Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அஞ்ஞான இருளை நீக்கி, மெய்ஞான ஒளியைப் பரப்பும் கார்த்திகை தீபம்!

மிழர்களால் பல்லாயிரம் ஆண்டுகளாக கொண்டாடப்பட்டுவரும் கார்த்திகை தீபத்திருநாள் மிகவும் தொன்மை வாய்ந்த திருநாள்.

கார்த்திகை மாத பௌர்ணமி நாளும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்துவருவதால், இம்மாதம் கார்த்திகை எனப் பெயர் பெற்றது. தமிழ் இலக்கியங்களிலும், சங்க இலக்கியங்களிலும் கார்த்திகை தீபத்தைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.

திருக்கார்த்திகை நாள்,  தமிழர்கள் தமது இல்லங்களிலும், கோயில்களிலும் பிரகாசமான தீபங்களை ஏற்றி மகிழ்ச்சியாகக் கொண்டாடும் ஒரு தீபத் திருநாள் ஆகும்.

படைத்தல் தொழிலைச் செய்யும் பிரம்மனுக்கும், காத்தல் தொழிலைச் செய்யும் விஷ்ணுவுக்கும் இடையே யார் பெரியவன் என்ற போர் பல வருடங்களாக நடந்துவந்தது. இவர்களின் கர்வத்தை அடக்க எண்ணிய சிவபெருமான், இவர்கள் முன் ஜோதிப்பிழம்பாகத் தோன்றினார். அடியையும், முடியையும் தேடும்படி அசரீரி கூறியதை அடுத்து, ஜோதியின் முடியைக் காண அன்னப் பறவை வடிவங்கொண்டு, சதுரமுகப் பிரம்மன் விண்ணுலகம் சுற்றினார். அடியைக் காண திருமால், வராஹ அவதாரம் எடுத்து பாதாள லோகம் சென்று, அடிமலரடியைத் தேடினார்.

அடி, முடி காணமுடியாத பரம்பொருளாக விளங்கினார் எம்பெருமான். அதனால் இருவரும் சிவபெருமானே முழுமுதற் கடவுள் என்று ஏற்றுக்கொண்டனர். அவர்கள் இருவரும் தாம் கண்ட ஜோதியை, எல்லோரும் காணும்படி காட்சியருள வேண்ட,  சிவபெருமான் திருக்கார்த்திகை நட்சத்திரத்தன்று ஜோதிப்பிழம்பாக காட்சியருளினார்.

இந்தத் தத்துவமே கார்த்திகை தீப விளக்குகளில் ஜோதி காண்பது. அந்த அக்னி ரூபனை, திருவண்ணாமலையில் ஏறத்தாழ மூவாயிரம் அடி உயரத்தில் உள்ள மலைமேல், திருக்கார்த்திகை நட்சத்திரத்தன்று காணலாம்.

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம்

மலை மீது காணப்படும் பெரும் செப்புக் கொப்பரையில், இருபத்து நான்கு முழம் துணி திரியாகப் போடப்படும். ஒரு மணங்கு கற்பூரத் தூள் சேர்த்துத் திரி சுற்றப்பட்டிருக்கும். இருபது மணங்கு நெய் ஊற்றி தீபத்தை ஏற்றுவார்கள். இந்த ஜோதியானது பல மைல்களுக்கு அப்பால், செந்நிறமாக பல நாட்கள் ஒளி வீசும்.

மலையில் தீபம் ஏற்றப்பட்டதும் மக்கள்,  "அண்ணாமலையானுக்கு அரோகரா...'' என விண்ணதிர முழக்கமிடுவார்கள். குன்றின் சிகரத்தில்  ஏற்றப்படும் ஜோதியானது, உலகம் முழுதும் உள்ள அஞ்ஞான இருளை நீக்கி, மெய்ஞான ஒளியைப் பரப்புவதாக ஐதீகம்.

மற்ற இடங்களில் தீபம்:

இந்த ஜோதியின் காரணமாகத்தான் மற்ற இடங்களில் சொக்கப்பனை கொளுத்தும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தீபம் ஏற்றி வழிபட முடியாத சிவ, விஷ்ணு ஆலயங்களின் முன்புறத்தே வாழை மரம் நட்டு,  தென்னோலைகளால் அதனை சுற்றி அடைத்து,  ‘சொக்கப்பனை’க்கு அக்கினியிட்டு ஜோதி வடிவாகக் காட்சியளிக்கச் செய்து, சிவபெருமான் ஜோதிப்பிழம்பாகத் தோன்றிய காட்சியை நினைவுகூர்ந்து வழிபடுவர். சொக்கப்பனாகிய சிவனை ஒளி வடிவாகக் காண்பிப்பதால் இது சொக்கப்பனை எனப் பெயர் பெற்றது.

முருக பெருமான் அவதரித்த திருநாள்:


இத்திருநாள், முருகக்கடவுள் அவதரித்த தினமாகவும் கொண்டாடப்படுகிறது. பெரும்பாலானோர் காலை முதல் விரதமிருந்து, மாலை பூஜை முடிந்தபின்னர், அகல் விளக்கேற்றி வரிசையாக வாசல் தொடங்கி வீடு முழுவதும் வைப்பார்கள். இதுதான் தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாகும்.

- உ. சௌம்யா

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close