Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சுற்றுப்புறச் சூழல் மாசு: கால்களால் தீர்வு சொல்லும் ஓவியம்!

ஸ்கேல் இல்லாமல் ஒரு கோடு வரைந்தாலே அது அஷ்ட கோணலா போகும். ஆனா சென்னை அம்பத்தூர் சேது பாஸ்கரா பள்ளி மாணவி ஏ. ஆர். காவியா, காலிலேயே ஓவியம் வரைந்து அசத்துகிறார்.

கடந்த ஆகஸ்ட் 22 ஆம் தேதி ஒரு போட்டிக்காக, தொடர்ந்து இரண்டு நாட்களாக கால்களால் ஓவியம் வரைந்து சாதனை படைத்திருக்கிறார். இதற்காக அவர் எடுத்துக்கொண்ட தலைப்பு சுற்றுப்புறச்சூழல் மாசுவும், அதற்கான தீர்வும்.

தொழிற்சாலைகளில் இருந்து வரும் ரசாயனக் கழிவு, நீர்நிலைகளை மாசுபடுத்துவதை வரைந்து, அதனால் கடல் வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுவதை அதில் காட்டியிருந்தார்.

இன்னொரு பகுதியில் கரி, பிளாஸ்டிக் போன்றவற்றை எரிப்பதனால் காற்று மாசடைவதை காட்சிப்படுத்தியிருந்தார். ஒலிப்பெருக்கிகளினால் ஏற்படும் இரைச்சல், வாகனங்களில் இருந்து வரும் புகை என இன்னும் பல இடம்பெற்றிருந்தன. இறுதியில் இதற்கான தீர்வாக, மரம் வளர்ப்பையும் வரைந்து பாராட்டு பெற்றார்.

11 ஆம் வகுப்பு மாணவியான காவியா, படிப்பில் மட்டுமல்ல, மற்ற திறமைகளிலும் சகலகலாவல்லியாக திகழ்கிறார். சாதனைக்கு பாராட்டு தெரிவித்து அவரிடம் பேசினோம்.

இப்படி ஒரு சாதனை செய்யணும்னு உங்களுக்கு எப்படி தோணுச்சு? என்று கேட்டதும் பட பட வென சொல்ல ஆரம்பித்தார்.

“சின்ன வயதிலிருந்தே பரத நாட்டியம், குச்சுப்புடி, கரகம் கத்துக்கிட்டு இருக்கேன். கரகம் வைச்சு ஆடுவது, தட்டு மேலே ஆடுறது, ஒவியம் வரைஞ்சுட்டே ஆடுறதுனு பலவிதமா முயற்சி பண்ணுவேன். ஒரு படத்தில் காலால் வரைஞ்சுட்டே ஆடுறத பார்த்து, ஏன் நம்மளும் பண்ணக்கூடாதுனு தோணுச்சு. வீட்டிலேயும் ஊக்கப்படுத்தினாங்க. தலையில் கரகம் வைச்சு ஆடிக்கிட்டே  8 நிமிஷத்துல கிளி வரைஞ்சேன். இது லிம்கா புக் ஆப் ரெக்கார்டில் பதிவானது"  என்று சொல்கிற காவியாவின் கரக ஓவியம்,  'எலைட் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்', 'இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்' சாதனைப்பட்டியல்களிலும் இடம் பிடித்திருக்கிறார்.

இப்போது கின்னஸ் சாதனைக்காக 100 சதுர மீட்டர் பரப்பளவில், காலால் ஓவியம் வரைய பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கிறார்.

காவியா மீண்டும் பயிற்சியை தொடர, அவரது சித்தி தொடர்ந்து பேசினார் நம்மிடம்.

வணிக வரித்துறை உதவி ஆணையரான இவர், காவியாவின் முயற்சிகளுக்கு பெரிதும் உறுதுணையாக இருக்கிறார்.

“காவியா 2014 முதல் இப்படி நடனத்துடன் ஓவியம் வரைகிறார். இந்த சாதனைக்காக வழக்கமான சாக்பீஸ், கோலப்பொடி இல்லாமல் பெயிண்ட் பயன்படுத்தியிருக்கிறார். இது மற்றவற்றை விட சிரமம். பெயிண்ட் ரோலர்களை காலில் பிடிக்க வசதியாக, காவியாவின் தந்தை, 'உலோக காலணி' போன்று தயார் செய்திருந்தார். பிரஷ்களை கட்டை விரலுக்கும், அடுத்த விரலுக்கும் இடையில் பிடித்து பயன்படுத்துகிறார்.

காவியா நடனம், ஓவியத்தில் சூப்பர்.. படிப்பில் எப்படி?

“கரகத்தை சரியாக தலையில் வைத்துக்கொண்டு, ஓவியம் வரைந்தபடி இசைக்கும் ஆடுவது இடது மூளை, வலது மூளை இரண்டையும் பயன்படுத்தும் வேலை. ஒரே சமயத்தில் பல வேலைகளை செய்ய, அதுவே அவளுக்கு பயிற்சி கொடுத்தது. அதனால் மிக சுலபமாக படிப்பிலும் கவனம் செலுத்துகிறாள். 10 ஆம் வகுப்பில் பள்ளியில் முதல் மாணவி இவள்தான்.”

காவியா படிக்கும் சேது பாஸ்கரா பள்ளி முதல்வர் எஸ்.பி.பி செல்வக்குமார்
“படிப்பு, நடனம், ஓவியம், மேடைப்பேச்சு கூடுதலாக இன்னொரு வேலை கொடுத்தாலும் திறம்பட செய்வார்” என்றார் பெருமிதமான குரலில்.

போட்டியின்போது காவியாவின் நண்பர்கள் காயத்ரி, வைத்தீஸ்வரி, சனா, ஸ்ரிஷ்டி, அக்‌ஷயா போன்றோரும் அவரை உற்சாகப்படுத்த வந்திருந்தனர். பெயிண்டை கலக்குவது கூட காலால், வரைபவரே செய்ய வேண்டும்; வேறு யாரும் உதவக் கூடாது என்ற போட்டி நிபந்தனையினால், காவியாவிற்கு உதவ முடியாத வருத்தத்தில் இருந்தனர் தோழிகள்.

கால் வலி, சோர்வு இதையெல்லாம் தாண்டி சாதிக்க வேண்டும் என்ற நம்பிக்கை மிளிர்கிறது காவியாவின் முகத்தில்.

- ஐ.மா.கிருத்திகா
படங்கள்;
ஷர்வின்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close