Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

முதல் நக்ஸல்: 15 குறிப்புகளில் ஒரு கம்யூனிஸ்டின் கதை! - மருதன்

க்சல்பாரி இயக்கம் என்றவுடன் கண்ணாடி அணிந்த, மெலிந்த சாரு மஜும்தாரின் உருவம்தான் சட்டென்று நம் நினைவுக்கு வரும். கனு டா என்று ஆதிவாசி மக்களாலும், இயக்கத் தோழர்களாலும் அழைக்கப்பட்ட கனு சன்யாலை, சாருவின் நிழலாகவே பலர் அறிந்து வைத்திருக்கிறார்கள். சாரு மஜும்தாரின் படைத் தளபதி என்று அவர் இன்றும் பல சமயம் தவறாக அடையாளப்படுத்தப்படுகிறார். உண்மையில் கனு சன்யாலைச் சாரு மஜும்தாரிடம் இருந்து பிரித்தெடுத்து தனியொரு ஆளுமையாகவே ஆராயவேண்டும். அவ்வாறு செய்யும்போதுதான் கனு எவ்வளவு தூரம் சாருவிடம் இருந்து வேறுபடுகிறார் என்பதும், எவ்வளவு தூரம் அவருடன் முரண்படுகிறார் என்பதும் புரியவரும்.

தி ஸ்டேட்ஸ்மென் பத்திரிகையின் மூத்த ரிப்போர்ட்டர் பபாதித்ய பால் எழுதிய புத்தகம், The First Naxal: An Authorised Biography of Kanu Sanyal. நூற்றுக்கணக்கான முறை கனு சன்யாலுடன் பிரத்தியேகமாக உரையாடி அவருடைய நினைவுகளையும், அனுபவங்களையும் பபாதித்ய பால் இதில் பதிவு செய்திருக்கிறார். ஆரம்பத்தில் இதற்கு கனு சன்யால் ஒப்புக்கொள்ளவில்லை. போராடித்தான் அவரைச் சம்மதிக்க வைத்திருக்கிறார். உங்களுக்குப் பிறகு நக்சல்பாரி இயக்கத்தைப் பற்றி வேறு யாரிடமிருந்தும் கேட்டுத் தெரிந்துகொள்ளமுடியாது என்று பபாதித்ய பால் வலியுறுத்திய பிறகே கனு பேசத் தொடங்கியிருக்கிறார்.

இனி, 15 சிறு பகுதிகளில் கனு சன்யாலின் போராட்ட வாழ்க்கை.

 1. கனு சன்யால் தொடக்கத்தில் கம்யூனிஸ்டுகளை வெறுத்திருக்கிறார். அதற்குக் காரணம், அவர் மிகவும் நேசித்த சுபாஷ் சந்திர போஸை கம்யூனிஸ்டுகள் கடுமையாக விமர்சித்தனர். மகாத்மா காந்தி மீதும் நிறைய மதிப்பு இருந்தது. கொல்கத்தாவில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில், காந்தியைக் காண்பதற்காக அடித்துப் பிடித்து உள்ளே நுழைந்து தன் கையையும் உடைத்துக்கொண்டார். சரியான சிகிச்சை எடுத்துக்கொள்ளாததால் இறுதிவரை அவர் தோள்பட்டை சற்றே சாய்ந்து இருந்தது.

 2. 1948-ம் ஆண்டு மேற்கு வங்க காங்கிரஸ் அரசாங்கம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மீது தடையைக் கொண்டு வந்தபோதுதான் கனு சன்யாலுக்கு அந்தக் கட்சிமீது ஈர்ப்பு ஏற்பட்டது. விரைவில் கட்சியில் சேர்ந்தார். சாரு மஜும்தாரின் உணர்ச்சி பொங்கும் உரையைக் கேட்டபிறகு முழுநேர உறுப்பினராகவே மாறிவிட்டார். தனிப்பட்ட வாழ்க்கை என்று அதற்குப் பிறகு அவருக்கு எதுவுமில்லை.

 3. 1952-ம் ஆண்டு நக்சல்பாரிக்கு நிரந்தரமாகக் குடிபெயர்ந்தார். சரியான கூலி கொடுக்காமல், ஆதிவாசி தொழிலாளர்களைக் கசக்கிப்பிழிந்து கொண்டிருந்த நிலவுடைமையாளர்களுக்கு எதிரான பிரசாரம் தொடங்கப்பட்டது. செல்வாக்குமிக்க நிலவுடைமையாளர்களும், பண்ணையார்களும் காவல்துறையின் துணையை நாடி கனு சன்யாலை ஒடுக்கத் தொடங்கினர். கனு சன்யாலின் சிறை வாழ்க்கை ஆரம்பமானது. போராட்டம், சிறை, மீண்டும் போராட்டம், வேலை நிறுத்தம், சிறை என்பதே வாழ்க்கையாகிப்போனது.

 4. இனி விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த தானியங்களை பண்ணையார்களிடம் கொடுக்க வேண்டியதில்லை, அவர்களே வைத்துக்கொள்ளலாம் என்று சொல்லப்பட்டபோது சிலர் தயக்கத்துடன் சாருவைப் பார்த்தனர். சாரு சிரித்தார். இது எனக்கும் பொருந்தும், கவலைப்படாதீர்கள் என்றார். ஆம், குடும்பச் சொத்தாக அவரிடமும் நிலம் இருந்தது. மற்ற பண்ணையார்களைப் போல் அடித்துப் பிடுங்கப்பட்ட நிலம் அல்ல அது என்றாலும், சாரு அதன் மீதான உரிமையை விட்டுக்கொடுத்தார். அந்த நிலத்தில் இருந்து வரும் தானியம் எதையும் அவர் பெற்றுக்கொள்ளவில்லை.
 
 5. பண்ணையார்களிடம் மட்டுமல்ல தொழிலாளர்களிடமும் குறைகள் இருக்கின்றன என்பதை கனு சன்யால் புரிந்து வைத்திருந்தார். ஒருமுறை விவசாயிகள், தொழிலாளர்கள், ஆதிவாசிகள் அனைவரையும் திரட்டி ஒரு பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டபோது உள்ளுக்குள் குழப்பமும் கூச்சலும் நிலவியது. எல்லாருக்கும் ஒரே சமையலறையில்தான் உணவு தயாராகிறது என்பதுதான் பிரச்னைக்கு காரணம். வெவ்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்கள் எப்படி ஒரே இடத்தில் இருந்து வரும் உணவைச் சாப்பிடுவது என்று மக்கள் கேள்வி எழுப்பினார்கள். பின்னர் இவர்களில் பலர் சிறையில் அடைபட்டபோது அவர்கள் அனைவருக்கும் ஒரே இடத்தில் சமையல் செய்யச்சொல்லி ஒருவருக்கொருவர் பரிமாற வைத்து அவர்களுக்கிடையிலான வேறுபாடுகளை மறக்கடிக்கச் செய்தார்.

 6. ஒருமுறை இயக்கத் தோழர் ஒருவரின் வீட்டுக்குச் சென்றிருந்தார் கனு சன்யால். அவர் மனைவி சோஃபியாவுக்கு கனு சன்யாலைப் பிடிக்காது என்பதால் பக்கத்து அறைக்குச் சென்றுவிடுவது வழக்கம். கடவுளே இல்லை என்று சொல்லும் கம்யூனிஸ்டுகளை எப்படி ஒரு இறைபக்தி கொண்ட கிறிஸ்தவரால் ஏற்கமுடியும்? சோஃபியா ஒரு மருத்துவர். ஓரிரவு ஒரு முஸ்லிம் வீட்டுக்கு ஓடிவந்தார். மனைவிக்குப் பிரசவ வலி, உடனே நீங்கள் வரவேண்டும் என்று சோஃபியாவிடம் விண்ணப்பித்தார். காலைதான் வரமுடியும் இப்பாது வரமுடியாது என்று சோஃபியா விடாப்பிடியாக மறுத்துவிட்டார். பக்கத்து அறையில் இருந்த கனு கதவைத் திறந்து வெளியில் வந்து கேட்டார். ஒருவேளை அன்னை மேரி இப்படி வலியால் துடித்துக்கொண்டிருந்தாலும் இதே பதிலைத்தான் சொல்வீர்களா? சோஃபியா கண்ணீர் பொங்க உடனே தன் தவறை உணர்ந்தார். கடவுளை வெறுக்கும் கனுவின் இயக்கத்திலும் சேர்ந்துகொண்டார்.

7. 1962 சீன இந்தியப் போர் கம்யூனிஸ்ட் கட்சியின் பிளவுகளை அடையாளம் காட்டியது. தேசியவாதிகள் சீனா மீதான இந்தியாவின் போரை ஆதரித்தார்கள். சர்வதேசியவாதிகள் சீனாவை ஆதரித்தார்கள். சி.பி.ஐ.யிடம் இருந்து பிரிந்து சென்று சி.பி.எம் கட்சியை உருவாக்கினார்கள். சாரு, கனு ஆகியோரைக் கொண்ட டார்ஜலிங் பிரிவு அதில் இணைந்தது. ஆனால் சி.பி.எம்.மிலும் அவர்களால் நீடிக்க முடியவில்லை. சி.பி.எம் முதல் மாநாட்டிலேயே விரிசல் தொடங்கி விட்டது. ஜோதி பாசு போன்றவர்கள் அமர்ந்திருந்த மேடையில் லெனின், ஸ்டாலின், எங்கெல்ஸ் ஆகியோரின் படங்களுக்கு அருகில் ஏன் மாவோவின் படம் இல்லை என்று கேள்வி எழுப்பினார் கனு. ஜோதி பாசுவால் விளக்கமளிக்க முடியவில்லை. மாவோவிடம் இருந்தும், சீனாவிடம் இருந்தும் விலகி நிற்க விரும்பிய சி.பி.எம்.மிடம் இருந்து கனுவும், அவருடன் இருந்தவர்களும் விலகிச் செல்ல ஆரம்பித்தார்.

 8. சி.பி.எம் தேர்தல்களில் ஆர்வம் காட்ட ஆரம்பித்ததைத் திருத்தல்வாதமாகக் கண்டார் கனு. ஆயுத பாணி புரட்சியை உண்மையான விடுதலையைப் பெற்றுத்தரும் என்று சாருவைப் போலவே அவரும் நம்பினார். அதே சமயம் சாருவைப் போல் நாளையே ஆயுதப் போராட்டத்தைத் தொடங்கவேண்டும் என்று கனு நினைக்கவில்லை. மக்களின் நம்பிக்கையை வென்று, அவர்களையும் இணைத்துக்கொண்டு சரியான தருணத்தில்தான் ஆயுதப் போராட்டத்தை நடத்தவேண்டும் என்பது கனுவின் நிலைப்பாடு. மாறாக, சிறு சிறு ஆயுதக் குழுக்களை உருவாக்கி உடனடியாகப் புரட்சியைத் தொடங்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் சாரு. இந்த நிலைப்பாடு இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாட்டை உருவாக்கியது. தனிநபர்களைத் தாக்கி அழிப்பதன்மூலம் எதையும் சாதிக்கமுடியாது, இயக்கம் பின்னடைவையே சந்திக்கும் என்று சாருவிடம் அழுத்தமாகச் சொன்னார் கனு. இருந்தும், சாருவைவிட்டு இறுதிவரை அவர் பிரியவேயில்லை.

9. நிலவுடைமையாளர்களுக்கும், விவசாயக் கூலிகளுக்கும் இடையிலான தொடர் மோதல்கள் 1967-ல் நக்சல்பாரி எழுச்சியாக வெடித்தெழுந்தது. வில், அம்பு ஏந்திய ஆதிவாசிகளையும், விவசாயிகளையும், நிலச்சுவாந்தார்கள் அடியாள் படையையும், அதிகார வர்க்கப் படையையும் கொண்டு ஒடுக்கத் தொடங்கினார்கள். கனு சன்யால் தொடர்ச்சியாக விவசாயிகள் படையை வழிநடத்தி அவர்களுக்கு உத்வேகத்தை அளித்தார். தங்களை ஒடுக்க முனைந்த காவல்துறையினரைத் தாக்கி அவர்களுடைய ஆயுதங்களைக் கைப்பற்றிக்கொள்ளும் அளவுக்கு விவசாயிகளின் ராணுவத் திறன் வளர்ந்ததற்கு கனு ஒரு முக்கியக் காரணம்.

 10. நக்சல் எழுச்சியின்போது சாரு நோய்வயப்பட்டு படுக்கையில் இருந்தார். ஆனால், அந்நிலையில் அவர் எழுதிய கட்டுரைகளும், அளித்த பேட்டிகளும், முன்வைத்த முழக்கங்களும் மேற்கு வங்கத்தைக் கடந்து பல மாநிலங்களில் ஒரு போர்ச்சூழலை உருவாக்கின. நக்சல்பாரி எழுச்சி குறித்து அறிந்துகொள்ள விரும்பிய மீடியாவால் சாருவை மட்டுமே தொடர்பு கொள்ளமுடிந்ததால் அவரே அந்த எழுச்சியின் முகமாகவும், அடையாளமாகவும் மாறிப்போனார்.  நக்சல்பாரி எழுச்சியை இந்தியப் புரட்சிக்கான தருணம் என்று தவறாகக் கணித்தார் சாரு.
 
11. நக்சல்பாரி எழுச்சியைத் தூரத்து இடி முழக்கமாகக் கண்ட சீனாவுக்குத் தன் தோழர்களுடன் ரகசியமாகச் சென்றார் கனு சன்யால். அங்கே ஒரு மாதம் தங்கியிருந்து ஆயுத பயிற்சி பெற்றுக்கொண்டார். மார்க்சிய, மாவோயிச வகுப்புகள் எடுக்கப்பட்டன. ஒருமுறை விருந்தின்போது சீன ராணுவ அதிகாரி ஒருவர் கனுவைப் பார்த்து, 'ம், நன்றாகச் சாப்பிடுங்கள், நிறையச் சாப்பிடுங்கள்’ என்று சொன்னபோது கனு எழுந்து நின்று கத்தத் தொடங்கிவிட்டார். 'இந்தியாவில் உணவில்லை என்பதால் நான் இங்கு வரவில்லை. மாவோயிசப் பாடங்கள் கற்கவே வந்திருக்கிறேன்!’ இந்த ஒரு சம்பவத்தைத் தவிர சீனா கனுவுக்கு மறக்கமுடியாத சிறந்த அனுபவங்களையே வழங்கியது. நீண்ட காலத்துக்குப் பிறகும் மாவோவைப் பார்க்க முடியாததால் ஒருமுறை அவருடைய உருவப்படத்துக்கு அருகில் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டார் கனு. இதைச் சிலர் பார்த்து சூ என் லாயிடம் சொல்ல, உடனே மாவோ கனுவை வரவழைத்துச் சந்தித்தார். அப்போது அவர் கனுவிடம் சொன்னது. 'இப்போது நீங்கள் விரிவான பயிற்சிகளை எடுத்துக்கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன். பல போர்த்தந்திரங்களையும் அரசியல் பாடங்களையும் கற்றிருப்பீர்கள். இந்தியா திரும்பியவுடன் அனைத்தையும் மறந்துவிடுங்கள். உங்கள் சூழலுக்கு ஏற்ற சரியான பாதையை நீங்களே தேர்ந்தெடுங்கள்!'

 12. சாருவுடன் இணைந்து சி.பி.ஐ எம்.எல் கட்சி தொடங்கப்பட்டது.  ஆனால், சாருவின் மரணத்தைத் தொடர்ந்து அதுவும் விரைவில் சிதைய ஆரம்பித்தது. அதற்குப் பிறகு பல அமைப்புகளில் மாறி மாறி அங்கம் வகித்தார் கனு. எதுவும் நிலைக்கவில்லை. மற்றொரு பக்கம், அவர் மீது தொடர்ச்சியாகப் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்ததால் கனு கைது செய்யப்பட்டார். அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டு, அதன் முடிவில் இந்திரா காந்தி தோற்கடிக்கப்பட்டபோது அரசியல் கைதிகள் பலர் விடுவிக்கப்பட்டனர். 1979-ம் ஆண்டு கனு சன்யால் விடுவிக்கப்பட்டார். அன்று தன் உறவினர் ஒருவரின் வீட்டுக்குச் சென்றபோது அவர்கள் தனியறையில் ஒரு நல்ல படுக்கையை அவருக்காக ஏற்பாடு செய்தனர். ஏறியவுடன் உள்ளே அமுங்கிய அந்தப் படுக்கையில் புரண்டு புரண்டு படுத்த கனுவுக்கு உறக்கமே வரவில்லை. மறுநாளே சிலிகுரிக்குக் கிளம்பிவிட்டார்.

 13. இன்னமும் சிறையில் இருந்த தன் நண்பர்கள் சிலரை விடுவிக்கக் கோரி முதல்வர் ஜோதி பாசுவை 1979-ம் ஆண்டு சந்தித்தார் கனு. அப்போது ஜோதி பாசு அவரிடம் பதிலுக்கு வேண்டுகோள் ஒன்றை முன்வைத்தார். நக்சல்பாரி எழுச்சியைத் தொடர்ந்து சாருவை சி.பி.எம் கட்சியில் இருந்து வெளியேற்றினார்கள். அப்போதுகூட நீங்கள் வெளியேற்றப்படவில்லை. உங்கள்மீது எனக்கு மதிப்பு இருக்கிறது. நீங்கள் ஏன் மீண்டும் எங்களுடன் சேரக்கூடாது? கனு அளித்த பதில் : 'அரசியலை விட்டாலும் விடுவேன். மீண்டும் சி.பி.ஐ, சி.பி.எம்.மில் சேரமாட்டேன், மன்னிக்கவும்.'

14. தொடர்ந்து சி.பி.எம். கட்சியை விமரித்து வந்தார். பல உதிரி இயக்கங்களையும் அமைப்புகளையும் ஒருங்கிணைத்து புதிய சி.பி.ஐ எம்.எல் கட்சியைத் தொடங்கி அதன்  பொதுச்செயலாளராகவும் இருந்தார் கனு. அவர் உடல்நிலை சீர்கெடத் தொடங்கியது. எந்த பணியையும் செய்ய ஒத்துழைக்காத இந்த உடலை வைத்துக்கொண்டு என்ன பலன் என்று வருந்தத் தொடங்கினார்.

 15. 23 மார்ச் 2010 அன்று மதியம் மூன்று மணிக்கு மேற்கு வங்கத்தில் உள்ள சிலிகுரியில் இருந்து 20 கி.மீ தொலைவில் அமைந்துள்ள செப்டெல்லா ஜோடே என்னும் கிராமத்தில் உள்ள மண் குடிசையில் கனு சன்யாலின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அவர் தற்கொலை செய்துகொண்டார் என்பதை இன்றளவும் அவர் கட்சி வெளிப்படையாக ஒப்புக்கொள்ளத் தயங்குகிறது. வேறு எப்படி இறந்தார் என்னும் கேள்விக்கு அவர்களிடம் திருப்திகரமான பதில் இல்லை.

மேலதிக விவரங்களுக்கு :  The First Naxal, Bappaditya Paul, Sage Publications.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close