாலும் இயற்கையை விடாமல் காப்பார்கள் என்பதில் ஐயமில்லை” என மாணவர்கள் மனதில் ஏற்பட்ட மாற்றங்களையும் சொன்னார்.

இத்திட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள், ஒவ்வொரு மரத்தின் பயன்பாடு குறித்தும் விளக்குவது ஆச்சரியமாக உள்ளது. எந்த மரத்துக்கு எந்த உரம், எந்த பகுதிகளுக்கு எந்த மரம் என்பது குறித்தும் இவர்களுக்கு தெளிவான பார்வை உள்ளது.

"இத்திட்டத்திற்கு பொது மக்களிடமும் ஆதரவு நன்றாக உள்ளது. மக்களும் இதில் ஆர்வமுடன் பங்கெடுக்க முன்வருகின்றனர். செடிகளுக்கு செயற்கை பூச்சிகொல்லிகள் பயன்படுத்தக் கூடாது என மாணவர்கள் மூலம் பொது மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.

மேலும் இத்திட்டம் குறித்து சுற்றுப்புறத்தில் உள்ள பள்ளிகளுக்கும் விழிப்பு உணர்வை ஏற்படுத்தி வருகிறேன். மேலும் எங்கள் பள்ளியில் பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி போல சிறுதானிய உணவு போட்டிகளும் நடத்தி வருகிறேன். பள்ளிகளில் ஆரம்பித்த இத்திட்டத்தை, தமிழ்நாடு முழுவதும் பரப்ப வேண்டும் என்பதே என் அவா” என பசுமை மணம் பரப்பி வருகிறார் ஆசிரியர் ரகுநாத்.
     
ச. ஆனந்தப்பிரியா
படங்கள்: சூ. நந்தினி

எடிட்டர் சாய்ஸ்

MUST READ