Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நாம் ஏன் வைரல் வதந்திகளைப் பரப்புகிறோம்?

சில தினங்களுக்கு முன் வாட்ஸ்-அப்பில் ஒரு செய்தி. 'பூமியை சக்தி வாய்ந்த விண்கல் தாக்க உள்ளதாகவும், அதன் அளவு கனடாவை விட சற்று பெரியது' என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. சிலர் பதட்டத்துடன் தன்னிடம் இருந்த 10-15 குரூப்களுக்கு ஃபார்வர்டு தட்டினர். சற்று நேரத்தில் ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ்களாக வைரலாகியது. ஒரு கட்டத்தில் நாசாவே கூறியது என்றெல்லாம் கூறப்பட்டு செய்திகள் வரத்துவங்கின. கடைசியில் அதிலிருந்த விஷயம் நடக்கவே இல்லை. இதனை நண்பர் ஒருவரிடம் காட்டும்போது ஆறுமாதம் முன்பே இதே செய்தி, தேதி மற்றும் நாள் மாற்றப்பட்டு அவருக்கு வந்திருப்பதையும் காட்டினார். வைரல் வதந்திகள் இந்த ரகம்தான்!

இவற்றை வார் டயலிங் தொழில்நுட்பத்தோடு ஒப்பிடுகிறார்கள். அதாவது ஒரு செய்தி தொடர் செயலாக பன்மடங்கு பெருகி சில மணி நேரங்களில் அனைவரும் கூறும்போது, இது உண்மையாகத்தான் இருக்குமோ என்ற பயத்தை ஏற்படுத்தும் விஷயமாக மாறிவிடும். இப்படித்தான் இணைய வதந்திகள் பரவுகின்றன. சமீபத்தில் டெலினார் நிறுவனம் நடத்திய சர்வே ஒன்றில் இணையத்தில் பகிரப்படும் விஷயங்களில் 40 சதவிகிதம் வதந்திகள் என்றும், 34 சதவிகிதம் கேண்டி க்ரெஷ் போன்ற ஆன்லைன் விளையாட்டுகளுக்கான அழைப்பு என்றும், 30 சதவிகிதம் தேவையற்ற தகவல்கள் என்றும் தெரிவித்துள்ளது.

இந்த வதந்திகள் எந்த அளவுக்கு இந்தியர்களைப் பாதித்துள்ளது என்றால் இறக்காதவரை, இறந்துவிட்டார் என கூறும் அளவுக்கு வளர்ந்துள்ளது. சினிமா, அரசியல் பிரபலங்கள் வரை பலரை இறந்து விட்டனர் எனக்கூறி RIP பதிவுகளை பதியத்துவங்கி விடுகின்றனர். பின்பு உண்மை தெரிந்தது அதனை டெலிட் செய்து விடுகின்றனர்.  இன்னும் சிலர் சர்ச்சைகளிலும் சிக்கிக் கொள்கின்றனர். போட்டோஷாப் தொழில்நுட்பம் வதந்தியை பரப்புபவர்களின் கைதேர்ந்த ஆயுதம், நடிகர், நடிகைகளுடன் உருவங்களை மாற்றி புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது வழக்கமாகி விட்டது. இது காட்டுத்தீ போல் பரவி அனுப்பியவருக்கே திரும்ப வரும் நேரத்தை பொறுத்து அதன் வைரல் தீர்மானிக்கப்படுகிறது.

இந்த வதந்திகளில் சில எக்ஸ்பயரி ஆனவை. யாரவது ஒருவருக்கு உண்மையிலேயே உதவி தேவைப்பட்டபோது ஒரு செய்தி உண்மையாக பரவி இருக்கலாம். அது பரவி பரவி 2 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு நபரை சென்றடைந்து, அதில் உள்ள நம்பருக்கு போன் செய்தால், அவருக்கே எந்த விஷயத்துக்காக உதவி கேட்டோம் என மறந்திருக்கிறது. இந்த அளவுக்கு இணைய வதந்திகள் வைரலாகி வருகின்றன. கேன்சர் நோய்க்கு உதவுங்கள் என்பது துவங்கி, திருப்பதி திருமலை கோவிலில் பூஜிக்கப்பட்ட தகடு வரை வதந்திகளுக்கு இந்தியாவில் பஞ்சமில்லை. சில வதந்திகளாக மட்டுமல்லாமல் மோசடிகளாகவும், தாக்குதல் சம்பவங்களாகவும் மாறியுள்ளது.


ஏன் வதந்தியை பரப்புகிறார்கள்!

எதேச்சையாக பகிரும் சில விஷயங்களை மற்றவர்களும் நம்பிக்கையின் பேரில் பகிர, அது வைரலாகி வைரஸாகிவிடுகிறது. வலுக்கட்டாயமாக திணிக்கப்படும் வதந்திகள் யாரோ ஒருவரின் தவறான பதிவால் வதந்தியாகி விடுகிறது.
 
சமூக வலைதலங்களில் அப்டேட்டாக இருக்கவேண்டும் என்ற கட்டாயத்தில் தவறான செய்தியாக இருந்தாலும், அதை நான்தான் முதலில் உலகத்துக்குச் சொன்னேன் என்ற பெருமை தேடுகிறோம் நாம். இதை உளவியல் ரீதியாகப் பார்த்தால், இன்று லைக்ஸ் வாங்க ஒரு விஷயமும் இல்லை என்றால், தாங்களே வதந்தியை கிளப்பிவிடுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

வதந்தி பரப்புபவர்கள் ஸ்டைல்லயே இதற்கு தீர்வு சொல்லணும்னா இந்த இணைய வதந்திகளுக்கெல்லாம் 2030 வருஷத்துக்கு முன்னாடியே திருவள்ளுவர் பதில் சொல்லி இருக்காரு. அதைப் பின்பற்றினாலே போதும்!

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.


ச.ஸ்ரீராம்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close