Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மழையால் உயர்ந்த காய்கறிகள் விலை... சமாளிக்க எளிய வழிகள்!

ந்த மாதத்தின் தொடக்கத்திலிருந்து பெய்து வரும் கனமழையால் சென்னை போன்ற பெருநகரங்களுக்கு லாரிகளில் காய்கறிகள் கொண்டு வருவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. நகரின் பெரும்பகுதிகளில் தண்ணீர் தேங்கியிருப்பதால் காய்கறி, மளிகை உள்ளிட்ட கடைகள் மூடப்பட்டிருக்கின்றன. கடை உரிமையாளர்கள் கோயம்பேட்டுக்கு சென்று காய்கறிகள் கொண்டு வந்து விற்பனை செய்வதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் காய்கறிகள் விலை கடுமையாக உயர்ந்து, மக்கள் வாங்கமுடியாத நிலையில் இருந்து வருகிறது.

'தக்காளி 80 ரூபாய், வெங்காயம் 60 ரூபாய், அவரைக்காய் 50 ரூபாய், முருங்கைக்காய் 70 ரூபாய்' என திரும்பிய பக்கமெல்லாம் காய்கறிகள் விலை விண்ணை முட்டிக் கொண்டிருக்கிறது. இந்த விலைவாசியைக் கண்டு அதிர்பவர்கள் ஒருபக்கம் என்றால், சாமர்த்தியமாக எதிர்கொள்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். என்ன... இந்த சமாளிப்பு பார்ட்டிகளின் சதவிகிதம் மிகமிகக் குறைவு! மற்றபடி புலம்பித் தீர்ப்பவர்கள்தான் இங்கே அதிகம்.

அவர்களுக்காகவே விலைவாசி உயர்வை எதிர்கொண்டு, உணவு விஷயத்தைச் சமாளிக்க என்னென்ன மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்ளலாம் என்பது குறித்தும், விலைவாசியை எளிதாக சமாளிப்பதற்கான சூத்திரங்களை பற்றியும் இங்கு பேசுகிறார் சென்னை, ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியின் மருத்துவ உணவியல் துறை விரிவுரையாளர் குந்தலா ரவி....

"நாம் உட்கொள்ளும் உணவு தானியம், பருப்பு, காய்கறிகள், பழம் மற்றும் பால் பொருட்கள் என ஐந்து வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த ஐந்து வகை உணவுப் பொருட்களிலும் வகைக்கு ஒன்று கட்டாயம் நம் உணவில் இருக்க வேண்டியது அவசியம். அதில் சரியான தேர்வையும், விலைவாசிக்குத் தகுந்த விகிதாச்சாரத்தையும் கடைபிடித்தால், விலையேற்றத்தின் பிடியில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ளலாம்!

சிறப்பு தரும் சீஸன் காய்கறிகள்!

காய்கறிகளைப் பொறுத்தவரை, குறிப்பிட்ட காய்கறிகளையே வாங்காமல், அந்த வகையில் உள்ள வேறு ரக காய்களில் விலை குறைந்தவற்றை தேர்வு செய்யலாம். உதாரணமாக, பீன்ஸ் வாங்க மார்க்கெட்டுக்கு செல்லும்போது அதன் விலை ஏகத்துக்கும் இருந்தால், அதைத் தவிர்த்து, அதே ரக காய்கறிகளான அவரைக்காய், கொத்தவரங்காய் போன்றவற்றை தேர்வு செய்து வாங்கலாம். ஆனால், மக்களோ, 'அவ்வளவு விலையா..?’ என்று மலைத்தாலும்... அதே காயைப் பிடிவாதமாக வாங்கி, அதன் விலை மேலும் உயரவே வழிசெய்கிறார்கள். பொதுவாக, காய்கறிகளைக் குறிப்பிட்ட நாட்களில் அதிக வரத்துள்ள சீஸன் காய்கறிகளாகப் பார்த்து வாங்கினால், விலை குறைவாக இருக்கும். மண்ணுக்கு மேல் விளைபவை, மண்ணுக்கு கீழ் விளைபவை, நீர்ச்சத்து மிகுந்தவை மற்றும் மற்ற காய்கறிகள்... இந்த நான்கு பிரதான காய்கறி வகைகளில், ஒரே வகையில் பல காய்களை தேர்வு செய்வதைவிட, ஒவ்வொன்றிலும் ஒரு காயாக தேர்வு செய்து வாங்குவதும் நல்லது.

கொய்யாவைவிட உயர்ந்ததில்லை ஆப்பிள்!

பழவகைகளில் அமெரிக்க ஆப்பிள், ஆஸ்திரேலிய ஆப்பிள், நியூசிலாந்து திராட்சை என்று வெளிநாட்டு பழவகைகளில் அதிக சத்துக்கள் இருப்பதாக பலரும் நினைக்கின்றோம். உண்மையில், உள்ளூர் தோட்டங்களில் விளையும் வாழை, சப்போட்டா, கொய்யா, பப்பாளிப் பழங்களிலேயே அதிக சத்துகள் நிரம்பியுள்ளன. எனவே, கிலோ 150 ரூபாய், 175 ரூபாய் என மலையளவு விற்கும் ஆப்பிளைவிட, கிலோ 20 ரூபாய் விற்கும் கொய்யா சிறந்தது என்பதை புரிந்து, நம்மூர்ப் பழங்களாக அதிகம் வாங்கப் பழகுங்கள், குறைந்த செலவில் அதிக ஆரோக்கியம் பெறுங்கள். அதிலும், அன்றைய நிலவரப்படி எந்தப் பழத்தின் விலை குறைவாக இருக்கிறதோ, அதைத் தேர்வு செய்து வாங்குவதும் சிறந்தது.

பால் பொருட்கள் அவசியமா?

பாலைப் பொறுத்தவரை சிக்கனமாகப் பயன்படுத்திப் பழக வேண்டும். உதாரணமாக ஒரு லிட்டர் பாலில் தண்ணீர் கலந்து டீ, காபி போட்டுக் குடிப்பதைக் காட்டிலும், அரை லிட்டர் பாலில் தண்ணீர் சேர்க்காமல் காய்ச்சி, கொஞ்சமாகக் குடிக்கலாம். இதில் பணம் மிச்சமாவதோடு, அதிக சத்தும் கிடைக்கும். தயிர் பாக்கெட்களை அதிக விலை கொடுத்து கடையில் வாங்காமல், வீட்டிலேயே தயிர் தயாரிக்கலாம்.

பாலில் சத்துமாவு சேர்த்துக் காய்ச்சுபவர்கள், அந்த மாவை கடைகளில் வாங்காமல் வீட்டிலேயே தயாரிப்பது நலம். சத்துமாவில் இரண்டு தானிய வகைகள் மற்றும் இரண்டு பருப்பு வகைகள் சேர்த்தே தயாரிக்கப்படுகிறது. உதாரணமாக, தானிய வகையில் கேழ்வரகு மற்றும் புழுங்கலரிசியும், பருப்பு வகையில் பாசிப்பருப்பு மற்றும் பொட்டுக்கடலையையும் சேர்த்து, சுலபமாக நாமே வீட்டில் தயாரிக்கலாம்'' என்று விளக்கினார் குந்தலா.

விலைவாசி உயர்வைச் சமாளிக்கும் சில வழிமுறைகள்!

தானியம், பருப்பு, காய்கறி, பழம் மற்றும் பால் சம்பந்தப்பட்ட உணவு வகை பொருட்களில் ஒவ்வொரு வகையிலும் விலை குறைந்த ஒன்றாக தேர்வு செய்து வாங்கலாம்.

ஒரே பொருளை அதிக விலை கொடுத்து வாங்குவதைவிட, அதே தொகைக்கு, பலவகை உணவுப் பொருட்களை வாங்கலாம்.

பீர்க்கங்காய் உள்ளிட்ட பொருட்களின் தோல்களை சட்னி செய்தும் பயன்படுத்தலாம். இதேபோல் முள்ளங்கியில் உள்ள கீரையை சாம்பார், ரசம் போன்றவற்றுக்கு பயன்படுத்தலாம். மீதமாகும் பால் மற்றும் மோரைக் கொண்டு மோர்க்குழம்பு செய்யலாம். இதேபோல் மற்ற பொருட்களையும் வீணடிக்காமல், வேறென்ன மாற்று வழிகளில் பயன்படுத்த முடியுமோ அப்படியெல்லாம் பயன்படுத்தலாம்.

அரிதாகவும், விலை அதிகமாகவும் இருக்கும் காய்கறிகளை விலை குறையும்வரை தவிர்க்கலாம்.

குறைந்த விலையில் கிடைக்கும் பொருட்களை அதிகமாக வாங்கி, கூட்டு, பொரியல் என பலவிதங்களில் பயன்படுத்தலாம்.

ஒரே ஒரு காயை மட்டும் கொண்டு சமைப்பதைவிட, கலவையாக காய்கறிகளைப் பயன்படுத்தலாம். உதாரணமாக, உருளைக்கிழங்கு பட்டர் பீன்ஸ் வறுவல், முட்டைகோஸ் கேரட் பொரியல், முருங்கைக்காய் மாங்காய் சாம்பார் என்று செய்யலாம்" என்று சொல்லி முடித்தார்.

தக்காளிக்கு பதிலாக!

ஊட்டச்சத்து நிபுணர் கிருஷ்ணமூர்த்தி பேசும்போது, ''புளிப்புத் தன்மைக்காகவே தக்காளி பயன்படுத்துகிறோம். வாங்க முடியாத விலையில் இருக்கும்போது, இரண்டு தக்காளி போடவேண்டிய இடத்தில் ஒன்று போட்டுவிட்டு, புளி அல்லது எலுமிச்சையையும் பயன்படுத்தி ஈடுசெய்யலாம். இன்றைக்கு பலரும் வீட்டுத்தோட்டம் பற்றி பேச ஆரம்பித்துள்ளனர். இதை உடனடியாக வீடுகளில் அமல் செய்து கீரைகள், தக்காளி, கேரட், கத்திரிக்காய், முள்ளங்கி என்று விளைவித்து பயன்படுத்தலாமே!'' என்று ஆலோசனையும் சொன்னார்.

கைகொடுக்கும் இயற்கை!

"விலைவாசி உயர்வுக்கு, இயற்கை உணவுகள் மூலமாகவே தீர்வைக் காண முடியும்'' என்கிறார்... சென்னையைச் சேர்ந்த 'இயற்கை பிரியன்' ரத்தின சக்திவேல். இவர், இயற்கை உணவுகள் பற்றிய நூல்களையும் எழுதியிருக்கிறார்.

"காய்கறிகளின் விலை எந்தளவுக்கு உயர்ந்தாலும், இயற்கை உணவு வகைகள் இருக்கும்வரை கவலையே வேண்டியதில்லை. 15 அல்லது 20 ரூபாயை வைத்தே ஒருவேளை உணவை சுலபமாகவும், ஆரோக்கியமாகவும் சாப்பிட முடியும். உணவைப் பொறுத்தவரையில் சமைத்துதான் சாப்பிட வேண்டும் என்பது கிடையாது. அப்படியேகூட சாப்பிடலாம். உதாரணமாக 2 தேங்காய் பத்தை, 2 பேரீட்சை, 50 கிராம் அளவில் ஏதாவதொரு முளைகட்டிய தானியம் இதை மட்டுமே சாப்பிட்டு, காலை உணவை முடித்துக் கொள்ளலாம். வெள்ளரிக்காய், கேரட், வாழைப்பழம், கொய்யாப்பழம் என எது மலிவாகக் கிடைக்கிறதோ, அதில் ஏதாவதொன்றை வாங்கி கூடவே சாப்பிடலாம்" என்று தெம்பு ஊட்டினார்.

கோயம்பேடு வெங்காய சந்தை மொத்த வியாபாரிகள் சங்க செயலாளர் சவுந்தரராஜன் பேசும்போது, "தமிழ்நாடு போலவே, ஆந்திராவிலும் மழை பெய்து வருகிறது. கர்நாடகாவின் சில பகுதிகளும் மழைக்கு இலக்காகியுள்ளது. இருப்பினும் கடும் சிரமங்களுக்கு இடையில் காய்கறிகள் லாரிகள் மூலம் கொண்டு வரப்படுகிறது. மழை தொடர்ந்து இருப்பதால் இந்த விலையுயர்வு இன்னும் சில வாரங்களுக்கும் நீடிக்கும்" என்றார்.

- சா.வடிவரசு, த.ஜெயகுமார்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close