Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தன் உயிரை பணயம் வைத்து மற்றவரை காப்பாற்றுபவர்!

ன்னொருவரை நசுக்கிவிட்டேனும் தான் முன்னேற நினைக்கும் பலர் வாழும் இந்த உலகில் தன் உயிரை பணயம் வைத்து பல தற்கொலை முயற்சிகளை தடுத்து வருகிறார் மும்பைவாசி ஒருவர்.

நவி மும்பை பகுதியில் தற்கொலைகள் அதிகம் நடக்கும் வாஷி பாலத்திலிருந்து குதிப்பவர்களை தனியொரு மனிதனாய் ராஜாராம் ஜோஷி என்பவர் கடந்த பல வருடங்களாக காப்பாற்றி வருகிறார். இதற்காக அவர் யாரிடமும் பணம் வாங்குவது கிடையாது.

“ஒருவர் தண்ணீரில் மூழ்கிக் கொண்டிருக்கும்போது, தன் உடலின் எடை முழுவதையும் காப்பாற்றுபவர்களின் தோள்களில் தான் சுமத்துவார். அவ்வாறான சூழ்நிலைகளில் நம் உயிரையும் காப்பாற்றிக் கொண்டு மூழ்கிக் கொண்டிருப்பவரின் உயிரையும் காப்பாற்றியாக வேண்டும். மீனவரான என் தந்தைதான் எனக்கு நீச்சலையும்  தண்ணீரில் மூழ்கியவர்களை காப்பாற்றும் நுணுக்கங்களையும் கற்றுத் தந்தார்” என்கிறார் 37 வயதான ராஜாராம்.

மேலும், ''நான் 12 வயது சிறுவனாக இருந்தபோது, தண்ணீரில் மூழ்கிய ஏழு வயது சிறுவன் ஒருவனைக் காப்பாற்றியிருக்கிறேன். கடந்த மூன்று ஆண்டுகளில் இதுவரை தண்ணீரில் குதித்து தற்கொலைக்கு முயன்ற இருபதுக்கும் மேற்பட்டோரை காப்பாற்றியிருக்கிறேன். தற்கொலைகள் குறித்து கண்காணிப்பு அறையில் இருந்து தகவல் வந்த உடனே விரைந்து சென்று காப்பாற்றும் பணியில் ஈடுபடுவேன்.

பொதுவாக, தற்கொலைக்கு முயன்ற ஒருவரை தேடிக் காப்பாற்ற பத்திலிருந்து, இருபது நிமிடங்கள் வரை ஆகும். ஒருவேளை தற்கொலைக்கு முயன்ற நபர், தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டால் உடலை தேடிக் கண்டுப் பிடிக்க பல மணி நேரம் பிடிக்கும். தண்ணீரில் மூழ்கி இறப்பது எளிது என நினைத்து குதித்து விடுகிறார்கள் பலரும். ஆனால், அதன் பிறகு ஏற்படும் வலியும், வேதனையும் சொல்ல முடியாதது. நீருக்குள் குதித்த அடுத்த கணமே தங்களை யாரேனும் காப்பாற்ற மாட்டார்களா என்பது போல் பலர் அவல குரலிடுவர்.

நான் இதுவரை காப்பாற்றியவர்களில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள். வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களாலேயே பல தற்கொலை முயற்சிகள் இங்கு நடக்கிறது. ஒவ்வொரு முறையும் இப்படி காப்பாற்றிய இளைஞர்களுக்கு அவர்களின் தவறை உணர்த்தி, விலைமதிக்க முடியாத உயிரை, இனியேனும் இப்படி துறக்க முயலக்கூடாது என அட்வைஸ் செய்து அனுப்பி வைக்கிறேன்'' என்றார்.

இவரின் இந்த சேவைக்காக சமீபத்தில் நவி மும்பை கமிஷனர் பாராட்டு தெரிவித்துள்ளார்.


கோ. ராகவிஜயா

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ