Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'குன்' சிகரத்தைத் தொட்ட முதல் இந்தியப் பெண்!

பெண்கள் சாதனை படைப்பதற்கு முட்டுக்கட்டையாக இருந்த காலம் ’மலையேறிப் போச்சு’ என்பதற்கு, வாழும் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார், மலையேறும் மங்கையான ஜீ.ஆர். ராதிகா.

தெலங்கானாவிலுள்ள, அதிலாபாத் மாவட்டக் காவல் துறையின் கூடுதல் கண்காணிப்பாளர் ஜீ.ஆர்.ராதிகா, காஷ்மீர் மலைத்தொடர்களிலுள்ள ’நுன்’ சிகரத்தைத் தொட்ட முதல் இந்தியப் பெண் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்ட எட்மண்ட் ஹிலாரியின் வாக்குமூலத்தைத்தான் ராதிகாவும் தருகிறார் -  ”நாம் மலைச்சிகரத்தை அடையவில்லை; நம் மனச் சிகரத்தை அடைந்திருக்கிறோம்” என்று.



யார் இவர்?

ஆந்திராவிலுள்ள, கடப்பாவில் ஒரு நடுத்தர குடும்பத்தில், இருபால் ஆசிரிய இணையருக்கு, இரண்டாவது மகளாகப் பிறந்தவர் ராதிகா. சிறு வயதிலிருந்தே, துணிச்சலும் குறும்புத்தனமும் கொண்டவரான ராதிகா, ஆங்கில இலக்கியம் கற்று, விரிவுரையாளராகப் பணியாற்றி வந்தார். பின்னர், தனக்கானக் களம் வேறு என்பதை உணர்ந்து கொண்டுக் காவல்துறையில் சேர்ந்தார் ராதிகா.

2012 ல் இரண்டு குழந்தைகளுக்குத் தாயாகிய அதே வேளையில், காவல் பணியிலும் கடமை தவறாது அனந்தபூரில் பணியாற்றிக் கொண்டிருந்தார் ராதிகா. அச்சமயம் நண்பர் ஒருவரின் மூலமாக, மலையேற்றம் குறித்து கேள்விப்பட்டு, விளையாட்டாக அதில் பயிற்சி மேற்கொண்டிருக்கிறார்.

அந்தப் பயிற்சிதான், இவருக்குள் உறங்கிக் கொண்டிருந்த சிகரம் தொடும் சாதனைப் பெண்ணைத் தட்டி எழுப்பியுள்ளது என்றால் அது மிகையல்ல. பயிற்சி முடிந்தவுடன், இலதாக்கிலுள்ள, ’கோலப் காங்ரி’ மலையின் 5980 மீட்டர் உயரமுள்ள சிகரத்தைத் தொட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து, ஹிமாச்சலப் பிரதேசத்திலுள்ள, ’மெந்தோஸா’ மலையின் 6443 மீட்டர் உயரச் சிகரத்தை எட்டியுள்ளார்.

இவ்வாண்டு, காஷ்மீரிலுள்ள இரட்டை மலைகளான ’நுன்-குன்’ தொடரில், குன் எனப்படும் குன்றில் ஏறுவதற்காக, ஏழு பேர் கொண்ட அணியில் ஒருவராகப் பதிவு செய்தார் ராதிகா. பயணத்தின் பாதியிலேயே ஐந்து பேர் விலகிக் கொண்டனர்.

இதைக் கண்டு சற்றும் மனம் தளராத ராதிகா, தொடர்ந்து தன் வெற்றிப்படிகளை எடுத்து வைத்தார்.

இது குறித்து அவரிடம் கேட்கையில், ” ‘குன்’னில் ஏறுவது மற்ற மலைகளைப் போல் எளிமையானதல்ல, பனிப்பிளவுகள் எனப்படும் பெரும் விரிசல்கள் நுன் குன்னில் அதிகம். அது மட்டுமன்றி ‘பனிச்சுவர்’ எனப்படும் செங்குத்தான மலைப்பாங்கு இங்கு மிக அதிகம். ஒரு குறிப்பிட்ட இடத்தில் 300 மீட்டர் செங்குத்தான ஏற்றத்தை ஆறு கிலோ சுமையுடன் கடந்தேன்” என்று மெய்சிலிர்க்க வைக்கிறார் ராதிகா.

இவரது உற்சாகத்தைக் கண்டு பூரித்துப் போன, இவரின் அணியினர் ’ராதிகாவின் மன உறுதி அலாதியானது’ என்று பாரட்டுகின்றனர்.

''இதைச் சாதித்த முதல் இந்தியப் பெண் என்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன்; தொடர்ந்து இந்த முயற்சியைக் கைவிடாமல் மேற்கொள்வேன்.” என்று மகிழும் ராதிகா எவரெஸ்டையும் தன் இலக்குப் பட்டியலில் வைத்துள்ளார்.

எவரெஸ்ட் கனவு குறித்து இவரிடம் கேட்கையில், ”தற்சமயம் உறுதியிட்டுக் கூற முடியாது; ஆனால் கட்டாயம் என் எதிர்கால இலக்குகளில் எவரெஸ்ட்டும் உண்டு” என்கிறார் இந்தச் சாதனைப் பெண்மணி.

'மலைச் சிகரங்கள் மேலும் வளருவதில்லை. ஆனால் மனிதன் வளர்ந்து கொண்டே இருக்கிறான்’ என்ற ஹிலாரியின் வரிகளுக்கு ராதிகா போன்றோர், ஒரு வாழும் எடுத்துக்காட்டு.

-ச.அருண்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ