Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

R.K.Laxman: மொழிகளைத் தாண்டி அனைவரையும் கவர்ந்த அற்புதமான கலைஞர்!

மொழிகளைத் தாண்டி அனைவரையும்  கவர்ந்த அற்புதமான கலைஞர்கள் உருவாவது அபூர்வம். அப்படி உருவான ஒருவர்... ராசிபுரம் கிருஷ்ணசாமி லஷ்மண்; சுருக்கமாக ஆர்.கே.லஷ்மண். அவரது 'காமன் மேன்’ - இந்தியனின் மனசாட்சி. காலை செய்திதாளில் பார்க்கும் அவரது கார்ட்டூன், அந்த நாள் முழுவதும் நம்மைக் கலகலப்பாக வைத்திருக்கும். அவரின் பிறந்த தினம் இன்று(அக்.:24)

ஒருமுறை பிரதமர் நேருவைக் கிண்டல் செய்து ஒரு கார்ட்டூனைப் போட்டுக்கொடுத்துவிட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டார் லஷ்மண். அடுத்த நாள் காலை, பிரதமர் அலுவலகத்தில் இருந்து அவருக்கு போன். மறுமுனையில் பேசியவர், பிரதமர் நேரு. 'உங்கள் கார்ட்டூனை நான் மிகவும் ரசித்தேன். அதில் என்னை நீங்கள் நகைச்சுவையாகச் சித்திரித்திருந்த விதம் அருமை. எனக்கு நீங்கள் வரைந்த அந்த ஓவியத்தை என்லார்ஜ் செய்து தர முடியுமா? நான் அதை ஃப்ரேம் செய்துவைத்துக்கொள்ள விரும்புகிறேன்’ எனக் கேட்டார்.   

நேருவுக்கு இருந்த அந்த நகைச்சுவை உணர்வு, அவரது மகள் இந்திரா காந்தியிடம் இல்லை. நெருக்கடி காலத்தின்போது, இந்திராவை நேரில் சந்தித்தார். 'சுதந்திரமாக கார்ட்டூன் போடுவதில் ஏராளமான பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது’ என லஷ்மண் சொல்ல... 'சட்டத்தின் முன் அனைவரும் சமம்’ என அதட்டலாகப் பதில் சொல்லித் திருப்பி அனுப்பிவிட்டார் இந்திரா. அதனால் இந்தியாவைவிட்டு சில காலம் வெளியே இருக்கவேண்டிய சூழல். இந்திரா தேர்தலை அறிவித்த நேரம், நாடு திரும்பினார். அதன் பிறகு பிரதமராக வந்த மொரார்ஜி தேசாயும் ஆர்.கே.ல‌ஷ்மணின் கார்ட்டூன்களை நகைச்சுவை விமர்சனங்களாக எடுத்துக்கொள்ளவில்லை.

 

'காமன் மேன்’ - சாமானிய இந்தியன்தான் லஷ்மண் கார்ட்டூன்களின் ஆதர்ச அடையாளம். அந்த 'காமன் மேன்’ உருவம் ல‌ஷ்மணின் சிந்தனையில் அத்தனை சுலபமாகப் பிறந்துவிடவில்லை. 'இந்தியன் எப்படி இருப்பான்?’ என ஒரே ஒரு சித்திரம் மூலம் வரைந்து காட்டிவிட முடியாது. ஏனெனில், சிலர் தாடி வைத்திருப்பார்கள்; சிலர் பெரிய மீசை வைத்திருப்பார்கள். வட இந்தியர்கள் ஒருவிதமாக ஆடை உடுத்துவார்கள். தென் இந்தியர்கள் வேறு மாதிரி உடை உடுத்துவார்கள். அதனால் காமன் மேனை உருவாக்க ஆரம்பத்தில் நான் நிறையவே சிரத்தை எடுக்கவேண்டியிருந்தது’ எனச் சொல்லியிருக்கிறார் ல‌ஷ்மண். பூனாவில் இருக்கும் ஒரு கல்லூரியில் இவரது சாமானியனுக்கு, 10 அடி உயரத்தில் சிலை ஒன்று அமைத்திருக்கிறார்கள்.

 எத்தனையோ இந்தியப் பிரதமர்களை ல‌ஷ்மண் வரைந்திருக்கிறார் என்றாலும், அவருக்குப் பிடித்தமானவர் தேவகவுடா. அவர் பிரதமராக இருந்த சமயத்தில் பல முக்கியமான கூட்டங்கள் நடக்கும்போது, அசதி காரணமாகத் தேவகவுடா தூங்கிவிடுவார். அதை வைத்து லஷ்மண் அவரை தன் கேலிச் சித்திரங்களில் செம ஓட்டு ஓட்டியிருக்கிறார். ஒருமுறை லஷ்மணைச் சந்திக்க வேண்டும் என தேவகவுடா கூப்பிட்டு அனுப்பினார். ஆனால், அந்தச் சந்திப்பின்போதும் தேவகவுடா சற்று கண் அயர்ந்ததுதான் ஹைலைட்.

 பிற்காலத்தில் மகசேசே விருதை பெற்றிருந்தாலும், ஆரம்பக் கட்டத்தில் லஷ்மணுக்கு ஓவியம் வரைவதற்கான திறமை போதாது என, பம்பாயின் ஜெ.ஜெ ஸ்கூல் ஆஃப் ஆர்ட்ஸ் நிராகரித்ததாம். அதனால், தத்துவத்தின் பக்கம் அவரது கவனம் திரும்பியது. மைசூர் மகாராஜா கல்லூரியில் சேர்ந்தார். அந்தக் காலத்தில்தான் மக்கள் கூடும் பார்க், மார்க்கெட், ரயில்வே ஸ்டேஷன் என சென்று, கண்களில் படும் காட்சிகளை மணிக்கணக்கில் ஓவியங்களாகத் தீட்டி பயிற்சி எடுத்தார். சிறுசிறு பத்திரிகைகளில் ஓவியம் வரையும் வாய்ப்புகள் வரத் தொடங்கின. இவரது அண்ணன் ஆர்.கே.நாராயணும், தன் ஆங்கில நாவல்களுக்கு ஓவியம் வரையும் வாய்ப்புகளை இவருக்குக் கொடுத்தார்.

பட்டப் படிப்பை முடித்துவிட்டு, இந்துஸ்தான் டைம்ஸில் வேலைக்குச் சேரும் முடிவோடுடெல்லி சென்றார் லஷ்மண். 'இத்தனை இளம் வயதில் கார்ட்டூனிஸ்ட் ஆக முடியாது’ என அவரைத் திருப்பி அனுப்பிவிட்டார்கள். மும்பையின் ஃப்ரீ பிரஸ் ஜர்னல் பத்திரிகையின் கதவுகளைத் தட்டி வேலை கேட்க... இவரது திறமையைக் கண்டுகொண்ட அந்தப் பத்திரிகையின் ஆசிரியர், 'இதுதான் உன் ஸீட்... போய் உட்கார்ந்துகொள்’ என ஒரு ஸீட்டைக் காட்டினார். அவர் காட்டிய ஸீட்டுக்குப் பக்கத்து ஸீட்டில் உட்கார்ந்திருந்தவர் யார் தெரியுமா? பால் தாக்கரே.

சிறிது காலத்திலேயே லஷ்மணுக்கும் பத்திரிகை நிர்வாகத்துக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், ஒருநாள் திடீரென வேலையை உதறிவிட்டு வீதியில் இறங்கி நடக்க ஆரம்பித்தார். அன்று பஸ் ஸ்ட்ரைக் என்பதால்... வெகுதூரம் போக முடியவில்லை. அதனால் எதிரில் இருந்த டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகையின் உள்ளே சென்று வேலை கேட்டார். டைம்ஸோடு இப்படி ஆரம்பித்த பந்தம், அரை நூற்றாண்டு தாண்டி செழித்து வளர்ந்தது.

எந்தச் சூழ்நிலையிலும் கருத்துச் சுதந்திரத்தின் குரல்வளை நெறிபடுவதை அனுமதிக்கவே மாட்டார். பாபர் மசூதி இடிப்புச் சம்பவம் இந்தியா எங்கும் கலவரங்களைப் பற்றவைக்க, வட இந்தியாவில் வாகனங்களைத் தீயிட்டுக் கொளுத்தும் போக்கு வாடிக்கையானது. அதைக் கண்டிக்கும் விதமாக ல‌ஷ்மண் ஒரு கார்ட்டூன் வரைந்தார். அதில் சிலர் ரயில்கள், கார்கள் போன்றவற்றைத் தீயிட்டுக் கொளுத்திக்கொண்டிருக்க, ஒருவன் இரு சக்கர வாகனம் ஒன்றைக் கொளுத்தவே திணறிக்கொண்டிருப்பான். அவனிடம், 'என்னடா ராம பக்தன்னு சொல்ற. இதைக்கூட உன்னால் கொளுத்த முடியலையா?’ எனச் சலித்துக்கொள்வார்கள் சகாக்கள். இந்த கார்ட்டூனுக்கு இந்து அமைப்புகளிடம் கடும் ஆட்சேபம் கிளம்பியது. மன்னிப்புக் கேட்கச் சொல்லி வற்புறுத்தினார்கள். ஆனால், எதற்கும் வளைந்துகொடுக்கவில்லை லஷ்மண். அந்த கார்ட்டூனுக்காக வழக்கை எதிர்கொண்டவர் நீதிமன்றம் சென்றபோது, எதிர்தரப்பு வழக்குரைஞரே லஷ்மணிடம் ஆட்டோகிராப் வாங்கியிருக்கிறார். அந்த வழக்குப் பின்னர் நீர்த்துப்போனது!  

லஷ்மணுக்கு, காகங்களை வரைய மிகவும் பிடிக்கும். 'காகங்களைப் போன்ற புத்திசாலிப் பறவைகளே இல்லை’ என வியந்து பேசுவார். 2003-ம் ஆண்டில் இருந்தே உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த லஷ்மண், என்றும் தன் ரசிகர்களைவிட்டுப் பிரிய மாட்டார். காகங்களும், காக்காய்ப் பிடிக்கும் அரசியல்வாதிகளும் இருக்கும் வரை இவரின் கேலிச்சித்திரங்கள் மக்களின் மனதில் நிழலாடிக்கொண்டுதான் இருக்கும்!

பி.ஆரோக்கியவேல்

எடிட்டர் சாய்ஸ்