Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கலாம் ஓவியர் கணேசன்..!

திருநெல்வேலி பள்ளி ஒன்றில் ஓவிய ஆசிரியராக பணியாற்றுபவர் கணேசன். இவர் 2010ஆம் ஆண்டு பத்தமடை ராமசேசய்யர் பள்ளியில் படித்துக் கொண்டு இருந்தபோது, சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடந்த மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சியில் அப்துல்கலாமின் படத்தை வரைந்து, பார்வைக்கு வைத்தார். இது பலரது பாராட்டை பெற்றது.

இதையடுத்து, கணசேன் தொடர்ந்து அப்துல்கலாமின் ஓவியங்களை வரைய ஆரம்பித்திருக்கிறார். மொத்தம் 33 அப்துல் கலாமின் ஓவியங்களை வரைந்துள்ளார். தீக்குச்சிகள், பழைய துணி, சமையல் மசாலா பவுடர் என கையில் கிடைத்தவற்றை எல்லாம் படைப்பு கருவியாக்கி அழகு பார்த்திருக்கிறார்.

இவரது நண்பர் ஒருவர் அதனை படம்பிடித்து அப்துல்கலாம் பார்வைக்கு அனுப்பி வைத்திருந்தார். இதை கண்ட  அப்துல்கலாம், ஓவியர் கணேசனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாராட்டியிருக்கிறார். மேலும், அவரது முயற்சியை பாராட்டி பத்தாயிரம் ரூபாய்க்கான காசோலையையும் அனுப்பி வைத்திருக்கிறார். கலாம் தன்னுடன் பேசிய அந்த 7 நிமிடங்கள் தான், என் வாழ்வில் மகிழ்ச்சியான நிமிடங்கள் என்கிறார் கணேசன்.

''துவக்கத்தில் கலாமின் உதவியாளர்தான் என்னிடம் பேசினார். இதையடுத்து என்னிடம் பேசிய கலாம், முதலில் என் குடும்பத்தை விசாரித்தார். ஏன் என்னை படம் வரைய முடிவு செய்தீர்கள் என கேட்டார். அவர் நீண்டநேரமாக என்னிடம் விசாரித்தது, நீங்கள் இந்த ஓவியப்பயிற்சியை யாரிடம் கற்றுக்கொண்டீர்கள். உங்கள் குருநாதர் யார் என்பதுதான். ஏனெனில் அப்துல்கலாம் எப்போதும் தமது குருநாதர்களை மதிக்கக்கூடியவர். ராமேஸ்வரம் பள்ளியில் அரிச்சுவடி கற்றுத்தந்த ஆசிரியர் முதற்கொண்டு, திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் 1950களில் தமக்கு இயற்பியல் கற்றுத்தந்த பாதிரியார் லடிஸ்லாஸ் சின்னத்துரை வரையிலும் அனைவரையும் போற்றி பாதுகாத்தவர். பாதர் சின்னத்துரை திண்டுக்கல்லில் உள்ள இயேசு சபையின் பெஸ்கி இல்லத்தில் தங்கியிருக்கிறார். அவரை அண்மையில் நேரில் சந்தித்து உடல்நிலையை கேட்டறிந்தார். பாதர் சின்னத்துரை இல்லையென்றால் தாம் இல்லை என்றும் கலாம் கூறினார்.

அவர் எப்போதும் தமது ஆசான்களை நினைத்து நினைத்து உருகியிருக்கிறார். அந்த வகையில் எனது ஓவிய குருநாதர் யார் என கேட்டார். நான் பயின்ற பத்தமடை ராமசேசய்யர் பள்ளியின் ஓவிய ஆசிரியர் சிவராமகிருஷ்ணன் குறித்து கூறினேன். சிவராமகிருஷ்ணன் சார் தற்போது ஓய்வுபெற்று விட்டார். நான் அவரிடம்தான் ஓவியம் கற்றேன். என்னைப்போல இன்னும் 40 பேர் கற்றுக்கொண்டோம். எங்களுக்கு இன்றைக்கு ஓவியம்தான் சோறு போடுகிறது. ஓவியத்தை கற்றுத்தந்தபோதே அவர் வீட்டில் எங்களுக்கு சாப்பாடும் போட்டு சொல்லித்தந்தார். பிராமின் சமூகத்தை சேர்ந்த அவரது அக்ரஹாரத்து வீட்டுக்குள் எங்கள் அனைவரையும் எந்த பாகுபாடும் இன்றி நடத்தினார்.

எப்போதும் அவர் வீட்டில் நாங்கள் புடைசூழ நிற்போம். என்னைப் போன்றவர்கள் தனியாக ஓவியக்கல்லூரிகளில் சென்று கற்றுக்கொண்டதில்லை. ஆனால், அப்துல்கலாம் பேசியதில் இருந்து எங்கள் ஓவிய ஆசான் மீது எனக்கு இன்னமும் கூடுதல் பிடிப்பு ஏற்படுகிறது. அப்துல்கலாம் எனக்கு செக் அனுப்பிய விஷயத்தையும், அவர் தங்களை விசாரித்ததையும் எங்கள் குருநாதர் சிவராமகிருஷ்ணன் சாரிடம் நேரில் சொன்னபோது அவரது மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. நான் எட்டாத உயரத்தை நீ எட்டியிருக்கிறாய் என பாராட்டினார்.

அதேபோல், எங்கள் ஆசிரியரிடம் ஓவியம் கற்றுக்கொண்ட நாற்பது ஓவியர்களும் சேர்ந்து, அவரை பாராட்டி ஓவிய கண்காட்சிக்கு ஏற்பாடு செய்தோம். அவரும் அதைத்தான் விரும்பினார். இப்போது அப்துல்கலாம் ஓவியங்களை பள்ளிகள்தோறும் ஓவிய கண்காட்சியாக வைக்கலாம் என திட்டமிட்டுள்ளேன். கலாமின் பிறந்த தினத்தை யொட்டி 15ஆம் தேதி ராமேஸ்வரத்தில் அவரது நினைவிடத்திலும், மகாகவி பாரதி, வ.உ.சி, ஆகியோர் பயின்ற நெல்லை ம.தி.தா. இந்து கல்லூரியில் அனைத்து படங்களையும் பார்வைக்காக வைத்துள்ளோம்'' என்றார்.



-மு.விஜய் சங்கர்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close