Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அன்று அனாதை விடுதியில்...இன்று அமெரிக்க சாப்ட்வேர் கம்பெனி முதலாளி!

வாழ்க்கையில் முன்னேறாமல் இருப்பதற்கு அது,   காரணங்களை அடுக்குபவர்கள்  அவசியம் படிக்க வேண்டியது ஜோதி ரெட்டி என்கிற சாதனை பெண்மணியின் கதையை. கண்ணுக்கு எதிரே இருந்த பிரச்னைகளை தாண்டி, கண்ணுக்கு தெரியாமல் தனக்கு முன்பிருந்த ஆயிரம் சவால்களையும் கடந்து, அனாதை இல்லத்தில் தொடங்கிய வாழ்கை இன்று அமெரிக்காவில் ஒரு கம்பெனியை நிர்வகித்துக் கொண்டிருக்கிறார்.

1970 ஆம் வருடம் ஆந்திர மாநிலத்தில் பிறந்த ஜோதி ரெட்டி,  குடும்ப சூழ்நிலை காரணமாக தாயில்லா பிள்ளை என்று பொய் சொல்லப்பட்டு, தன் சொந்த தந்தையாலேயே ஒரு அனாதை இல்லத்தில் விடப்பட்டார். அங்கேயே பல வருடங்கள் சொந்த பந்தங்களைக் கூட காணாமல்க் சொல்ல முடியாத தனிமையில் வாடிய போதும், பள்ளிப் படிப்பை கஷ்டப்பட்டு தொடர்ந்திருக்கிறார். விடுமுறை நாட்களில் கூட இல்ல மேற்பார்வையாளரின் வீட்டில் வேலை செய்து, அங்கேயே உண்டு உறங்கியிருக்கிறார் இளம் ஜோதி. பத்தாம் வகுப்பு முடித்த உடனேயே வீட்டிற்கு அழைத்துக் கொள்ளப்பட்டு, கையோடு திருமணம் செய்து கொள்ளவும் வற்புறுத்தப்பட்டார். வேறு வழியின்றி 16 வயதிலேயே திருமணம் செய்து கொண்டார். இரண்டு குழந்தைகளுக்கு தாயானதோடு, தினமும் 5 ரூபாய் சம்பளத்திற்கு வயலில் தினக் கூலி வேலை பார்த்து வந்தார்.

1989 ஆம் வருடம், ஜோதியின் வாழ்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. நேரு யுவ கேந்திரா சார்பில் கிராம இளைஞர்களுக்காக வகுப்புகள் எடுக்கப்பட்டன. அந்த வகுப்புகளில் பாடம் சொல்லிக் கொடுக்க,  படித்தவர்கள் வேறு யாரும் இல்லாததால் ஜோதி அழைக்கப்பட்டார். அந்த சம்பளமும் குடும்பத்தை பாதுகாக்க போதாததால், இரவு நேரங்களில் தையல் வேலையில் ஈடுப்பட்டார். தட்டச்சும் கற்றுக் கொண்டார். பார்த்துக் கொண்டிருந்த வேலையில் அவர் காட்டிய உத்வேகமும், வித்தியாசமான முயற்சிகளும் அவரை யுவ கேந்திர மண்டல மேற்பார்வையாளராக உயர்த்தியது.

அதன் பிறகு பல வாரங்கள் மாவட்டத்தின் வெவ்வேறு பகுதிகளுக்கு வேலை நிமித்தமாக அலைந்தபோதுதான், கல்வியின் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டார். சிரத்தை எடுத்து தானும் மேற்கொண்டு படித்தார். திறந்த நிலை பல்கலைக் கழகத்தில் முது நிலை பட்டப் படிப்பு வரை படித்து, அரசு ஆசிரியராக பணியில் சேர்ந்தார். தன் வீட்டிலிருந்து, வேலைப் பார்த்த பள்ளிக்கு செல்ல இரண்டு மணி நேரம் ஆகும். அந்த நேரங்களில் கூட அயராமல், தான் தைத்த துணிகளை பயணம் செய்யும் பேருந்துகளில் விற்பார். தனக்கு கிடைக்கும் கொஞ்ச ஓய்வு நேரத்தில் கூட, இப்படி வாழ்வில் அடுத்தக் கட்டத்தை நோக்கி முன்னேற வாய்ப்பளிக்கும் வேலைகளில் ஈடுப்பட்டார்.

அமெரிக்கா செல்ல வேண்டும் என்ற கனவு ஜோதிக்கு வரக் காரணம், அங்கிருந்து வந்த அவரின் உறவினர் ஒருவர். அங்கு சென்றால் நல்ல வேலை வாய்புகள் கிடைக்கும் என நம்பினார். இதனால் கணினி கற்க ஆரம்பித்தார். பாஸ்போர்ட், விசாவுக்கு பணம் சேர்க்க துவங்கினார். ஒரு வழியாக பணம் சேர்த்த பின், தன் இரு மகள்களையும் விடுதியில் விட்டுவிட்டு அமெரிக்க சென்றார். வாழ்கையில் எப்படியாவது முன்னேறிவிட வேண்டும் என்கிற ஆசையோடு பறந்து சென்ற ஜோதியை, அமெரிக்கா உடனடியாக வரவேற்கவில்லை. அங்கு சென்ற பின் சரியான வேலையும், தங்க ஒரு இடமும் கூட கிடைக்காமல் அலைந்தார்.

இறுதியில் 'மூவி டைம்' என்கிற வீடியோ கடையில் வேலைக்கு சேர்ந்தார். இந்தியர் ஒருவரின் வீட்டில் வாடைகைக்கு தங்கினார். பல நாட்கள் போராட்டத்திற்கு பிறகு ஒரு நல்ல அமெரிக்க கம்பெனியில் வேலை கிடைத்தது. ஆனால் விதி விளையாடியது. விசா பிரச்னையால் அந்த வேலையையும் விட வேண்டி வந்தது. சில நாட்கள் வேலையிழந்து நின்ற பின், சிறு சிறு வேலைகள் பார்த்தார். விசா பிரச்னையால், தான் சந்தித்த மன வேதனையை வேறு யாரும் அனுபவிக்கக்  கூடாது என்று விரும்பினார். அங்கு தோன்றியதுதான் கம்பெனி தொடங்கும் கனவு. அந்த துறையில் மேற்கொண்டு அனுபவம் பெற்றார். பல நாட்கள் மிக கடினமாக உழைத்தார். இன்று ஜோதி ரெட்டி, அரிசோனாவில் இயங்கி வரும் கீ சாப்ட்வேர் சொல்யூஷன் நிறுவனத்தின் இயக்குனர்!

ஒரே நாளில் நடந்த அற்புதமல்ல இந்த சாதனை. இது, பல வருட இடைவிடாத போராட்டமும், வாழ்கையை வாழ்ந்து தான் பார்ப்போமே என்று உத்வேகம் கொடுக்கும்  துணிச்சலும் ஈன்ற வெற்றிக் கனி.
 


பல கோடி ரூபாய் லாபம் ஈட்டும் நிறுவனத்தின் இயக்குனர் ஜோதி, இன்றும் இந்தியா வரும்போதெல்லாம் பல அனாதை இல்லங்களுக்கும், மகளிர் கல்லூரிகளுக்கும் சென்று உரையாற்றுகிறார். கடும் வெயிலில் கூட வெறும் கால்களோடு அன்று நடந்த ஜோதி, இன்று அறை முழுக்க அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் காலணிகளில் எதை அணிவது என யோசிக்க பத்து நிமிடம் ஆகும் அளவு உயர்ந்திருக்கிறார்.

ஒரு காலத்தில் ஒரு தட்டு நிறைய உணவை தன் கண்ணால் பார்க்க  மாட்டோமா என்று ஏங்கிய ஜோதி,  இன்று பல ஆதரவற்ற மற்றும் அனாதை இல்லங்களின் பசியை தீர்க்க உதவுகிறார். பண உதவியை யார்  வேண்டுமானாலும் செய்யலாம், ஆனால் தங்கள் நேரத்தை ஒதுக்கி ஆதரவற்ற பிள்ளைகளோடு செலவழிக்க முடிவதே சிறந்த தானம் என்பது இவர் கருத்து. அதனால் அடிக்கடி இந்தியா வந்து தன்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் இயலாதவர்களுக்கு செய்து வருகிறார் ஜோதி ரெட்டி.

சிறு சிறு தடைகளை வென்று, பெரிய பெரிய வெற்றிகளை சுவைக்க துடிக்கும் ஒவ்வொரு இந்தியப் பெண்ணிற்கும் முன்னோடியாக விளங்கும் ஜோதிக்கு ஒரு பெரிய சபாஷ்!

 கோ. ராகவிஜயா

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close