Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்னை நந்தனத்தில் வாழும் பால'சிவாஜி'!

ஒரு நடிகரின் பரம ரசிகராக இருப்பது இயல்பான ஒன்றுதான். ஆனால் அந்த பரம ரசிகர், முகத்தோற்றத் தில், தான் விரும்பும் நடிகரைப் போலவே இருப்பது அரிதிலும் அரிது. பிரபல நடிகர்களான ரஜினி, கமல், விஜயகாந்த், வடிவேலு போலவே முகத்தோற்றமும், உடல் அமைப்பும் கொண்டவர்களை  தொலைக்காட்சி மற்றும் மேடை நிகழ்ச்சிகளில் பார்த்திருப்போம். அவர்கள், அந்த நடிகர்கள் குறிப்பிட்ட சில திரைப்படங்களில் இடம்பெற்ற தோற்றங்களை ஒத்திருப்பர்.

ஆனால் சென்னை நந்தனத்தில் வசிக்கும் சிவாஜியின் தீவிர ரசிகரான பாலசுப்ரமணியம் எனும் பாலசிவாஜி, தன் இளமைப் பருவம் தொடங்கி, நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடிகர் திலகம் சிவாஜி கணேசனைப் போலவே தோற்றமளிக்கிறார்.

60 களில் பாசமலர் சிவாஜியை போல் தோற்றம் அளித்த இவர், இன்று படையப்பா, ஒன்ஸ் மோர் சிவாஜியை போலவே இருக்கிறார். முகம் மட்டுமின்றி, அவரது நடை, உடை, பாவனை என அனைத்துமே சிவாஜியை பிரதிபலிக்கிறது. சென்னை தெருக்களில் இயல்பாக இவர் நடந்துசெல்லும்போது பொதுமக்கள், சிவாஜிதான் நேரில் வந்துவிட்டாரோ என ஒருகணம் ஆச்சர்யப்பட்டுப்போகிறார்கள்.

வெள்ளை குர்தா அணிந்து, நெற்றில் விபூதி பட்டையுடன் கிளம்பிக்கொண்டிருந்த பாலசிவாஜியை சந்தித்தோம்.

“சின்ன வயசுல இருந்தே நான் சிவாஜி சாரோட ரசிகன். ஒவ்வொரு தடவையும் அவர் நடிச்ச படங்கள பாக்கும் போது, அவரோட கதாபாத்திரமாவே நானும் மாறிடுவேன். அவர் கார் ஓட்டுகிற மாதிரி காட்சி வந்தா, என் கால்களும் அசையும். 1960ல இருந்து நான் நாடங்கள்ல நடிக்க ஆரம்பிச்சேன்.

இயல்பாகவே அவரைப் போன்ற முகத்தோற்றமும், சுருட்டை முடியும், உடைகளும் இருந்ததால, என் கூட நடிச்சவங்க எல்லாம் என்ன சிவாஜினுதான் கூப்பிடுவாங்க. ஒருமுறை பிளாசா தியேட்டர்ல ‘குலமா குணமா’ ங்குற படத்துக்கு டிக்கெட் வாங்க க்யூல நின்னுகிட்டு இருந்தேன். சிவாஜி சார் தான் நிக்குறார்னு நெனச்சு, நான் எவ்வளவு சொல்லியும், கேட்காம என்ன உள்ளே கூட்டிட்டு போய், கூல் ட்ரிங்க்ஸ் எல்லாம் குடுத்து, மரியாதை செய்தாங்க. அப்புறம்தான் புரிஞ்சிக்கிட்டாங்க. இருந்தும் சிவாஜி மாதிரி இருந்ததுக்காகவே டிக்கெட் காசு கூட வாங்காம படம் பாக்க வெச்சாங்க” எனக் கூறி நெகிழும் பாலசிவாஜி, வீரபாண்டிய கட்டப்பொம்மன் திரைப்பட ஷூட்டிங்கின் போது பரணி ஸ்டூடியோவில் சிவாஜியை சந்தித்ததை தன் வாழ்வின் மறக்கமுடியாத அனுபவமாக குறிப்பிடுகிறார்.

1975 வரை நாடகங்களில் நடித்துவந்த பாலசிவாஜி, பின் வியாபாரத்தில் இறங்கினாராம். சில ஆண்டுகளுக்கு முன்வரை தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்திருப்பதாக கூறும் பாலசிவாஜி, விரைவில் வெளிவர இருக்கும் ஓர் திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்கும் போது பலரும் தன்னை சிவாஜி என அழைத்ததால், தன் பெயர் பாலசிவாஜி என்றே மாறிப்போனதாக கூறும் அவர்,  தான் வெளியே செல்லும் போதெல்லாம் மக்கள் தன்னை சூழ்ந்து கொண்டு தன்னுடன் செல்ஃபி எடுத்துக்கொள்வதையும் பெருமையுடன் கூறுகிறார்.

“நெறைய பேர் என்ன பாத்து, அடடா! இவரு அப்படியே சிவாஜி சார் மாதிரியே இருக்காரே. ரெண்டு இன்ச் உயரமா இருந்தா சிவாஜி சாரே தான்னு சொல்லுவாங்க. இன்னும் சிலர், நீங்க சிவாஜி சாரோட தம்பியான்னு கூட கேப்பாங்க. மக்கள் இப்படி என்ன ஆச்சர்யத்தோட பார்க்கும்போது, எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும்” என்கிற பாலுசிவாஜி, "தம்பி... என்னை தேடி வந்து பேட்டி எடுக்கிற நீ நல்லா இருக்கணும்பா!" என பாசமலர் சிவாஜி பாணியில் பேசி வாழ்த்தினார் நம்மை.

-ஜெ. விக்னேஷ்

எடிட்டர் சாய்ஸ்