Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கிளி ஜோஸ்யம்: 'அதெல்லாம்.. ஒரு காலம் தம்பி!'

டந்த பத்து வருடங்களுக்கு முன்பு வீதிக்கு வீதி கிளி ஜோஸ்யம் பார்ப்பவர்களை பார்த்திருக்கலாம். காலத்தின் வேகத்தால் அது காணாமலே போய்விட்ட நிலையில், நாம் கோபிச்செட்டிப்பாளையத்தில் ஒரு கிளி ஜோஸ்யரை சந்தித்தோம்.

''என் பேரு முனியப்பன். கொடிவேரி அணைக்கரைதான் என்னோட ஊரு. எங்க குடும்பம் பூசாரி குடும்பம். ஆனாலும் எனக்கு சின்ன வயசுல இருந்தே கிளி ஜோஸ்யத்துல ஈடுபாடு. அதுக்கு நெறைய மனப்பாடம் செய்யணும். ஏன்னா மொத்தம் இருபத்தி ஏழு நட்சத்திரம் இருக்கு. அதனால இருபத்தி ஏழு சாமிப்படங்களை கவருக்குள்ள வச்சிரணும். ஒவ்வொரு சாமிக்கும் ஒவ்வொரு பலன் இருக்கு. அது அனைத்தையும் மனப்பாடம் செய்யனும். அப்பதான் திக்காம, திணறாம சொல்ல முடியும். ஊடால ஒண்ணு ரெண்டு பலன சேர்த்து சொல்லவும் தெரியணும். மொத்ததுல பெரிய திறமை வேணும்.

சமயத்துல ரெண்டு பேருக்கு ஒரே கவரை எடுத்துக்குடுத்துரும் கிளி. அதுமாதிரி நடக்காம இருக்கணும்னா, கிளி எடுத்த கவரை கடைசில வச்சிட்டா கிளி எடுக்காது. அந்த அளவுக்கு கிளியை பழக்கி வச்சிருப்போம். அதனால முழுசயும் மனப்பாடம் செஞ்சுக்கிட்டேன். அப்புறம் அதை எனக்கு நானே சொல்லிப்பார்த்துக்கிட்டேன். அப்புறம்தான் கிளி ஜோஸ்யம் பாக்கணும்கிற முடிவுக்கே வந்தேன்.

இருபது வயசுல கிளி ஜோஸ்யம் பார்க்க ஆரம்பிச்சேன். ஊரு ஊரா போய் ஜோஸ்யம் பார்ப்பேன். ஒருதடவை வீட்டை விட்டு கௌம்பிட்டா, திரும்பி வர ஒரு வாரம், ரெண்டு வாரமாவும்.  ஒரு தெருவுக்குள்ள போயி, நாலஞ்சி பேரு உக்கார்ந்து இருக்குற எடம் பார்த்து நின்னம்னா போதும். உடனேயே கூப்பிடுவாங்க. அங்கு உட்கார்ந்தாலே கொறைஞ்சது பத்து பேருக்காவது பார்த்துரலாம்.

அப்பல்லாம் காரூவா (25 பைசா), எட்டணா (50 பைசா) தான் குடுப்பாங்க. ஒரு நாளைக்கு கொறைஞ்சது அம்பது பேருக்காவது பாத்துருவேன். என்ன ஒண்ணு.. வெயில்னு பாக்காம போகணும். விலைவாசியெல்லாம் அப்ப பெரிசா இல்ல. அஞ்சு காசுக்கு ஒரு ஐஸ் குடுப்பாங்க. அதுவே பத்துக்காசு குடுத்தா மூணு ஐஸா கொடுத்துருவாங்க. வெயிலுக்கு எதமா ஐஸை சாப்ட்டுட்டு போய்க்கிட்டே இருப்பேன்.

ஒரு நாளைக்கி இருபது ரூபா, இருபத்தஞ்சி ரூபா சம்பாதிச்சிருவேன். அதுவே போதுமானதா இருக்கும். ஒரு நூறு நூத்தம்பத தேத்திக்கிட்டுக் ஊரப்பாக்க கௌம்பிருவேன். அதெல்லாம் ஒரு காலம் தம்பி. ஒரு கட்டத்துல ஜோஸ்யம் பாக்குறவங்க கொறைஞ்சி போனதால, சொந்த செலவுக்கே சிரமப்பட வேண்டியதாயிருச்சி. அதனால ஒரு எட்டு வருசம் ஜோஸ்யம் பார்க்குறதையே விட்டுட்டு வீட்டுலயே மொடங்கிட்டேன். அப்புறமும் அந்த ஆசை என்னை விடல. அதனால மறுபடியும் ஜோஸ்யம் பார்க்க கௌம்பிட்டேன். என்ன ஒண்ணு.. இப்பல்லாம் மக்கள் அதிகமா கூடுற எடமாப்பாத்து உக்காந்துக்குவேன். எங்கயும் வெளியூருக்கெல்லாம் போக முடியல. வயசு அறுபதாயிருச்சில்ல..

இந்த எடத்துல ஒரு நாளைக்கு ஆயிரம் பேரு வந்து போவாங்க. அதுல பத்து பேரு பாக்குறதே பெருசு. ஏன்னா கம்ப்யூட்டர வச்சி ஜோஸ்யம் பாக்க ஆரம்பிச்சிட்டாங்க. முன்னெல்லாம் கிராமங்கள்ள ஏதாவது ஒரு வூட்டுல ஒரு பொருள் காணாம போச்சின்னா, எங்களதான் பார்ப்பாங்க. அவங்க கேக்குற கேள்வியிலேயே அதை புரிஞ்சிக்கிட்டு, அதுக்கேத்த மாதிரி சொல்லிட்டு வருவோம். இப்ப அப்படியா..?  வூட்டுல பைக்கு சாவி தொலைஞ்சி போனாலே போலீஸுக்கு போயிடுறாங்க. இருந்தாலும் ஒண்ணு ரெண்டு பேரு நம்பிக்கை வச்சி வருவாங்க. அதனால கிராமத்து சனங்க கூடுற எடமாத்தான் பாத்து உக்காரணும். பொண்ணு புள்ளைக்கி கல்யாணம் நடக்காம இருந்தாகூட எங்ககிட்ட கேட்ட காலமெல்லாம் மலையேறிடுச்சு. இப்ப எங்க பெத்தவங்க பாத்து கல்யாணம் முடிக்கிறாங்க. எல்லாம் அதுங்களே பாத்துகிடுதுகளே..

காலையில வீட்டுல நானும் சாப்ட்டுட்டு, கிளிக்கும் கொஞ்சம் சோறு கொடுத்துட்டு வந்துருவேன். அப்புறம் இங்கன விக்கிற அவிச்ச சோளக்கதிர வாங்கி நானும், கிளியும் பங்குபோட்டு திண்ணுக்கிட்டு இருப்போம். கிளிக்கு சாப்பாடெல்லாம் பெரிசா தேவையில்ல. நான் என்ன சாப்டுறனோ அதையே கிளியும் சாப்ட்டுக்கும். இதுவரைக்கும் பத்து கிளிக்கு மேல பார்த்துட்டேன். முன்னாடியெல்லாம் மூணு, நாலு கிளிய வச்சிருப்பாங்க. அவங்ககிட்ட ஒரு கிளிய வாங்கிக்குவோம். இப்ப கிளி எங்க கெடைக்கிது? இருந்தாலும் இந்த கிளி வாங்கி நாலு வருசமாச்சி. பேரு மணின்னு வச்சிருக்கேன். எங்கிட்டும் போவாம என்னையே சுத்திக்கிட்டு கெடக்குது. வெளியில கௌம்பும்போதுதான் கூண்டுக்குள்ள இருக்கும். வூட்டுக்கு போய்ட்டா அத தொறந்து வுட்ருவேன். வீட்டுக்குள்ளயே சுத்தி சுத்தி வௌயாண்டுகிட்டு இருக்கும்" என்றவர்,

"ஆமா தம்பி.. உங்க பேரென்ன?" என்றார். சொன்னோம்.

உடனே ''டே மணி, தம்பி பேருக்கு ஒரு சீட்ட எடுத்துக்குடு'' என்றவாறே கூண்டை ஒரு சுண்டு சுண்டினார். விருட்டென்று வெளியில் வந்த கிளி, நடுவில் இருந்த ஒரு சீட்டை எடுத்தது. அதில் சரஸ்வதி படம் இருந்தது. ''தம்பி நீங்க நெனச்ச காரியம் இன்னும் ஒரு வாரம் தாமதமாகும்'' எனத்தொடங்கினார்.

''ஐயா போதும், நாங்க கௌம்புறோம்'' என்றவாறே வண்டியை ஸ்டார்ட் செய்தோம்.

வீ.மாணிக்கவாசகம்

படங்கள்: ரமேஷ் கந்தசாமி

எடிட்டர் சாய்ஸ்

MUST READ